தமிழ்நாடு

“சமூக நீதியை உள்ளடக்கிய சமூக வளர்ச்சி.. நல் ஆளுகையின் அடையாளமாக திகழும் முதல்வர் மு.க.ஸ்டாலின்”: முரசொலி

சமூக நீதியை உள்ளடக்கிய நீதியும் - சமூக வளர்ச்சியை உள்ளடக்கிய பொதுமக்கள் பாதுகாப்பும் - உருவாக்கக்கூடிய முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அவர்கள் அடையாளம் காணப்பட்டு இருக்கிறார்.

“சமூக நீதியை உள்ளடக்கிய சமூக வளர்ச்சி.. நல் ஆளுகையின்  அடையாளமாக திகழும் முதல்வர் மு.க.ஸ்டாலின்”: முரசொலி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஒன்றிய அரசின் நல் ஆளுகை மாநிலங்களுக்கான பட்டியலை உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டு இருக்கிறார். அகில இந்திய அளவில் நீதித்துறை - பொதுமக்கள் பாதுகாப்பில் தமிழ்நாட்டுக்கு முதலிடம் என்பதை அறிவித்து இருக்கிறார்.

நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறை தீர்ப்புத்துறை தயாரித்த 2021 ஆம் ஆண்டு நல்லாட்சிக் குறியீட்டை நல்லாட்சி தினத்தை முன்னிட்டு வெளியிட்டு இருக்கிறார்கள். இதில் நீதித்துறையும், பொதுமக்கள் பாதுகாப்பும் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழ்நாடு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற வெற்றிச் செய்திகளைத்தான் தி.மு.க. ஆட்சி அமைந்ததில் இருந்து கேட்டு வருகிறோம். ஆண்டுதோறும் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்கள் குறித்து சில வாரங்களுக்கு முன்னால் ‘இந்தியா டுடே' ஆங்கில வார இதழ் கருத்துக்கணிப்பு நடத்தி வெளியிட்டது. அதன்படி 2021- ஆம் ஆண்டுக்கான ஆய்வில் தமிழ்நாடு முதலிடம் பிடித்திருப்பதாக ‘இந்தியா டுடே' தெரிவித்து இருந்தது. இது முதலாவது கிடைத்த வெற்றிச் செய்தி ஆகும்.

வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் மாநிலங்களின் பட்டியலில் இந்தி பேசும் வட மாநிலங்கள் குறிப்பாக பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களே அதிக அளவில் இடம்பெற்றிருப்பது ஒன்றிய அரசின் ஆய்வறிக்கையில் தெரியவந்தது. அதேநேரத்தில், தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் வறுமையை ஒழிப்பதில் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருவது ஆய்வறிக்கை மூலம் தெரிய வந்தது.

இந்தியாவின் வறுமை குறித்து தயாரிக்கப்பட்டுள்ள ‘பன்முக வறுமை குறியீடு' அறிக்கையை நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் சில வாரங்களுக்கு முன்னால் வெளியிட்டு இருந்தார். இது இரண்டாவது வெற்றிச் செய்தியாகும். இதோ இப்போது மூன்றாவது வெற்றிச் செய்தியாக நீதித்துறை - பொதுமக்கள் பாதுகாப்பில் முதலிடம் என்ற செய்தி கிடைத்துள்ளது. நீதி என்ற சொல் இன்று சட்டம் சார்ந்த சொல்லாக மட்டும் இல்லை, அது சமூகம் சார்ந்த சொல்லாகவும் இருக்கிறது. அனைத்து மக்களுக்குமான நீதியாக அது வழங்கப்பட்டு வருகிறது.

நீதியின் தத்துவம் குறித்து மிகப்பெரிய நூல் ஒன்றை உலகப் பொருளாதார மேதை அமர்த்தியா சென் எழுதி இருக்கிறார். அதில் அவர் வலியுறுத்திச் சொல்வது, “நீதி நிலைநாட்டப்பட வேண்டும். அநீதி களையப்பட வேண்டும்” - என்பதைத்தான். எனவே, நீதி என்பது நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்பை மட்டும் மையமாகக் கொண்டது அல்ல. அதற்கு விரிவான பொருளை இன்று கொண்டதாகும். அத்தகைய விரிவான சமநீதியை - சமூகநீதியை வழங்கும் மாநிலமாக தமிழ்நாடு அமைந்துள்ளது.

அதேபோல் பொதுமக்கள் பாதுகாப்பு என்பதும் ஏதோ சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக மட்டும் இப்போது பார்க்கப்படவில்லை. அனைத்து மக்களுக்குமான நம்பிக்கை தருவதாக, அனைவரையும் சமூகரீதியாகப் பாதுகாப்பதாக அந்தச் சொல் அமைந்துள்ளது. பொருளாதார வளர்ச்சியும் - சமுக நலத்திட்டங்களும் ஒன்றுக்கொன்று கைகொடுத்து செயல்பட்டதால் தமிழகம் வளர்ச்சி அடைந்தது என்று சொன்னார் அமர்த்தியாசென்.

ஜான் ட்ரீஸ் அவர்களும் அமர்த்தியாசென் அவர்களும் இணைந்து எழுதிய புத்தகம், ‘நிச்சயமற்ற பெருமை' என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சமூக நலன் சார்ந்த வளர்ச்சி தான் தமிழ்நாட்டை இந்தளவுக்கு முன்னேற்றி இருக்கிறது என்பதை ஜான் ட்ரீஸ் அவர்கள் அந்தப் புத்தகத்தில் விரிவாகச் சொல்லி இருக்கிறார். ஆரம்ப சுகாதார நிலையங்கள், பொது விநியோகத் திட்டம் ஆகிய இரண்டும் சேர்ந்து தமிழ்நாட்டை எப்படி வளர்த்துள்ளது என்பதை அவர் எழுதி இருக்கிறார். இந்தக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு அடித்தளம் எது என்பதையும் அந்தப் புத்தகத்தில் ஜான்ட்ரீஸ் சொல்கிறார்:

“1920 இல் பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கம் உள்ளிட்ட பல முன்னோடி சமூக சீர்திருத்தங்கள், பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின சாதிகள் பெற்றுள்ள அரசியல் அதிகாரம், கவர்ச்சிகர அரசியல் பிடிமானம், தமிழ்ச்சமூகத்தில் ஆக்கபூர்வமான பெண் அமைப்புகள் ஆகியவைதான் இந்தக் கட்டமைப்பை தமிழ்நாட்டில் உருவாக்கக் காரணமாக அமைந்தன” - என்று ஜான் ட்ரீஸ் அவர்களும் அமர்த்தியா சென் அவர்களும் எழுதி இருக்கிறார்கள். இது தான் பொதுமக்கள் பாதுகாப்பின், நம்பிக்கையின் அக்கறையின் உள்ளடக்கம் ஆகும்.

அனைவர்க்குமான வளர்ச்சி என்று முதலமைச்சர் இதனை மையமாக வைத்துத்தான் பேசி வருகிறார் முதலமைச்சர். அதனுடைய வெளிப்பாடு தான் ஒன்றிய அரசு தந்துள்ள பாராட்டு ஆகும். விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் நடந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அம்பேத்கர் சுடர் விருது தரப்பட்டது. அந்த விழாவில் பேசிய முதலமைச்சர் அவர்கள், இதே பொதுமக்கள் பாதுகாப்பு குறித்துத்தான் அக்கறையுடன் பேசினார்கள்.

“பொருளாதார வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி ஆகியவை அனைத்தையும் ஒரே ஒரு சமூக விரோதச் சம்பவம் காலி செய்து விடும். சமூக நல்லிணக்கம் - சமூக அமைதி - சமூகச் சமநிலை இல்லாத ஒரு மாநிலத்தில் ஒரு நாட்டில் மற்ற வளர்ச்சிகள் அனைத்தும் வீண் முயற்சிகள் தான். அதனால்தான் கல்வி வளர்ச்சி - சமூக வளர்ச்சி - தொழில் வளர்ச்சி ஆகியவற்றை இணைத்தே நான் சொல்லி வருகிறேன். இங்கு மட்டுமல்ல; தொழிலதிபர்கள் மாநாட்டிலேயே சமூக வளர்ச்சியை வலியுறுத்தி நான் பேசி வருகிறேன்” என்று பேசினார். இது தான் நல் ஆளுகையின் அடையாளம் ஆகும்.

சமூக நீதியை உள்ளடக்கிய நீதியும் - சமூக வளர்ச்சியை உள்ளடக்கிய பொதுமக்கள் பாதுகாப்பும் - உருவாக்கக்கூடிய முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அவர்கள் அடையாளம் காணப்பட்டு இருக்கிறார். இத்தகைய செயல்பாடுகள் மற்ற அனைத்துக் குறியீடுகளிலும் தமிழகத்தை முதலிடத்துக்குக் கொண்டு செல்லும் நாள் வெகுதூரத்தில் இல்லை!

banner

Related Stories

Related Stories