முரசொலி தலையங்கம்

”இப்போதான் மக்கள் மீது கவலை வருதோ? முதலில் இதுக்கு பதில் சொல்லட்டும்” - EPS-ஐ கடுமையாக தாக்கிய முரசொலி!

மழைநீர் வடிகால் என்ற பெயரால் பணம் சுருட்டியதற்கு முதலில் பழனிசாமி பதில் சொல்லட்டும் என முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.

”இப்போதான் மக்கள் மீது கவலை வருதோ? முதலில் இதுக்கு பதில் சொல்லட்டும்” - EPS-ஐ கடுமையாக தாக்கிய முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆட்சியில் இருந்தபோதெல்லாம் எதையும் அறுக்கமாட்டாத பழனிசாமிக்கு இப்போதுதான் மக்களைப் பற்றிக் கவலை வந்திருக்கிறது. மழை வெள்ளத்தை பத்து நிமிடம் பார்க்க வந்துவிட்டு, தி.மு.க. ஆட்சியைக் குறை சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

"2015ஆம் ஆண்டு மிகப்பெரிய வெள்ளம் வந்ததே, அதன்பிறகு தடுப்பு நடவடிக்கைகள் என்ன செய்தீர்கள்?" என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது. இதற்குப் பதில் சொல்ல வேண்டியவர் பழனிசாமிதான். அதற்கு என்ன பதில் சொல்வார்?

"மழை, வெள்ளத்தைக் காரணமாகக் காட்டி கொள்ளை அடித்தோம்" என்றுதான் அவரது மனச்சாட்சி சொல்லும். ஆளையே காணவில்லை, முன்னாள் அமைச்சர் வேலுமணியை! அவருக்குத் தெரியும், என்ன நடந்தது என்று!

"ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரால் மொத்தமாக பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதன் மீது விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கைகள் பாயும்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

"கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள் மழைநீர் வடிகாலுக்காக எந்தப் பணிகளையும் மேற்கொள்ளாததே மழைநீர் தேங்கக் காரணம்"" என்று நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியிருக்கிறார். "நாங்கள் ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் 2700 கி.மீ. கால்வாயில் 700 கி.மீ.க்கு மேல் தூர்வாரியுள்ளோம். அதன் காரணமாகத்தான் இந்த அளவுக்கேனும் மழைநீர் வடிந்துள்ளது. வடிகால் சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெறும். வரும் காலங்களில் மழைநீர் தேங்கி நிற்காத வண்ணம் நடவடிக்கைகள் எடுக்கப்படும்" எனவும் கூறி இருக்கிறார்.

"தியாகராயர் நகர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் 90% பணிகளை கடந்த ஆட்சியிலேயே முடித்துவிட்டனர். அதில் தவறுகள் நடைபெற்றுள்ளதா என கண்டறியவும், தவறுகள் இருப்பின் நடவடிக்கை எடுக்கவும் முதல்வரே உத்தரவிட்டுள்ளார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தைச் செயல்படுத்தும் போது மாம்பலம் கால்வாயை அடைத்துள்ளனர். அதனால்தான் மழை நீர் தேங்கியுள்ளது" என்றும் சொல்லி இருக்கிறார் கே.என்.நேரு.

மழை நீர் வடிகால் அமைக்கிறோம் என்று சொல்லி கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஒதுக்கப்பட்ட பணத்தைப் பட்டியலிட்டுள்ளது ‘பூவுலகின் நண்பர்கள்'அமைப்பு!

அ.தி.மு.க. ஆட்சியின் கடந்த ஐந்து ஆண்டுகளில் சென்னையின் வெள்ளத் தடுப்புப் பணிகளுக்காக மட்டும் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் 7,744 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்ட அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது. இதனை முழுமையாக, ஒழுங்காக, ஊழல் இல்லாமல் செய்திருந்தாலே இந்தளவுக்கு தண்ணீர் வெளியேறி மிதந்திருக்காது என்பதுதான் உண்மை!

2016-2017 பட்ஜெட் அறிவிப்பு

எளிதாக பாதிப்புக்குள்ளாகக் கூடிய சென்னை போன்ற கடலோர மாவட்டங்களுக்கு விரிவான பாதுகாப்புத் திட்டம் ஒன்றை இந்த அரசு தயாரித்து வருகிறது. இத்திட்டங்கள் படிப்படியாகச் செயல்படுத்தப்படும். இந்த நிதியாண்டில் நபார்டு வங்கி உதவியுடன் வெள்ளத் தடுப்பு மற்றும் நீர் ஆதாரங்களை மேம்படுத்தும் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக 445.19 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2018-2019 பட்ஜெட் அறிவிப்பு

மழை வெள்ளத்தால் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகும் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் வட சென்னை மற்றும் தென் சென்னை பகுதிகளுக்கான விரிவான வெள்ளத் தடுப்பு வேலைத்திட்டம் முறையே 2,055.67 கோடி ரூபாய் மற்றும் 1,243.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டு மத்திய அரசிடம் நிதி உதவி கோரப்பட்டுள்ளது

2020-2021 பட்ஜெட் அறிவிப்பு

கடலோர பேரிடர் குறைப்புத் திட்டத்தின் அடுத்த கட்டத் திட்டமாக, பெருநகர சென்னையில், விரிவான வெள்ள பேரிடர் தணிப்புத் திட்டத்தினை 3,000 கோடி ரூபாய் மொத்தச் செலவில் செயல்படுத்திட உலக வங்கி மற்றும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடம் தமிழ்நாடு அரசு முன்மொழிந்துள்ளது.

மேற்கூறிய பட்ஜெட் அறிவிப்புகள் மட்டுமின்றி ஒவ்வொரு முறையும் பருவமழைக்கு முன்பாக நீர்வளத் துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்வழிப்பாதைகள் தூர்வார நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு நிதிகளும் எங்கு சென்றன? எத்தனை திட்டங்கள் செயல்டுத்தப்பட்டன?

இந்த ஊழல்களை 1.11.2018 ஆம் நாளே அறப்போர் இயக்கம் சார்பில் அம்பலப்படுத்தினார்கள்.

"சென்னை மாநகராட்சியில் மழைக்கால அவசரப் பணி என்னும் பெயரிலே மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. ஒவ்வொரு டெண்டரும் சென்னை மாநகராட்சியின் விலைப் பட்டியலை விட 30 முதல் 50 சதவிகிதம் வரை அதிகமாக வழங்கப்பட்டுள்ளது" என்று குற்றம் சாட்டியது அந்த அமைப்பு.

"மழைநீர் வடிகால் எங்கெல்லாம் இல்லையோ அங்கெல்லாம் அமைக்கப்போவதாக மழைக்கால அவசரப் பணி என்று கூறி அவசர கால டெண்டர் விட்டுள்ளார்கள். ரூ.440 கோடிக்கு டெண்டர் விட்டார்கள். நாங்கள் மேற்கொண்ட ஆய்வில், 44 தெருவில் 8 தெருவில் மட்டுமே மழைநீர் வடிகால் இல்லை. மழைநீர் வடிகால் இல்லாத பகுதியில் போடுவதற்குப் பதில் ஏற்கனவே நன்கு வேலை செய்யும் பல பகுதிகளில் மழை நீர்வடிகாலை இடித்து மீண்டும் போடும் பணி துவங்கி உள்ளது.

80 சதவிகிதம் மழை நீர் வடிகால் உள்ள சாலைகளில் எதற்காக மழைக்கால அவசரப் பணி என்று கூறி மழை நேரத்தில் பள்ளம் வெட்டவேண்டும்? இதில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது" என்று சொல்லி இருந்தார்கள். இதனை லஞ்ச ஒழிப்புத் துறைக்குப் புகாராகவும் கொடுத்தார்கள். சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க. சார்பிலும், அறப்போர் இயக்கத்தின் சார்பிலும் வழக்காகவும் தாக்கல் செய்யப்பட்டது. மழைநீர் வடிகால் என்ற பெயரால் பணம் சுருட்டியதற்கு முதலில் பழனிசாமி பதில் சொல்லட்டும்!

banner

Related Stories

Related Stories