தமிழ்நாடு

ஒகேனக்கல் 2வது குடிநீர் திட்டம் - இது எந்தவிதமான மனிதாபிமானம்.. கர்நாடக அமைச்சருக்கு துரைமுருகன் பதிலடி!

ஒகேனக்கல் 2வது குடிநீர் திட்டம் குறித்து கர்நாடக அமைச்சருக்கு, அமைச்சர் தரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார்.

ஒகேனக்கல் 2வது குடிநீர் திட்டம் - இது எந்தவிதமான மனிதாபிமானம்.. கர்நாடக அமைச்சருக்கு துரைமுருகன் பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் ஒகேனக்கல் 2வது குடிநீர் திட்டம் தொடங்குவதற்கான உரிமை தமிழ்நாட்டிற்கு உண்டு என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

ஒகேனக்கல் இரண்டாவது குடிநீர் திட்டத்தை ரூ.4,600 கோடி மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்படும் என்ற ஓர் அறிவிப்பைக் கண்டு கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் வெகுண்டெழுந்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ஒகேனக்கல் இரண்டாவது குடிநீர் திட்டத்தை செயல்பட விடமாட்டோம் என்று ஓர் அறிவிப்பை செய்திருக்கிறார். குடிநீர் தேவைக்கு தண்ணீர் தரமாட்டோம் என்று சொல்வது எந்தவிதமான மனிதாபிமானம் என்று தெரியவில்லை. மனிதாபிமான அடிப்படையிலும் சரி சட்டபூர்வமான அடிப்படையிலும் சரி தமிழகத்துக்கு ஒகேனக்கல் இரண்டாவது குடிநீர் திட்டத்தை ஆரம்பிக்கின்ற உரிமை உண்டு.

கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் கோவிந்த் கார்ஜோள்

கர்நாடக நீர்வளத்துறை அமைச்சருக்கு ஞாபகம் இருக்கும் என்று கருதுகிறேன். காவிரி நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பை வழங்குகிறபொழுது, முதலில் காவிரி பாயும் மாநிலங்களில் ஒவ்வொரு மாநிலமும் காவிரி பாசன பகுதி எவ்வளவு என்று கணக்கிட்டு அதற்குரிய விகிதாச்சார அடிப்படையில் தண்ணீரை பகிர்ந்தளித்தார்கள். அடுத்ததாக, காவிரி நதி நீர் ஆணையம் 5.2.2007 அன்று அளித்த இறுதி தீர்ப்பில் நிகர குடிநீர் தேவைக்காக (Consumptive Use) 2.2 டி.எம்.சி நீர் ஒதுக்கியுள்ளது.

அதாவது, சுமார் 11 டிஎம்சி காவிரி நீரிலிருந்து குடிநீருக்காக எடுத்துக் கொள்ள அனுமதி அளித்துள்ளது. இப்படி, அனைத்துப் பங்களிப்பும் முடிந்து பிறகும் எஞ்சிய நீர்ப்பங்கீட்டின் கீழ் (Balance Water After Considering The Permitted irrigation Scheme) 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நமக்கு கிடைத்தது 25.71 டி.எம்.சி. 16.2.2018 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மூலம், காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதித் தீர்ப்பை உறுதி செய்திருக்கிறது. மேலும், இந்திய மற்றும் தமிழகத்தின் நீர்வளக் கொள்கைகளின்படி குடிநீர் தேவைக்குதான் முதலிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இறுதி தீர்ப்பு Clause 18-ன்படி இம்மாதிரியான அத்தியாவசிய தேவைகளுக்கு நீரை உபயோகப்படுத்திக் கொள்ள உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. ஆக, எப்படி பார்த்தாலும், காவிரி-ஒகேனக்கல் இரண்டாவது குடிநீர் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும். இறுதியாக ஒன்று, வீட்டுப் பயன்பாடு, உள்ளாட்சிப் பயன்பாட்டு விநியோகம், தொழில்சார் விநியோகம் என்பன போன்ற காரணங்களுக்காக ஒரு மாநிலத்தால் எந்தவொரு நீர்த்தேக்கத்திலிருந்து நீர் திருப்பிவிடப்பட்டாலும், அது அந்த நீராண்டல் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் பயன்பாட்டுக் கணக்கில்தான் சேர்க்கப்படும் என்பது காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் முடிவாகும்.

இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories