தமிழ்நாடு

“பிரதமருக்கு தெரிந்த வீரமங்கையை அதிகாரிகளுக்கு தெரியாதா?” : தமிழக ஊர்தியை நிராகரித்ததால் பெரும் சர்ச்சை!

வீரமங்கை வேலுநாச்சியாரின் பிறந்தநாளன்று அவரை நினைவுகூர்ந்து பிரதமர் மோடி ட்வீட் செய்த நிலையில் தற்போது ஒன்றிய அரசு வேலுநாச்சியாரை பரவலாக தெரியாது என காரணம் கூறி தமிழ்நாட்டின் ஊர்தியை நிராகரித்துள்ளது.

“பிரதமருக்கு தெரிந்த வீரமங்கையை அதிகாரிகளுக்கு தெரியாதா?” : தமிழக ஊர்தியை நிராகரித்ததால் பெரும் சர்ச்சை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் சார்பில் பங்குபெறவிருந்த அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் ஆண்டுதோறும் குடியரசு தின விழாவையொட்டி ஜனவரி 26-ஆம் தேதி அணிவகுப்பு நடைபெறும். இந்த நிகழ்வில் நாட்டிலுள்ள ஒவ்வொரு மாநிலங்களும், அந்தந்த மாநிலங்களின் பண்பாடு, கலாசாரத்தை பறைசாற்றும் விதமாக அலங்கார ஊர்திகளை வடிவமைத்து அணிவகுப்பில் பங்கேற்கும்.

இந்தாண்டு டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் கலந்துகொள்ள தமிழ்நாடு அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட அலங்கார ஊர்தியில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, வீரமங்கை வேலுநாச்சியார், மகாகவி பாரதியார் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் உருவப்படங்கள் அடங்கியிருந்தன.

தமிழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட ஊர்திகள் ஒன்றிய அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளன. கொடுக்கப்பட்ட ஊர்திகளில் உள்ள உருவப்படங்களில் பாரதியாரை மட்டுமே தங்களுக்கு தெரிவதாகவும், உலகத் தலைவர்களுக்கு வ.உ.சி, வேலுநாச்சியார் ஆகிய தலைவர்களைத் தெரியாது என்றும் மிகவும் பிரபலமான சுதந்திரப் போராட்ட வீரர்கள் அடங்கிய ஊர்திகளை மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும் எனவும் ஒன்றிய அரசு தரப்பில் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

குடியரசு தின அணிவகுப்பு ஊர்திகளில் தென்மாநிலங்களில் கர்நாடக மாநிலத்தின் ஊர்திகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், கடந்த ஜனவரி 3ஆம் தேதியன்று பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் வரும் வேலு நாச்சியாரின் பிறந்தநாளன்று அவரை நினைவுகூர்ந்து தமிழில் ட்வீட்டுகளை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

அதைக் குறிப்பிட்டு பலரும், பிரதமருக்கு தெரிந்த சுதந்திரப் போராட்ட வீராங்கனையின் பெயர், ஒன்றிய அரசின் அதிகாரிகளுக்குத் தெரியாதா எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். ஒன்றிய அரசின் இந்த செயலுக்கு தி.மு.க நாடாளுமன்றக் குழு துணைத் தலைவர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “குடியரசு தின விழாவிற்காக வடிவமைக்கப்பட்ட தமிழகத்தின் அலங்கார ஊர்தியை நிராகரித்த ஒன்றிய அரசின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. வீரமங்கை வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., பாரதியார் போன்றோரின் தியாகங்கள் தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் கலந்திருக்கிறது.

இவர்களை பற்றிய ஒன்றிய அரசின் அறியாமை ஒட்டுமொத்த தமிழகத்தை அவமதிக்கும் விதத்தில் இருக்கிறது. இந்தியா என்பது அனைவருக்குமானது, வடமாநிலங்களால் மட்டும் ஆனது கிடையாது. ஒன்றிய அரசு உடனடியாக இந்த ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும். ” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories