தமிழ்நாடு

"முல்லைப் பெரியாறு விவகாரத்தில் பொய்யை உண்மைபோல் பேசி திடீரென நல்லவர் வேடமிடும் ஓபிஎஸ்": முரசொலி பதிலடி!

முல்லைப் பெரியாறு அணை குறித்த முழுப் பொய்யை உண்மைபோல் முகத்தை வைத்துக் கொண்டு சொல்லி இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.

"முல்லைப் பெரியாறு விவகாரத்தில் பொய்யை உண்மைபோல் பேசி திடீரென நல்லவர் வேடமிடும் ஓபிஎஸ்": முரசொலி பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முல்லைப் பெரியாறு அணை குறித்த முழுப் பொய்யை உண்மைபோல் முகத்தை வைத்துக் கொண்டு சொல்லி இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். “ஜெயலலிதா பெற்றுத் தந்த உரிமையை தி.மு.க. அரசு கேரளத்துக்குத் தாரை வார்த்துவிட்டது” என்று பேசி இருக்கிறார் பன்னீர்.

திடீரென்று மக்கள் பாதுகாவலர் போல வேடமிட்டு, ஆர்ப்பாட்டத்தை அறிவித்துக் கொண்டு அங்கு பேசும்போது முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தலையும் வாலும் புரியாமல் பேசி இருக்கிறார் பன்னீர். முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் திறக்க, அடைக்க, பராமரிக்க தமிழகத்துக்குத்தான் உரிமை உள்ளது என்றும் அதனை கேரளாவுக்குத் தாரை வார்த்து விட்டதாகவும் அவர் பேசி இருக்கிறார். அப்படி எதுவும் கேரள மாநிலத்துக்குத் தரப்படவில்லை, தரப்படவில்லை என்பது தான் உண்மை!

இதனைப் பல முறை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் விளக்கிய பிறகும் விளங்கிக்கொள்ளும் திறன் பன்னீர் செல்வத்துக்கு இல்லை.

“முல்லைப் பெரியாறு அணையில் எந்தெந்தத் தேதியில் எவ்வளவு தண்ணீரைத் திறக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அந்தத் தீர்ப்பை அடிப்படையாக வைத்து ஒன்றிய நீர்வள ஆணையம் நீர்மட்ட அளவுகளை நிர்ணயம் செய்து மாநிலங்களுக்கு அனுப்பி உள்ளது. அதனை அனைத்து மாநிலங்களும் ஏற்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. ஒவ்வொரு அணைக்கும் எவ்வளவு தண்ணீர் இருக்க வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தான் அக்டோபர் 29 ஆம் தேதி தமிழக நீர்வளத்துறை அலுவலர்களால் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது”என்று அமைச்சர் சொன்ன பிறகும் பன்னீருக்கு என்ன சந்தேகம் வந்தது? ஏன் வருகிறது?

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த ஜோசப் என்பவர் தாக்கல் செய்த வழக்கு இப்போது உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அந்த அடிப்படையில் உச்சநீதிமன்றம் சில உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது. அதனைத்தான் தமிழ்நாடு செயல்படுத்தி வருகிறதே தவிர, கேரளாவுக்குத் தாரை வார்த்து அல்ல!

பன்னீர்செல்வம், பழைய தீர்ப்பை வைத்துச் சொல்கிறார். ஜெயலலிதா உரிமையை நிலை நாட்டினார் என்று சொல்லிக் கொள்கிறார். ஆனால் இன்றைய நிலைமை என்ன என்பதை அவர் அறிந்து பேச வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக ஜோசப் என்பவரும், இந்த அணையின் ஒப்பந்த விவகாரம் தொடர்பாக ‘சுரக்ஷா பப்ளிக் சாரிடபிள் டிரஸ்ட்’ என்ற அமைப்பும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது இப்போது.

இந்த வழக்கு அக்டோபர் 28ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சில உத்தரவுகளை உச்சநீதி மன்றம் பிறப்பித்தது. உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மேற்பார்வைக் குழுவின் ரூல் கர்வ் அறிக்கையின்படி தற்போதைக்கு அணையின் நீர்மட்ட அளவைப் பராமரிப்பதை தமிழ்நாடு அரசும் கேரள அரசும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. அதன்படி கூடுதலாக இருந்த நீர், திறந்துவிடப்பட்டது. தமிழக அரசுதான் திறந்துவிட்டது. அந்தத் தகவல் கேரளாவுக்குச் சொல்லப்பட்டது. அவ்வளவு தான். இதில் என்ன தவறு இருக்க முடியும்?

தமிழ்நாடு அரசு எத்தகைய அளவுக்கு உரிமையை லைநாட்டி வருகிறது என்பதை உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்துள்ள மனுவைப் படித்தாலே புரியும். கடந்த நவம்பர் 9ஆம் நாள் உச்சநீதிமன்றத்தில் கேரள அரசின் சார்பில் ஒரு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீர் மட்டப் பராமரிப்பு அளவு தொடர்பாக தமிழக அரசின் சார்பில் மேற்பார்வைக் ழுவிடம் அளிக்கப்பட்ட உயர் நிலை ‘ரூல் கர்வ்’ நிர்ணய அளவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேரளா சொல்லி இருக்கிறது.

“பருவமழைக் காலத்தின்போது தொடர்ந்து நீர்மட்டம் அதிகமாகி வருகிறது. இதனால் தமிழக அரசின் மூலம், செப்டம்பர் 20ஆம் தேதி தயாரிக்கப்பட்ட142 அடியை நிர்ணயிக்கும் ‘அப்பர் ரூல் கர்வை’மறு பரிசீலனை செய்ய வேண்டும்” என்று உச்சநீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்துள்ளது கேரளா. தமிழகம் எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்பது இதில் இருந்து தெரியவில்லையா?

இன்னொரு விவகாரம், மரம் வெட்டுதல். பேபி அணைப் பகுதியில் வளர்ந்துள்ள மரங்களை வெட்டுவதற்கு தமிழக அரசு, கேரளாவுக்கு கோரிக்கை வைத்தது. எந்தெந்த மரங்கள் வெட்டப்படவேண்டும்என்பதையும் தெளிவாக அதில் சொல்லி இருந்தது. மரங்களை வெட்டுவதற்கான சம்மதத்தினை கேரள வனத்துறையின் முதன்மை வனப்பாதுகாவலர் பெஞ்சமின் தமிழக அரசுக்கு கடிதமாகவும் தெரிவித்துவிட்டார்.

இந்த நிலையில் கேரள அரசியல் கட்சிகள் இதனைப் பெரிதாக்கிவிட்டார்கள். சட்டமன்றத்திலும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இது எனக்குத் தெரியாது என்று சொல்லி இருக்கிறார் கேரள வனத்துறை அமைச்சர். இதனையும் தமிழக அரசு மறைக்கவில்லை. அமைச்சர் துரைமுருகன் அவர்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

“இரண்டு மாநிலங்களுக்கும் இடையிலான பிரச்சினையில் அமைச்சருக்குத் தெரியாமல் ஒரு அதிகாரி கடிதம் எழுத முடியுமா? அமைச்சரின்ஒப்புதலுடன்தான் கடிதம் எழுதினோம் என்று அந்த அதிகாரி சொன்னதாகசெய்திகள் வெளியாகி உள்ளன” என்று சொல்லி இருக்கிறார் அமைச்சர் துரைமுருகன். இது பன்னீருக்குத் தெரியாதா? எந்த உரிமையைத் தாரை வார்த்தோம்?

ஆட்சியில் இருந்த காலத்தில் எல்லாம் எதையும் செய்யாமல், இறங்கிய பிறகு பெரும் புத்திசாலிகளாக நடிப்பதை அந்த இருவரும் நிறுத்திக் கொள்ள வேண்டும்!

banner

Related Stories

Related Stories