தமிழ்நாடு

“தகுதி - திறமை மோசடியை அம்பலப்படுத்தியுள்ளது உச்சநீதிமன்ற தீர்ப்பு” : ஆசிரியர் கி.வீரமணி பாராட்டு!

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகளைப் பாராட்டுகிறோம், பாராட்டுகிறோம் என்று ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

“தகுதி - திறமை மோசடியை அம்பலப்படுத்தியுள்ளது உச்சநீதிமன்ற தீர்ப்பு” : ஆசிரியர் கி.வீரமணி பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

‘‘இட ஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத் தீர்ப்புரை - திராவிடர் இயக்கமும், தந்தை பெரியாரும் கூறி வந்த சமூகநீதிக் கருத்துகளே! வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இத்தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகளைப் பாராட்டுகிறோம், பாராட்டுகிறோம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

மருத்துவப் படிப்புக்கான மத்தியத் தொகுப்புக்கு மாநிலங்கள் வழங்கிவரும் பட்டப் படிப்பிற்கான 15 சதவிகித இடங்களும், மேற்பட்ட படிப்புக்கான 50 சதவிகித இடங்களும் வழங்கப்படுவதில் தொடக்கத்தில் இடஒதுக்கீடே பின்பற்றப்படாமல் அத்துணை இடங்களும் முன்னேறிய ஜாதிக்காரர்களே ‘தகுதி-திறமை' அடிப்படை என்ற போர்வையில் ஏகபோகமாக அனுபவித்து வந்தார்கள்!

பிறகு ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் ஒருவர் (எஸ்.சி.,) உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டு பெற்ற தீர்ப்பின்படி எஸ்.சி., எஸ்.டி., ஆகிய பிரிவினர் மட்டும் இடம் பெற்றனர்.

27 சதவிகித இடஒதுக்கீடு அறவே மறுக்கப்பட்டது

பிற்படுத்தப்பட்டவர்களுக்கான மண்டல் தீர்ப்புப்படியும், அரசமைப்புச் சட்டத்தின் தீர்ப்புகளின்படியும், கிடைக்க வேண்டிய 27 சதவிகித இடஒதுக்கீடு அறவே மறுக்கப்பட்டது.

இதுகுறித்து திராவிடர் கழகம்தான் முதன்முதலில் O.B.C. களுக்கு பூஜ்ஜியம் இடம் தானா? என்ற கேள்வியை எழுப்பி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் வேண்டுகோள் விடுத்தோம்.

எதிர்க்கட்சியான திமுகவின் தலைமையில் அனைத்து முற்போக்கு அணியினரும் உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டார்கள்.

ஒன்றிய அரசு காலதாமதம் செய்தது உலகறிந்த செய்தியே!

திராவிடர் கழகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டோம். உச்சநீதிமன்றம், ‘உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு பிறகு, தேவையானால் இங்கு வாருங்கள்' என்று கூறிய பிறகு, தி.மு.க மற்ற கட்சிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் வழக்குத் தாக்கலாகி, விசாரணைகள் நடைபெற்றது. ஒன்றிய அரசின் சுகாதாரத் துறை பல்வேறு சால்ஜாப்புகளையும், விசித்திர காரணங்களையும் கூறி காலந்தாழ்த்தி வந்தது. வழக்குப் போட்ட திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் மற்ற அனைத்து கட்சிகளுக்கும் உயர்நீதிமன்றத் தீர்ப்பு சாதகமாக வந்ததோடு, அந்த ஆண்டே 27 சதவிகித இட ஒதுக்கீட்டை செயல்படுத்த முடியுமா? என்று பரிசீலிக்கவும் ஆணையிட்டது. அடுத்த ஆண்டு முடியும் என்று ஒன்றிய அரசு வழக்குரைஞர் கூறினார்.

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு ஒரு குழு போட்டு மூன்று மாதத்திற்குள் பரிசீலிக்க ஆணையிட்டது. அதற்கும் ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை அலட்சியம் காட்டியே வந்தது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், உச்சநீதிமன்றம் ஆணையிட்டும் OBC இடஒதுக்கீடு இந்தாண்டு தராதது நீதிமன்ற அவமதிப்பு ஆகும் என்பதை வற்புறுத்த, அதை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்று, கடுமையாகக் கூறியவுடன், OBC -க்கு 27 சதவிகிதம் தருவதாக வாக்களித்த நிலையில், திடீரென்று புகுத்தப்பட்ட உயர்ஜாதி ஏழைகளுக்கு ஒதுக்கப்பட்ட 10 சதவிகித இடஒதுக்கீட்டையும் இத்துடன் இணைத்து ஒன்றிய அரசு காலதாமதம் செய்தது உலகறிந்த செய்தியே!

இதனால் காலதாமதம் ஆன நிலையில், சென்ற ஆண்டு முடிவுகளை வெளியிட்டு, இடஒதுக்கீடு செய்ய இயலாத நிலை நீடித்ததினால் மருத்துவ மாணவர்கள் ஏக்கமும், கரோனா காலத்தில் மருத்துவர்கள் தேவையின் தேக்கமும் நிர்ப்பந்தித்தன.

நீதிபதிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

இந்த நிலையில் அவசர வழக்காக ஜஸ்டீஸ் டி.ஒய்.சந்திரசூட், ஜஸ்டீஸ் ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் தலைமையில் அமைந்த அமர்வு கடந்த வாரம் வழங்கிய தீர்ப்பில் விரிவான தீர்ப்பாக தராமல் Operative Portion முடிவுகள் பற்றிய அம்சத்தைத் தந்தது. பிறகு தெளிவாக 70 பக்க தீர்ப்பும் வெளிவந்ததில், இது வரலாற்றுப் பெருமைக்குரிய தனித்தன்மை வாய்ந்த (Landmark Judgement) தீர்ப்பாகவும், சமூகநீதி வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறித்து பெருமைப்படத் தக்கதாகவும், சமூகநீதியை இதற்குமுன் - அரசமைப்புச் சட்ட கர்த்தாக்களின் நோக்கத்தையே புறந்தள்ளும் அளவுக்குத் தந்த தவறான விளக்கத்தினை மாற்றி, அரசமைப்புச் சட்டத்தின் சமூகநீதியை அப்படியே பிரதிபலித்துள்ளதற்கு நீதிபதிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இத்தீர்ப்பில் ஜஸ்டீஸ் சந்திரசூட் அவர்கள் தந்துள்ள விளக்கம் இதற்குமுன் சமூகநீதி - இடஒதுக்கீடுபற்றி கூறப்பட்ட பல தீர்ப்புகளின் மயக்க வாதத்தை - புரட்டிப்போட்டு, அடியில் தள்ளப்பட்ட உண்மையை மேலே கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

வெறும் மதிப்பெண் அடிப்படை என்பது தான் ‘தகுதி-திறமை' (merit and efficiency) என்பது அல்ல - என்பதை மாண்பமை நீதிபதிகள் சரியாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்!

சமூகநீதிப் போராளிகள் சுட்டிக்காட்டியதுதான்

1917 இல் திராவிடர் இயக்கம் - சர்.பிட்டி தியாகராயர், டாக்டர் நாயர், டாக்டர் சி.நடேசனார் ஆகியோரும் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், கல்வி வள்ளல் காமராசர் போன்ற அத்துணை சமூகநீதிப் போராளிகளும், அதற்கு முன் மராத்தியத்தின் ஜோதிபாபூலே, சாகு மகராஜ் (கோல்காப்பூர் மன்னர்) முதலிய பலரும் சுட்டிக்காட்டியதுதான் இந்தத் 'தகுதி- திறமை' மோசடி!

‘தகுதி-திறமை' என்ற சூழ்ச்சி ஆயுதத்தையே உழைக்கும் சூத்திரர், பஞ்சமர், பெண்களுக்கு விரோதமாகப் பயன்படுத்தி, இந்திய நாட்டில் மக்கள் தொகையின் சரிபகுதிக்கு மேற்பட்டவர்களை கல்வியறிவு அற்றவர்களாக்கி, உடலுழைப்பாளர்களைக் கீழிறக்கத்திற்கு ஆளாக்கியதுதான் பெரிய சமூக அநீதியாகும்.

முன்னேறியவர்களுடன் போட்டி - சம போட்டியாக இருக்க முடியுமா?

அதைவிடப் பெரும் சமூகஅநீதி கல்வியை (அக்காலத்தில் வேதமோதுதல்) காதால் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும். மீறிப் படித்தால் நாவை அறுக்க வேண்டும் என்று எழுதி வைத்த, முன்னேறிய சமூகமே காலங்காலமாய் படித்து விட்ட நிலையில், இப்போது படிக்க வருபவர்களும் முன்னேறியவர்களுடன் போட்டி - சம போட்டியாக இருக்க முடியுமா?

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தெளிவான தீர்ப்பு

தோல்வி அடைபவர்களுக்குத் “தகுதி இல்லை”, “திறமை இல்லை” என்று கூறி அவர்களுக்கு மறுப்பது நியாயமில்லை என்பதை இத்தீர்ப்பு தெளிவாக சுட்டிக்காட்டுகிறது;

“Merit cannot be reduced to narrow definitions of performance in an open competitive examination which only provides formal equality of opportunity. Competitive examinations assess basic current competency to allocate educational resources but are not reflective of excellence, capabilities and potential of an individual which are also shaped by lived experiences, subsequent training and individual character. Crucially, open competitive examinations do not reflect the social, economic and cultural advantage that accrues to certain classes and contributes to their success in such examinations;”

இதன் தமிழாக்கம் வருமாறு:

இட ஒதுக்கீட்டு வழிமுறையில், 'திறந்த போட்டியிலான ஒதுக்கீடு மட்டும்தான் சம வாய்ப்பினை வழங்குகிறது' எனும் குறுகிய விளக்கத்தினால், ‘தகுதி-திறமை' என்பது சுருங்கிவிடக் கூடாது. போட்டிக்கான தேர்வுகள் என்பது நடைமுறையில் கல்வி பயிலும் இடங்களுக்குப் போட்டியாளர்களைத் தெரிவு செய்வதாக மட்டுமே உள்ளது; வாழும் சூழல் அனுபவங்கள், அதை ஒட்டிய பயிற்சிகள், தனிப்பட்ட குணநலன்கள் என ஒருவரிடம் உள்ள சிறப்புத் தன்மைகளை வினை முடித்திடும் ஆற்றலை கருத்தில் கொள்வதாக இல்லை. குறிப்பிட்ட சில (ஒடுக்கப்பட்ட) வகுப்பினருக்குள்ள சமூக, பொருளாதார பண்பாட்டு அடிப்படை அனுகூலங்களால் அவர்கள் போட்டித் தேர்வில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பினை போட்டித் தேர்வுகள் பிரதிபலிக்கவில்லை; வழங்கிடவும் இல்லை.

''High scores in an examination are not a proxy for merit. Merit should be socially contextualized and reconceptualized as an instrument that advances social goods like equality that we as a society value. In such a context, reservation is not at odds with merit but furthers its distributive consequences, the Bench said.''

இதன் தமிழாக்கம் வருமாறு:

''ஒரு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிடுவதாலேயே தகுதி - திறமையின் அடையாளம் என அதை கருதிட முடியாது. சமூகத்தை - சமூகச் சூழலை தொடர்புபடுத்தி, தொடர்ந்து தொடர்புபடுத்தியே ‘தகுதி - திறமை' கணக்கிடப்படவேண்டும். அத்தகைய அணுகுமுறையே சமூக முன்னேற்றத்திற்கும், சமத்துவத்திற்குமான உயர்மதிப்பாகக் கருதப்படவேண்டும். இத்தகைய போக்கில், இட ஒதுக்கீடு என்பது, தகுதி - திறமைக்கான முரண்பாடாக இல்லாமல், அனைவருக்கும் பங்கீட்டு (பிரதிநிதித்துவ) விளைவுகளை ஏற்படுத்திடும் வழிமுறையாகவே உள்ளது என நீதிமன்ற அமர்வு கூறுகிறது.

மேலே கூறிய கருத்துகள் திராவிடர் இயக்கம் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து சமூகநீதிப் போராட்டத்தில் கூறிவரும் கருத்து, உச்சநீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் அரசமைப்புச் சட்டத்தின் 15(4) என்ற கூறு, 15 ஆவது விதிக்கு விலக்கு அல்ல. அதன் தத்துவத்திற்கு வலு சேர்ப்பது என்பதை வலியுறுத்தியுள்ளது.

தகுதி, திறமை மோசடியை அம்பலப்படுத்தி தீர்ப்பு வழங்கிய நீதியரசர்களைப் பாராட்டி வாழ்த்துகிறோம்!

உச்சநீதிமன்ற வரலாற்றில், ஆந்திராவிலிருந்து சென்று பல ஆண்டுகள் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த ஜஸ்டீஸ் கே.இராமசாமி அவர்கள் இந்தத் ‘தகுதி-திறமை' மோசடியை ஓங்கி மண்டையில் அடித்த பிறகு வந்த இரண்டாவது மகத்தான தீர்ப்பு - ‘தகுதி-திறமை' மோசடியை அம்பலப்படுத்தி இத்தீர்ப்பினை வழங்கிய நீதியரசர்களைப் பாராட்டி வாழ்த்துகிறோம்!

banner

Related Stories

Related Stories