தமிழ்நாடு

” ’காலத்தை வென்றவன் நீயே’ - நிஜ நாயகனாக விளங்கும் மக்கள் முதல்வர்” - முரசொலி செல்வம் புகழாரம்!

பெருந்தொற்றின் காலத்திலும், பெரு வெள்ளச் சோதனைப் பாதிப்பிலும் பொதுமக்கள் பாதித்திருந்த போது, அவதிப்படும் மக்களின் இதயத் துடிப்புகள் கேட்கிற திக்கெங்கும் நோக்கி நமது முதல்வரின் கால்கள் பயணிக்கின்றன

” ’காலத்தை வென்றவன் நீயே’ - நிஜ நாயகனாக விளங்கும் மக்கள் முதல்வர்” - முரசொலி செல்வம் புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

“சோதனை மேல் சோதனை போதுமடா சாமி....” என்ற பழைய பாடல் வரிகள் எங்கோ ஒரு நிகழ்ச்சியில் ஒலித்துக் கொண்டிருந்தது! ஆனால், சோதித்துப் பார்க்கிறாயா? சாதித்துக் காட்டுகிறேன் என ஒரு உருவம் சுழன்று சுழன்று பணியாற்றிக் கொண்டிருக்கிறது.

இத்தனைக்கும் அது பயில்வான் உருவமல்ல; பலகீனமான உருவம். உருவம் பலகீனமானதாக இருக்கலாம்; ஆனால் சோதனைகள் எந்த உருவில் வந்தாலும், அதனை எதிர்கொண்டு சாதித்துக் காட்ட வேண்டும் என்ற நெஞ்சத்து உறுதி - சோதனைகளை பஞ்சாய்ப் பறக்க விடுகிறது!

“முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினாகிய நான்...'' என முழங்கி, தமிழ்நாட்டின் முதலமைச்சராக உறுதி ஏற்ற நாள் முதல்கூட அல்ல; நிமிடம் முதல் ஒவ்வொரு நடவடிக்கையும் அவரை ஆட்கொண்டுள்ள அர்ப்பணிப்பு உணர்வை உணர்த்துவதாகவே உள்ளது!

“மெய்வருத்தம் பாரார், பசிநோக்கார் கண்துஞ்சார் - எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி அருமையும் பாரார்; அவமதிப்புங் கொள்ளார் கருமமே கண்ணாயினர்!'

- எனும் நீதிநெறி விளக்கத்தின் மொத்தப் பொருளாக, சுழன்று கொண்டிருக்கிறார் முதல்வர்! காலம் வீசி எறிந்த தடைக்கற்களைப் படிக்கட்டுகளாக மாற்றி முன்னேறுகிறார்!

அவரோடு பல ஆண்டுகாலம் அருகில் இருந்து கணித்தவர்கள் கூட, 'இந்த அடக்கமான உருவத்திடம் இத்தனை ஆற்றலா?” - என வியந்து பிரமிக்கின்றனர்.

ஜுஜுபி! இன்று அவர் ஓய்வின்றி சுழன்று சுழன்று போராடுவது, காலத்தின் சோத னையைஎதிர்த்து! பதவிப் பொறுப்பேற்ற உடன் கொரோனா உருவில் கடுஞ்சோதனை.... அவர் எதிர்கொண்டது சோதனைதான்! சோதனைகள் அவரை முடக்கவில்லை; மாறாக முறுக்கேற்றியது! துவண்டு விடுவார் என எண்ணினர்; ஆனால் துணிச்சலோடு எதிர்கொண்டார்!

அவரது மிடுக்கு நடையில்; முடங்கிக் கிடந்த நிர்வாகம் முறுக்கேறி முழுவேகத்தில் பணியாற்றத் தொடங்கியது! அவர் எதிர்கொள்வது, அரசியல் சோதனை அல்ல; காலத்தின் சோதனை! - அரசியல் சோதனைகளை எதிர்கொள்வது எப்படி என்பதை அரிச்சுவடி முதல் படித்துத் தேர்ந்தவர் அவர்; அரசியல் சோதனைகளில் பல நெருப்புக் குண்டங் களில் மூழ்கி எழுந்து மிளிர்பவர் அவர்!

அன்பு ஒன்றைத் தவிர வேறு எதற்கும் அடிபணியா அரிமாவாக, சுயமரியாதைக்கு இழுக்கு என்றால் பொங்கி எழும் எரிமலையாக, ‘முடியுமா நம்மால்' என்பது தோல்விக்கு முன்பு வரும் தயக்கம், 'முடித்தே தீருவோம்' - என்பது ‘வெற்றிக்கான தொடக்கம்' என்று சூளுரைத்து வாழ்ந்து காட்டிய வரலாற்று நாயகன் கலைஞரின் அரசியல் வார்ப்பாக உருவானவர்.

” ’காலத்தை வென்றவன் நீயே’ - நிஜ நாயகனாக விளங்கும் மக்கள் முதல்வர்” - முரசொலி செல்வம் புகழாரம்!

அதனால் அரசியல் சோதனைக் களம் என்பது பிள்ளைப் பிராயத்தில் அவர் கேட்ட தாலாட்டு; சிறுவனாக அவர் விளையாடிய விளையாட்டு; வாலிப வயதில் அவர் பாடிய போர்ப் பாட்டு!

அரசியல் களம் என்பது, இன்றைய சினிமா வசன பாணியில் கூறுவது என்றால், அது அவரைப் பொறுத்தவரை

அதனுடன் போராடி வெற்றியை எட்டும் நிலையில், 'பெருமழை - வெள்ளம்!' நூறாண்டு காலத்தில் இதுபோன்ற மழை ; வெள்ளம் - இது இரண்டாவது முறை என்ற நிலையில் அதனுடன் போராடிக் கொண்டிருக்கும்போதே, இரண்டாவது முறைகூட அல்ல; இதுபோன்ற மழை வெள்ளத்தை இதுவரை தமிழ்நாடு சந்தித்ததே இல்லை எனும் நிலை வருமோ என்ற வகையில், தொடர்ந்திடும் காலத்தின் ஊழிக் கூத்து!

'கண்ணுக்குத் தெரியாத எதிரி', 'கணித்திட முடியாத எதிரி' எனத் தொடர்ந்து அனுப்பி, காலம் வைத்திடும் சோதனை; அவரது ஆற்றலைச் சோதிக்கவா? அல்லது அந்த ஆற்றலை நாட்டுக்கு வெளிப்படுத்தவா? - என்பது புரியாத புதிர்! தலைமைப் பொறுப்பு என்பது, பகுதி நேரப் பணி அல்ல; 24 மணி நேர உழைப்பு! தலைமைப் பொறுப்பேற்பவரின் அடி வயிற்றில் எப்போதும் தீ கனன்று கொண்டே இருக்க வேண்டும் - எனத் தலைமைக்கு வகுத்த இலக்கணத்தில் இருந்து தடம் புரளாது இயங்கிக் கொண்டிருக்கிறார், தமிழ கத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள கழகத்தின் தலைவர்!

'ஓய்வின்றி உழைக்கிறீர்களே; உடலைப் பார்த்துக் கொள்ளுங்கள்' என உற்றார் உறவினர் வேண்டுகோள் விடுக்கின்றனர். அவரது கடமை உணர்வு, அதற்குக் காது கொடுப்பதில்லை.

சோசலிசப் புரட்சி வீரன் சேகுவாராவின் பொன்மொழிகளைப் புரட்டிய போது கண்ணில் பட்ட ஒன்று, 'நல்ல நண்பனை ஆபத்தில் அறி; நல்ல ஆட்சியாளனை பேரிடர் காலத்தில் அறி!' - என்பதாகும்.

இதோ, பெருந்தொற்றின் காலத்திலும், பெரு வெள்ளச் சோதனைப் பாதிப்பிலும் பொதுமக்கள் பாதித்திருந்த போது, அவதிப்படும் மக்களின் இதயத் துடிப்புகள் கேட்கிற திக்கெங்கும் நோக்கி நமது முதல்வரின் கால்கள் பயணிக்கின்றன!

அவரது அர்ப்பணிப்புத் தன்மையுடன், உள்ளார்ந்த உணர்வோடு அவர் ஆற்றிடும் பணி கண்டு, தங்களுக்கு ஏற்பட்டுள்ள துயர் மறந்து அவரை தமிழகமே வாழ்த்துகிறது. முதலமைச்சர் களத்தில் நிற்கிறார் என்றதும், அமைச்சர்கள் ஒரு பக்கம்; மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அவரவர் பகுதிகளில்; அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதிகளில் என மக்களோடு மக்களாக நிற்கின்றனர்; நிவாரணப் பணிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எல்லாம் நடைபெறுகின்றன. ஆம்; அர்ப்பணிப்பு உணர்வோடு கூடிய ஆற்றல், ஆர்ப்பரித்து வந்து காலம் நடத்திய சோதனையை எதிர்கொண்டு வெற்றிநடை, வீறுநடை போட்டுக் கொண்டிருக்கிறது.

“காலத்தை வென்றவன் நீயே

காவியமானவன் நீ

வேதனை தீர்த்தவன்

விழிகளில் நிறைந்தவன்

வெற்றித் திருமகன் நீயே....'' -திரைப்படம் ஒன்றில் அப்படக் கதாநாயகனுக்கு எழுதிய பாடல் இது.

அந்தப் பாடல் வரிகளுக்கு நிஜ நாயகனாக இன்று நம் முதல்வர் விளங்குகிறார் !

படத்தில் நாயகி பாடுவது போல வரும் இந்த வரிகளை இன்று நாட்டு மக்கள் முதல்வரைப் பார்த்துப் பாடி மகிழ்கின்றனர்!

- முரசொலி செல்வம்

banner

Related Stories

Related Stories