மு.க.ஸ்டாலின்

"மக்களை பலி கொடுக்கும் எந்தத் திட்டத்திற்கும் அனுமதியில்லை" : "The Hindu' பேட்டியில் முதல்வர் உறுதி!

"மக்களை பலி கொடுக்கும் எந்தத் திட்டத்திற்கும் அனுமதியில்லை" என "The Hindu' பேட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

"மக்களை பலி கொடுக்கும் எந்தத் திட்டத்திற்கும் அனுமதியில்லை" : "The Hindu' பேட்டியில் முதல்வர் உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“சமூக நீதியுடன் இணைந்த சமத்துவப் பொருளாதார வளர்ச்சியே எமது குறிக்கோள்” என்று ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டிற்கு அளித்த பேட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

அவரது பேட்டியின் முதல் பாகம் : “அடுத்தமுறையும் ஆட்சியை மக்கள் எங்களிடம் ஒப்படைக்கும் வகையில் செயல்படுவோம்”

இரண்டாவது பாகம் வருமாறு:

சட்டம் - ஒழுங்கில் சமரசமின்றி நடவடிக்கை!

செய்தியாளர்: காஞ்சிபுரம் மற்றும் செங்கற்பட்டு மாவட்டங்களில் பல தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. சமூக விரோத சக்திகள் இந்நிறுவனங்களுக்கு நெருக்கடி கொடுத்து வருவதாகக் கூறப்படுவதால் அரசு சட்டம் ஒழுங்கைப் பாராமரிக்க தனிக்கவனம் செலுத்த வேண்டியுள்ளதா?

முதல்வர் மு.க.ஸ்டாலின்: தமிழ்நாடு முழுவதுமே சட்டம்- ஒழுங்கை எந்தவித சமரசமுமின்றி பராமரிப்பதிலும், தனிநபர் பாதுகாப்பு, நிறுவனங்களின் பாதுகாப்பு, தொழில் அமைதி ஆகியவற்றை உறுதிசெய்வதிலும் இந்த அரசு 100 விழுக்காடு முனைப்புடன் செயல்படுகிறது. தொழில் நிறுவனங்கள் அதிகமாகச் செயல்படும் மாவட்டங்களில் சமூக விரோத சக்திகளின் நெருக்கடிகள் குறித்து வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, தொழிலகங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் இதுகுறித்து ஏற்கனவே அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளனர்.

அச்சமற்ற சுமுகமான சூழலில் தொழிற்சாலைகள் இயங்க முடியும். தலைவர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட ஹூண்டாய் தொழிற்சாலை தனது கால் நூற்றாண்டு கால தொடர்ச்சியான செயல்பாட்டில் உற்பத்தி செய்த 1 கோடியாவது காரை நான் அறிமுகப்படுத்தி வைக்கும் வாய்ப்பு அமைந்தது. அந்த நிறுவனம் போல மேலும் பல நிறுவனங்களும் தொடர்ந்து பாதுகாப்புடன் வெற்றிகரமாக செயல்படுகின்றன. நிறுவனங்களின் பாதுகாப்பு மட்டுமின்றி,

தொழிலாளர்களின் நல்லுறவு மற்றும் பாதுகாப்பிலும் இந்த அரசு முழுமையான அக்கறை கொண்டுள்ளது. அண்மையில் தொழிலாளர்களுக்கு சிறிது அச்சம் ஏற்பட்டு, மறியல் போராட்டத்தை நடத்தியபோது, மாவட்ட ஆட்சித்தலைவர், காவல்துறைக் கண்காணிப்பாளர் மட்டுமின்றி, ஊரகத் தொழில்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆகியோரும் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று, தொழிலாளர்களின் அச்சத்தைப் போக்கினர். தொழிலாளர்களின் பாதுகாப்புக்கான தொலைநோக்குத் திட்டங்களும் மேற்கொள்ளப்படுகின்றன.

மக்களை பலி கொடுக்கும் எந்தத் திட்டத்திற்கும் அனுமதியில்லை!

செய்தியாளர்: ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிரான போராட்டம், ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி மறுப்பு போன்ற விசயங்கள் தமிழகத்தில் முதலீட்டைப் பாதித்திருக்கிறதா? அப்படியிருந்தால் அதை சரி செய்யநீங்கள் முன் வைக்கும் திட்டம் என்ன?

முதல்வர் மு.க.ஸ்டாலின்: சூழலியல் பாதிக்கப்படாத - மக்கள் முழு மனதோடு ஏற்கும் வகையிலான தொழில் முன்னேற்றம் என்பது இந்த அரசின் கொள்கை. சூழலியலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய தொழில் நிறுவனங்கள் மக்களின் உயிருக்கும் உடல் நலத்துக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியவை என்பதால் அவற்றுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது பொதுமக்களின் வழக்கமாக உள்ளது. எங்கள் அரசைப் பொறுத்தவரை, மக்களைப் பணயம் வைத்து பலி கொடுக்கும் எந்தத் திட்டத்தையும் அனுமதிப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதே நேரத்தில், தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றம் சார்ந்த உற்பத்தி, தமிழ்நாட்டு மக்களுக்கான வேலைவாய்ப்பு இவற்றை அடிப்படையாகக் கொண்ட தொழிற்சாலைகளுக்கும் அதற்கான முதலீட்டிற்கும் உரிய அனுமதிகள் தங்கு தடையின்றி வழங்கப்படும். மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மக்கள் நலனும்- பாதுகாப்பும், முதலீடும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளாத வகையிலான திட்டங்களை ஊக்கப்படுத்தி, மேற்கொள்வோம்.

செய்தியாளர்: தமிழகத்தில் முதலீட்டாளர்களை வரவேற்க நீங்கள் அளிக்கும் செய்தி என்ன?

முதல்வர் மு.க.ஸ்டாலின்: பார் போற்றும் பழம்பெரும் பண்பாட்டின் முகவரியாக விளங்கும் தமிழ்நாடு, தற்போது முதலீட்டாளர்களின் பயனுள்ள முகவரியாகவும் மாறியிருக்கிறது. அதற்கான தொடக்கநிலைக் கட்டமைப்புகளை எங்கள் அரசு உருவாக்கியுள்ளது. உலக அளவில் உற்பத்தித்துறை பாதிக்கப்பட்டிருந்தாலும் தமிழ்நாட்டில் தொழில்துறை தேவையான புத்துணர்வைப் பெற்றுள்ளது. தொழில் முதலீடு- முன்னேற்றம் ஆகியவற்றுக்கான சூழல்களை எளிமையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் உருவாக்கிப் பராமரிப்பதே எங்கள் நோக்கம். தட்டுங்கள் திறக்கப்படும் என்பார்கள். தட்டாமலே எப்போதும் திறந்து மகிழ்வுடன் வரவேற்கும் அளவிற்குத் தமிழ்நாடு அரசின் தொழிற்கொள்கையும், அதற்கான நடைமுறைகளும் தயார் நிலையில் அமையும் என்பதை முதலீட்டாளர்களுக்கான அறிமுகச் செய்தியாக வழங்குகிறேன். தேவை அறிந்து - உரிய கட்டத்தில் முடிவெடுத்து செயல்படுத்தப்படும்!

செய்தியாளர்: மருத்துவக் கல்வி, பொறியியல் கல்வி, வேளாண் கல்வி, கால்நடை மருத்துவக் கல்வி ஆகியவற்றில் இந்தியாவுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் தமிழகத்தைச் சமூக அறிவியல் மற்றும் கலை இலக்கியத் துறையிலும் சிறந்த மாநிலமாக்கும் வகையில் கல்வி நிறுவனங்களையோ பல்கலைக் கழகங்களையோ உருவாக்கும் திட்டம் இருக்கிறதா?

முதல்வர் மு.க.ஸ்டாலின்: சமச்சீர் கல்வி என்பதுதான் தி.மு.கழகத்தின் அடிப்படைக் கொள்கை. வேகமாக மாறிவரும் காலத்திற்கேற்ற வகையில் பள்ளிக் கல்வி- உயர்கல்வி ஆகியவற்றின் ஒவ்வொரு துறையிலும் புதிய படிப்புகள் உருவாக்கப்படும். தலைவர் கலைஞர் ஆட்சியில் தான் கம்ப்யூட்டர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. அதுபோலவே அரசு கல்லூரிகளில் விஷூவல் கம்யூனிகேஷன் படிப்புகள் கொண்டு வரப்பட்டன. தற்போது சமூக அறிவியல் - கலை - இலக்கியம் சார்ந்த உயர்படிப்புகளில் புதிய விழிப்புணர்வும் ஆர்வமும் ஏற்பட்டுள்ளது. தமிழகப் பண்பாட்டின் தகுதிமிக்க அடையாளங்களுடன் தொடர்புடைய படிப்பாக இருப்பதால் அதில் தனிக் கவனம் செலுத்தப்படுகிறது.

இந்திய ஒன்றியத்தின் வரலாற்றை; அறிஞர் அண்ணா அவர்கள் அன்றைக்கே குறிப்பிட்டதைப் போல, தமிழ்நாட்டிலிருந்து தொடங்கி எழுத வேண்டும் என்கிற நெடுநாள் கருத்துதான் கழக அரசின் கொள்கையுமாகும். கீழடி, ஆதிச்சநல்லூர் ஆய்வுகளில் கிடைத்துள்ள ஆவணங்கள் இளைய தலைமுறையினரின் கலை - இலக்கிய ஆர்வத்தை மேம்படுத்தியுள்ளன. அதற்கேற்ப தொல்லியல், கல்வெட்டு, இலக்கியம், மானுடவியல் உள்ளிட்டவை சார்ந்த படிப்புகளை மேம்படுத்தும் வகையில் கல்விக் கொள்கை அமையும். தேவை அறிந்து அதற்கான பல்கலைக் கழகங்கள்-கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படுவது குறித்து உரிய கட்டத்தில் முடிவெடுத்து, செயல்படுத்தப்படும்.

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேட்டியளித்தார்.

banner

Related Stories

Related Stories