தமிழ்நாடு

“கடந்த 10 ஆண்டுக்கால அ.தி.மு.க ஆட்சியில் எந்த திட்டப்பணிகளும் செய்யவில்லை” : அமைச்சர் கே.என்.நேரு சாடல்!

10 ஆண்டுக்கால அ.தி.மு.க ஆட்சியில் எந்தவித திட்டப்பணிகளும் மேற்கொள்ளாததே தற்போதைய மழை பாதிப்பிற்குக் காரணம் என அமைச்சர் கே.என்.நேருதெரிவித்துள்ளார்.

“கடந்த 10 ஆண்டுக்கால அ.தி.மு.க ஆட்சியில் எந்த திட்டப்பணிகளும் செய்யவில்லை” : அமைச்சர் கே.என்.நேரு சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருச்சி எடமலைப்பட்டி புதூர், காந்தி நகர், டோபிக் காலனி திருமண்டபம், சுந்தர் நகர், சண்முகா நகர், லிங்க நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ள இடங்களையும், கோரையாற்றின் கரைப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என் நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், குடியிருப்புப் பகுதிகளில் சூழ்ந்துள்ள மழை நீரினை உடனே அகற்றிடவும், கரைகளை பலப்படுத்தி மழைநீர் உள்ளே வராத அளவிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டார். இதையடுத்து மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, “வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வாய்க்கால் கரையோரங்களை பலப்படுத்த முன்மொழிவு (proposal) அனுப்பப்பட்டுள்ளது. நிரந்தர தீர்வுக்கான நடவடிக்கைகள்தான் எடுக்க வேண்டும் அதற்கான திட்டமிட்டுள்ளோம்.

புதுக்கோட்டை, மணப்பாறை ஆகிய பகுதிகளில் அதிக மழை பெய்வதால் அங்கிருந்து வரும் தண்ணீர் கோரையாறு வழியாக காவேரியை நோக்கி வருகிறது. கோரையாற்று நீரை வேறு எங்கும் திருப்ப முடியாது. தண்ணீர் எங்கும் தேங்காத வகையிலும் வெள்ள நீர் வாய்க்காலை விட்டு வெளியேறுவதை தடுக்கும் வகையிலும் கோரையாறு முழுவதும் தூர்வாரப்படும்.

கோரையாறு நீர் வடியும் இடங்களை ஆக்கிரமித்து குடியிருப்பு பகுதிகள் கட்டியுள்ளனர். அவ்வாறு கட்டப்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. மக்களே புரிந்து கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் அவர்களுக்குத் தான் சிரமம்.

மேலும், இடியும் நிலையில் இருக்கும் பழமையான கட்டிடங்களை இடிக்க மாநகராட்சிக்கு அறிவுறுத்தி உள்ளோம். நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப் பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியிலிருந்து ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மழைக்காலம் முடிந்த பின்பு அந்த பணிகள் தொடங்கும்.

தமிழ்நாட்டில் 200 ஆண்டு காலத்தில் நவம்பர் மாதத்தில் மட்டும் 100 செ.மீ மழை பெய்தது. இது நான்காவது முறை. இந்த அளவிற்கு மழை பெய்யும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. கடந்த பத்தாண்டுக்காலம் அ.தி.மு.க ஆட்சியில் எந்த பணியும் செய்யாதது தான் இந்த அளவு மழை பாதிப்புக்குக் காரணம். இதைச் சொன்னால் அவர்கள் வருத்தப்படுகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories