தமிழ்நாடு

நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு யூகத்தில் அமைக்கப்பட்டதா? - ஆளுநரின் கருத்துக்கு வரி வரியாக முதலமைச்சர் பதிலடி!

நீட் குறித்து ஆராய்வதற்காக தமிழக அரசால் அமைக்கப்பட்ட நீதியரசர் ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை யூகங்களின் அடிப்படையிலானது என ஆளுநர் தெரிவித்துள்ளதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்

நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு யூகத்தில் அமைக்கப்பட்டதா? - ஆளுநரின் கருத்துக்கு வரி வரியாக முதலமைச்சர் பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு நிறைவேற்றிய சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் 142 நாட்களாக ஆளுநர் மாளிகையிலேயே வைத்திருந்துவிட்டு அதனை தமிழ்நாடு அரசுக்கே திருப்பியனுப்பிய விவகாரம் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

இதனையடுத்து மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்ற தமிழ்நாடு அரசின் சிறப்பு சட்டமன்றக் கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நீட் விலக்கு மசோதாவை தாக்கல் செய்தார். அதன் பிறகு மசோதா மீதான விவாதங்கள் நடைபெற்றது.

அப்போது நீட் விலக்கு மசோதா குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவியின் கடிதத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அதன் விவரம்:-

”நீட் தேர்வு குறித்து ஆராய்வதற்காக தமிழக அரசால் அமைக்கப்பட்ட நீதியரசர் ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை யூகங்களின் அடிப்படையிலானது என்று தெரிவித்துள்ளார் ஆளுநர்.

அரசாணை எண்.283, மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத் துறை, நாள் 10.6.2021 அன்று நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் பல்வேறு கல்வியாளர்கள் மற்றும் அதிகாரிகள் இடம் பெற்று இருந்தார்கள். இந்த உயர்மட்டக் குழுவின் ஆய்வு வரம்புகளும் வெளியிடப்பட்டது. பொதுமக்கள் அனைவரிடம் இருந்தும் கருத்துக்களை இக்குழு கேட்டுப் பெற்றது.

மின் அஞ்சல், தபால் மற்றும் ஆணையத்தில் வைக்கப்பட்டிருந்த கருத்துக்கேட்பு பெட்டியில் போடப்பட்ட மனுக்கள் என ஆணையத்துக்கு பல்லாயிரக்கணக்கானவர்கள் தங்களது கருத்துக்களை வழங்கியிருந்தார்கள். இந்த வழிமுறைகளின் வாயிலாக 86 ஆயிரத்து 342 பேர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களை ஆராய்ந்து தனது விரிவான பரிந்துரைகளை நீதியரசர் ஏ.கே. இராஜன் குழு அரசுக்கு 14.7.2021 அன்று அளித்தது.

அதாவது தனிப்பட்ட சிலரின் யூகங்களின் அடிப்படையில் அல்ல, சுமார் ஒரு லட்சம் பேரின் கருத்துக்களைக் கேட்டுப் பெற்று இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த பரிந்துரைகளில் சமுதாயத்தில் பின்தங்கியோர் மருத்துவக்கல்வியைப் பெறும் கனவிற்கு இடையூறாகவும் சமூகப் பொருளாதாரத்தில் வளமிகுந்த பிரிவினருக்கு சாதகமாகவும் இருந்து, எம்.பி.பி.எஸ் மற்றும் உயர் மருத்துவப் படிப்புகளிலுள்ள பலதரப்பட்ட சமூகப் பிரதிநிதித்துவத்தை நீட் தேர்வானது குறைத்துள்ளது என தெரிவித்துள்ளது. இதுவும் யூகம் அல்ல. இதற்கான புள்ளி விபரமும் அந்த அறிக்கையில் விரிவாக உள்ளது.

அரசுப் பள்ளியின் மாணவர்கள், பெற்றோரின் ஆண்டு வருமானம் 2.5 இலட்சத்திற்கும் குறைவாக கொண்டுள்ளவர்கள், மிகப் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் போன்ற பிரிவுகளைச் சேர்ந்த வசதி குறைந்தவர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் இந்த அறிக்கையில் உள்ளது. இதுவும் யூகமாக அல்ல, புள்ளிவிபரங்களோடு உள்ளது.

இதுவரை தேர்வானவர்களில் கிராமப்புற ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அரசு பள்ளியில் தமிழ் வழியில் பயின்றவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் இந்த அறிக்கை சொல்கிறது.

தமிழக அரசால் வழங்கப்படும் 7.5 சதவிகித இடஒதுக்கீட்டில் இடம் பெற்றவர்களையும் நீட் தேர்வால் பலன் பெற்றவர்கள் என்று யாரும் தவறாகக் கணக்கிட்டுக் கொள்ளக் கூடாது என்றும் நான் இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

இயற்பியல், வேதியியல், உயிரியல் தேர்வு திறன் குறித்து இந்த அறிக்கையில் இல்லை என்று ஆளுநர் அவர்கள் கூறி இருக்கிறார்கள். பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு எழுதும் அறிவியல் பிரிவு மாணவர்கள் அனைவருமே இந்த மூன்று பாடங்களையும் படிக்கிறார்கள். எனவே இம்மூன்று பாடங்களில் தேர்ந்தவர்கள் தான் பன்னிரெண்டாம் வகுப்பில் உயர்ந்த இடங்களைப் பெறுகிறார்கள்.அதனால் தான் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்ணே போதுமானது என்று நாங்கள் சொல்கிறோம். இன்னொரு தேர்வு தேவையில்லை என்கிறோம்.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories