மு.க.ஸ்டாலின்

“அடுத்தமுறையும் ஆட்சியை மக்கள் எங்களிடம் ஒப்படைக்கும் வகையில் செயல்படுவோம்”:முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!

“சமூக நீதியுடன் இணைந்த சமத்துவப் பொருளாதார வளர்ச்சியே எமது குறிக்கோள்” என்று ‘தி இந்து’ஆங்கில நாளேட்டிற்கு (14.1.2022) அளித்த பேட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

“அடுத்தமுறையும் ஆட்சியை மக்கள் எங்களிடம் ஒப்படைக்கும் வகையில் செயல்படுவோம்”:முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“சமூக நீதியுடன் இணைந்த சமத்துவப் பொருளாதார வளர்ச்சியே எமது குறிக்கோள்” என்றும் “வரும் 5 ஆண்டுகளுக்குப் பிறகு, அடுத்து வரும் 5 ஆண்டுகளுக்கும் ஆட்சியை மக்கள் எங்களிடம் ஒப்படைக்கும் வகையில் செயல்படுவோம்” என்றும், ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டிற்கு (14.1.2022) அளித்த பேட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டிற்கு அளித்த பேட்டி வருமாறு:

செய்தியாளர்: அடுத்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தின் மேம்பாட்டுக்கான உங்களுடைய தொலைநோக்குத் திட்டம் என்ன? அரசு நிர்வாகத்தை மேம்படுத்தி, மக்களுக்கான சேவையை சிறப்பாக செயல்படுத்த ஏதாவது சீர்திருத்தம் செய்ய திட்டம் உள்ளதா?

முதல்வர் மு.க.ஸ்டாலின்: 5 ஆண்டுகளுக்கல்ல, 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டத்தை சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு திருச்சி சிறுகனூரில் நடந்த தி.மு.கழகத்தின் சிறப்பு மாநாட்டில் அறிவித்தேன். கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் பின்தங்கிவிட்ட தமிழ்நாட்டை மீட்க, தி.மு.க.விடம் அடுத்த 10 ஆண்டுகளை ஒப்படையுங்கள் என்று பொதுமக்களிடம் கோரிக்கை வைத்தேன். முதல் 5 ஆண்டுகளை மக்கள் எங்களிடம் வழங்கியிருக்கிறார்கள்.

7 அம்சங்களில் தொடர்ந்து உறுதியான கவனம்!

திருச்சியில் நான் அளித்த 7 உறுதிமொழிகளின் அடிப்படையில் பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி மற்றும் சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, ஊரக உட்கட்டமைப்பு, சமூக நீதி ஆகிய 7 அம்சங்களிலும் தொடர்ந்து உறுதியான கவனம் செலுத்தி வருகிறோம். ஒருங்கிணைந்த - சீரான -நீடித்து நிலைத்திருக்கும் வளர்ச்சியின் அடிப்படையில், அனைவருக்கும் அனைத்தும் என்பதை நோக்கமாகக் கொண்டு அரசு செயல்படுகிறது. மக்களை எளிதில் கண்டு - செவிமடுத்திடக்கூடிய அரசாகவும், மக்கள் தேவைப்படும் போதெல்லாம் எளிதில் அணுகக்கூடிய அரசாகவும் நிர்வாகத்தை செம்மைப்படுத்தி நடத்துகிறோம்.

அரை நூற்றாண்டுக்கும் அதிகமான எனது பொதுவாழ்வு அனுபவத்தில் சென்னை மாநகராட்சி மேயராக, சட்டமன்ற உறுப்பினராக, உள்ளாட்சித் துறை அமைச்சராக, தொழில்துறை அமைச்சராக, துணை முதல்வராக ஏற்கனவே பல பொறுப்புகளை வகித்துப் பெற்றிருக்கும் விரிவான அனுபவத்தின் அடிப்படையில் மக்களின் உணர்வுகளையும் எதிர்பார்ப்புகளையும் அறிந்திருக்கிறேன். மக்கள் விரும்புகிற, விரைவான-வெளிப்படையான சேவைகளை வழங்குவதை இந்த அரசு உறுதி செய்துள்ளது. இது தொடக்கக் கட்டத்திலான வேகமாக மட்டும் இல்லாமல், 5 ஆண்டுகளும் சீரான வேகத்துடனும் விவேகத்துடனும் செயல்பட்டு, அடுத்துவரும் 5 ஆண்டுகளையும் மக்கள் எங்களிடம் மனமுவந்து ஒப்படைக்கும் வகையில் தொடரும்.

சமூக நீதியுடன் இணைந்த சமத்துவப் பொருளாதார வளர்ச்சி!

செய்தியாளர்: முதல்முறையாக உலக அளவில் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்களை உள்ளடக்கிய பொருளாதார ஆலோசனைக் குழுமம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பொருளாதாரத்தை சீரமைப்பதில் அக்குழுமம் எந்த வகையில் உதவியுள்ளது?

முதல்வர் மு.க.ஸ்டாலின்: சமூகநீதியுடன் இணைந்த சமத்துவப் பொருளாதார வளர்ச்சி என்பதுதான் எமது இலக்கு. நீதிக்கட்சி ஆட்சிக்காலத்திலிருந்து இந்த இலட்சியம் வேரூன்றி வளர்ந்து வருகிறது. இதைத்தான் ‘திராவிட மாடல்’ என்று தொடர்ந்து எடுத்துரைத்து வருகிறேன். இன்றைய காலகட்டத்திற்கேற்ப, தக்கமுறையில், அத்தகைய பொருளாதார வளர்ச்சியை வடிவமைத்து, சீர்ப்படுத்தவும், மேம்படுத்தவும் வல்லுநர்களின் ஆலோசனைகள் அவசியம் என்பதால், உலகளாவிய பெயர்பெற்ற, பல்வேறு துறை சார்ந்த பொருளாதாரச் சான்றோர்களை உள்ளடக்கிய ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பொருளாதாரம் சார்ந்த வெவ்வேறு பிரிவுகளில் வல்லுநர்களாகவும் உள்நாட்டு - வெளிநாட்டுத் தாக்கங்களில் அனுபவம்வாய்ந்த ஆராய்ச்சியாளர்களாகவும் இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் நிலையான வளர்ச்சிக்குரிய ஆலோசனைகளை அவர்களிடம் பெற்றுக் கொள்கிறோம். வாய்ப்பு அமையும்போது நேரிலும் மற்ற சந்தர்ப்பங்களில் காணொலி காட்சி வாயிலாகவும் அவர்களுடன் உரையாடி கருத்தறிகிறேன். உடனடியான- குறுகிய கால செயல்பாடுகள், நீண்டகால செயல் திட்டங்கள் எனப் பிரித்துக்கொண்டு அதனதன் காலஅளவுக்குள் செயல்படுத்தி, தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றும் இலக்குடன் பயணிக்கிறோம். மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் உரிய நடவடிக்கைகள்!

செய்தியாளர்: ஒரு தொய்வுக்குப்பின் மறுபடியும் கொரோனா மூன்றாவது அலை தலைதூக்கியுள்ளது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநேர ஊரடங்கு, பொது இடங்களில் புழங்குவதற்கான விதிமுறைகள் ஆகியவை அமலில் உள்ளன. இந்த நேரத்தில் பொருளாதாரம் வீழ்ச்சியடையாமல் இருக்கவும், மக்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் என்ன திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள்?

முதல்வர் மு.க.ஸ்டாலின்: நாங்கள் பதவியேற்றபோது, கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்தது. தேர்தல் முடிவுற்று, பொறுப்பேற்பதற்கு முன்பே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டன. பொறுப்பேற்றதற்குப் பிறகும் அது தொடர்ந்தது. ஆக்ஸிஜன் உற்பத்தி அதிகரிக்கப்பட்டது. மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்பட்டன. பல்வேறு துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு வேகப்படுத்தப்பட்டது. மருத்துவமனை வாசலில் ஆம்புலன்ஸ்கள் நிற்கின்ற அவலம் ஒரு வாரத்திற்குள் முடிவுக்கு வந்தது. உயிரிழப்புகள் குறைந்து, தொற்றுப் பரவலும் கட்டுப்படுத்தப்பட்டது. தடுப்பூசியை ஓர் இயக்கமாகவே செயல்படுத்தியது நல்ல பலன் தந்தது.

தற்போது, ஒமைக்ரான் வகையுடன் மூன்றாவது அலை பரவுகிற நிலையிலும் முன்கூட்டியே திட்டமிட்டு செய்யப்பட்ட மருத்துவ ஏற்பாடுகள் கைகொடுக்கின்றன. பூஸ்டர் உள்ளிட்ட தடுப்பூசி திட்டத்தையும் செயல்படுத்துகிறோம். இவையெல்லாம் மக்களின் பாதுகாப்பை முன்வைத்து மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள். அவர்களுடைய வாழ்வாதாரம் எவ்வகையிலும் பாதிக்கக்கூடாது என்பதில் இந்த அரசு மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பதால் இரண்டாவது அலையின்போது, கடும் நிதி நெருக்கடியிலும் குடும்பத்துக்கு ரூ.4000 நிவாரணமாக வழங்கப்பட்டது. மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பும் கொடுக்கப்பட்டது. தற்போது பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. அதனால் பொதுமக்களுக்கு மட்டுமின்றி, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கும் நல்ல நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசி திட்டத்தைத் தொடங்கி வைத்த அதே ஜனவரி 10-ஆம்நாள், பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, டான்சிம் சார்பிலான புதுயுகத் தொழில்முனைவோர் கூட்டமைப்பின் புத்தொழில் புத்தாக்க கருத்தரங்கைத் தொடங்கி வைத்தேன். பெரிய அளவிலான முதலீடுகள், சிறிய அளவிலான முதலீடுகள் என வகைப்படுத்தி அவற்றிற்கான கட்டமைப்புகளை மேற்கொண்டு வருகிறோம்.

இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களை நடத்துவோரும் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் எங்களுடன் கலந்துரையாடுகிறார்கள். தொழில் தொடங்குவதற்கு சாதகமான மாநிலமாகத் தமிழ்நாடு உருவாகியிருப்பதை அவர்களால் உணர முடிகிறது. அதனால், இந்த நோய்த்தொற்றுக் காலத்தில் பொருளாதாரக் கட்டமைப்பில் பாதிப்பு இல்லாத வகையில், வருமானத்தைப் பெருக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒன்றிய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய ஜி.எஸ்.டி வரித்தொகை உள்ளிட்டவற்றையும் தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.

முதலீட்டுத் துறையில் ஒரு புதிய பாய்ச்சல் உருவாக்கம்!

செய்தியாளர்: தற்போதுள்ள சூழலில் சர்வதேச முதலீட்டாளர்களின் அடுத்த மாநாட்டை எப்போது நடத்தமுடியும்?

மு.க.ஸ்டாலின்: ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி-தமிழ்நாடு’ என்ற இலட்சியத்துடன் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்கிற பொருளாதார இலக்கைத் தமிழ்நாடு அடைய வேண்டும் என்பதுதான் எங்களின் தொலை நோக்குத்திட்டம். அதற்கு, முந்தைய ஆட்சிக் காலத்தைப்போல கவர்ச்சியான - விளம்பரத்திற்கான முதலீட்டாளர் மாநாடுகள் தேவையில்லை. நம்பிக்கை தரக்கூடிய கட்டமைப்பும், வெளிப்படையான செயல்பாடும், விரைவான அனுமதிகளும்தான் முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பு. அதனை இப்போது வழங்கி வருகிறோம். 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற இலக்கை அறிவித்து, சென்னை கிண்டியில் முதலீட்டாளர் மாநாட்டைத் தொடங்கி வைத்தபோது மொத்தம் 49 திட்டங்களின் மூலம் 28,508 கோடி ரூபாய் முதலீட்டில், 83,482 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டன.

கடந்த மாதத்தில் கோவை கொடிசியாவில் நடந்த நிகழ்வில் 35,208 கோடி ரூபாய் முதலீட்டில், 76,795 நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிடும் 59 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. அந்த நிகழ்விலேயே 13 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது, 13,413 கோடி ரூபாய் முதலீட்டில் 11,681 பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் திட்டங்கள் உருவாகியுள்ளன. தொழில் வளர்ச்சிக்கான முக்கிய அம்சமாக, தமிழ்நாடு நிதி நுட்பக் கொள்கை 2021 வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் நிதிநுட்ப நகரம் அமைத்தல், இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் நியோ டைடல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைத்தல், தற்போதைய முதலீட்டாளர்களுடன் புதிய முதலீட்டாளர்களுக்கு உதவிடும் ஒற்றைச் சாளர இணையதளம் 2.0 செயலி என முதலீட்டுத் துறையில் ஒரு புதிய பாய்ச்சலை உருவாக்கியுள்ளோம்.

(தொடரும்..)

நன்றி: முரசொலி

banner

Related Stories

Related Stories