தமிழ்நாடு

“பகுத்தறிவு கொள்கையை உயிர்போல் காத்த நாவலருக்கு சிலை”: நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நாவலர் இரா.நெடுஞ்செழியன் சிலையினை திறந்து வைத்து, நாட்டுடமையாக்கப்பட்டுள்ள அன்னாரின் நூல்களுக்கான நூலுரிமைத் தொகையினை வழங்கிச் சிறப்பிக்க உள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

“பகுத்தறிவு கொள்கையை உயிர்போல் காத்த நாவலருக்கு சிலை”: நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள நாவலர் இரா.நெடுஞ்செழியன் சிலையினை நாளை (26.12.2021) காலை 10.00 மணியளவில் திறந்து வைத்து, நாட்டுடமையாக்கப்பட்டுள்ள அன்னாரின் நூல்களுக்கான நூலுரிமைத் தொகையினை வழங்கிச் சிறப்பிக்க உள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:

‘‘தலைசிறந்த பகுத்தறிவுவாதிகளில் ஒருவர் என்றும், எனக்கே பாடம் கற்றுத் தரும் அளவிற்குத் தகுதி வாய்ந்தவர் நாவலர்’’ என்று தந்தை பெரியார் அவர்களாலும், ‘‘தம்பி வா தலைமை ஏற்க வா, நாட்டுக்குக் கிடைத்திருக்கும் நல்லவரே; நாவலரே” என பேரறிஞப் பெருந்தகை அண்ணா அவர்களாலும், ‘‘நாடு போற்றும் நாவலரே; நற்றமிழ்க் காவலரே; நடைமிடுக்கும், நகைச்சுவை எடுப்பும் நற்றமிழ்ப் பேச்சால் நாட்டோரைக் கவர்ந்திழுக்கும் நாவண்மை மிக்க நாவலரே’’ என முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களாலும் ‘‘கற்பதில் நாட்டமும் – கற்றதைத் தெளிவதில் ஆர்வமும் – உண்மையை ஓர்வதில் ஊக்கமும், ஓர்ந்ததை விரித்துரைப்பதில் உவகையும் கொண்ட பண்பாளர்’’ என இனமான பேராசிரியரால் போற்றிப் புகழப்பட்டவரே நாவலர் இரா.நெடுஞ்செழியன் ஆவார்.

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் திருக்கண்ணபுரத்தில் 11.07.1920 ஆம் ஆண்டு ராசகோபாலனார்-மீனாட்சி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். தமிழ்மொழி மீது கொண்டிருந்த அளவற்றப் பற்றின் காரணமாக,

இரா. நாராயணசாமி என்கின்ற தனது பெயரினை இரா.நெடுஞ்செழியன் என்று மாற்றிக் கொண்டார். படிக்கின்ற காலங்களில் தாய்மொழியாம் அழகு தமிழ்மொழியை அதீதமாக நேசித்ததன் விளைவாக, தமிழ் இலக்கியங்கள், இதிகாசங்கள் உள்ளிட்ட அனைத்தையும் ஆர்வமுடனே கற்றுத் தேர்ந்தார். அன்றைய நாட்களில் சமூகத்தில் நிலவி வந்த அவலங்களையும், அநியாயங்களையும் தைரியத்தோடு தட்டிக் கேட்ட தந்தை பெரியார் அவர்களின் பால் ஈர்க்கப்பட்டு, 1944 ஆம் ஆண்டு தந்தை பெரியாருடன் திராவிட இயக்கத்தில், இளமைக் காலத்திலேயே, தன்னுடைய 24 ஆம் வயதில் இணைத்துக் கொண்டார்.

நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்கள் மொழி அறிவும், அசாத்திய பேச்சாற்றலும், சமுதாய நலனும், விடாத சுயமரியாதையும், பகுத்தறிவும் கொண்டு, தான் கொண்டிருந்த கொள்கையில், இலட்சியத்தில் இறுதிவரையில் உறுதிகாத்து, அயராது மக்கள் பணியாற்றியதன் காரணமாக, தந்தை பெரியாரிடமும், பேரறிஞப் பெருந்தகை அண்ணாவிடமும் மிகுந்த நன்மதிப்பினைப் பெற்றதோடு, மிகவும் குறுகிய காலத்தில் இயக்கத்தின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராக உயர்ந்து, உச்சம் தொட்டார்.

ஆட்சி மாற்றங்களிலும், அரசியல் மாற்றங்களிலும், மொழிப்போரிலும் மாணவர்களின் பங்களிப்பு மகத்தானது என்பதை உணர்ந்திருந்த காரணத்தினால், திராவிட இயக்கங்கள் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்திட நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்களின் பங்களிப்பும், இனமானப் பேராசிரியர் க.அன்பழகனாரின் பங்களிப்பும் அளவிடக்கரியது. திராவிடக் கருத்துக்களை, சமூகச் சீர்திருத்தங்களை இளைஞர் மனங்களில் விதைத்திட ‘மன்றம்’ என்கின்ற இதழினைத் தொடர்ந்து நடத்தி வந்தார்.

இடைவிடாத அரசியல் மற்றும் ஆட்சிப் பணிகளுக்கு இடையிலும், அழகுத் தமிழில் எழுதும் பழக்கமதை என்றும் கைவிடாத காரணத்தால், எண்ணற்ற கதைகள், கட்டுரைகளோடு 30-க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார். குறிப்பாக பாவேந்தர் கவிதைகள், திருக்குறள் தெளிவுரை, பத்துப்பாட்டு ஆராய்ச்சி, புறநானூற்றுப் புதையல், கலித்தொகை தரும் காதல் காட்சிகள், குறுந்தொகை குறித்த சொல்லும் சுவையும் இன்றளவும் இலக்கிய வட்டத்தில் பேசப்படும் நூல்களாகும். மறைந்த திராவிடம், மொழிப் போராட்டம், திராவிட இயக்க வரலாறு, சமூக நீதிப்போர், பண்பாடு போற்றுவோம் ஆகிய நூல்கள் அனைவராலும் விரும்பிப் படிக்கின்ற ஒன்றாகும்.

1967 முதல் 1969 வரை பேரறிஞர் அண்ணாவின் ஆட்சிக் காலத்தில் கல்வி அமைச்சராகவும், 1971 முதல் 1975 வரையில் முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியிலும் கல்வி அமைச்சராகவும் சிறப்பாக பணியாற்றினார். பின்னர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு உணவுத் துறை மற்றும் நிதித் துறை அமைச்சராக திறம்பட செயலாற்றினார். தான் வாழ்கின்ற காலம் வரையில், தான் கொண்டிருந்த பகுத்தறிவுக் கொள்கையை உயிர்போல் காத்து வந்தவர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘‘திராவிட இயக்கத்தின் சொல்லோவியம் – நடமாடும் பல்கலைக்கழகம் நாவலரின் நூற்றாண்டு நிறைவு விழாவினை அறிவு சார்ந்த தமிழ் உலகமும், திராவிட இயக்கத்தின் தொண்டர்களும் கொண்டாடி மகிழ்வோம்” என அறிவித்திருந்தார்கள். மேலும், கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரின் போது நாவலர் நெடுஞ்செழியன் அவர்களுக்கு சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் அன்னாரின் சிலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்களின் திருவுருவச் சிலையினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (26.12.2021) திறந்து வைத்து, சிறப்பிக்க உள்ளார்.

banner

Related Stories

Related Stories