தமிழ்நாடு

₹8,820 கோடியில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்கள் எங்கே? - அதிமுகவினரை நோக்கி பாயும் கேள்விக்கணைகள்!

மழை நீர் வடிகால்கள் அமைப்பதற்கு மட்டும் இவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்துள்ள நிலையில், இந்தாண்டு நவம்பர் 6ம்தேதி இரவு பெய்த மழைக்கே சென்னை தாங்கவில்லை

₹8,820 கோடியில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்கள் எங்கே? - அதிமுகவினரை நோக்கி பாயும் கேள்விக்கணைகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அ.தி.மு.க.வின் 10 ஆண்டு ஆட்சியில் சென்னையில் மழைநீர் வடிகால்வாய் அமைப்பதில் திட்டமிடல் இல்லாதது, தரமான முறையில் பணிகள் நடைபெறவில்லை. இதுவே, தற்போது நகரில் மழை நீர் உடனே வடியாததற்கு காரணம் என்பது தெரிய வந்துள்ளது. கடந்த ஆட்சியில் ரூ.8,820 கோடியில் மழை நீர்வடி கால்வாய் பணிகள் மேற்கொண்ட நிலையில், சென்னையில் மழை நீர் தேங்கியது எப்படி என்கிற கேள்வி எழுந்துள்ளது.

சென்னையில், கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி பெய்த 31செ.மீ., மழை காரணமாக அடையாறு, கொசஸ்தலையாறு, பக்கிங்காம் கால்வாய், கூவம் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதாலும், சிறிய கால்வாய்களிலும் அதிகபட்ச நீரை கடத்த முடியவில்லை. இதனால், குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் மற்றும் மழை நீர் புகுந்தது. இதனால், சென்னையில் லட்சக்கணக்கானோர் உடமையை இழந்தனர். பலர் உயிரிழந்தனர்.

பல்வேறு வகைகளில் இழப்பு!

இந்தச் செயற்கைப் பெருவெள்ள நிகழ்வுகளால் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு பல்வேறு வகைகளில் இழப்பு ஏற்பட்டது. இந்த நிகழ்வு மீண்டும் ஏற்படாமல் இருக்கும் வகையில், வெள்ள தடுப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அதன்படி, மழைக் காலங்களில் மழைநீர் தேங்காத வண்ணம், அதை பாதுகாப்பாக சேகரித்தல் மற்றும் ஏரிகள் குளங்களில் சென்றடைய இணைப்புகள் ஏற்படுத்துதல், நிலத்தடி நீரை பாதுகாக்க மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்துவது அவசியம் என்று அதிகாரிகள் தரப்பில் இருந்து அறிக்கை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டது. அடையாறு வடிநிலப் பகுதி, கூவம் வடிநிலப் பகுதி, கோவளம் வடி நிலப்பகுதி, கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதி எனப் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இந்தத் திட்டம், ரூ.4,034 கோடியில் செயல்படுத்தப்படும் என்று ஜெயலலிதாவால் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக கூவம் மற்றும் அடையாறு வடிநிலப் பகுதியில், உலக வங்கியின் நிதியுதவியுடன் ரூ.1,101.43 கோடி மதிப்பில் 326 கி.மீ தூரத்துக்கு மழைநீர் வடிகால் வாய்கள் கட்டப்பட்டன. சென்னை மெகா நகர மேம்பாட்டுப்பணி சார்பாக 390 இடங்களின் 125.27 கிலோ மீட்டருக்கு பணிகள் முடிக்கப்பட்டன.

ஸ்மார்ட் சிட்டி சார்பாக 141 இடங்களில் 48.28 கிலோமீட்டருக்குப் பணிகள் முடிக்கப்பட்டன. முக்கியமாக, மத்திய சென்னையில் அடையாறு பணிகளை 406 கிலோமீட்டர் நீளத்துக்கு ரூ.1,387.27கோடி தமிழ்நாடு நீடித்த நிலையான நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் உலகவங்கி நிதியுடன் முழுமையாக முடிக்கப்பட்டன. மத்திய சென்னையில் எவ்வளவு மழை பொழிந்தாலும், இந்த வடிகால்வாய் வழியாக அடையாற்றில் கலந்து மழைநீர் கடலுக்குச் சென்றுவிடும் என்று தெரிவிக்கப்பட்டது. ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் கட்டும் பணி ரூ.1,261 கோடியில் தமிழகத்தில் நீடித்த நிலையான நகரவளர்ச்சி திட்டத்தின் கீழ் உலக வங்கி நிதியுதவியுடன் 450கி.மீ நீளத்துக்கு 39 சிப்பங்களாக மேற்கொள்ளப்பட்டன. 4 நீர்வழி கால்வாய்கள் முறையே அம்பத்தூர் சிட்கோ கால்வாய், நொளம்பூர் கால்வாய், பாடிக் குப்பம் கால்வாய், நந்தம்பாக்கம் கால்வாய் நீர்வழி கால்வாய் 29 சிப்பங்களாக பிரிக்கப்பட்டு பணிகள் நடந்தது.

இந்நிலையில், 2017ம் ஆண்டு பருவ மழை காலகட்டத்தில் மழை தேங்கியதாக ஸ்டீபன் சாலை, கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ரூ.25 கோடியில் 4,180 மீ நீளத்தில் வடிகால் அமைக்க தமிழக அரசின் தமிழ்நாடு நகர்ப் புறசாலை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் எடுத்து கொள்ளப்பட்டு பணிகள் முடிந்தது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.200 கோடியில் மழைநீர் வடிகால் வாய் அமைக்கப்பட்டது. இதை தவிர்த்து ரூ.80 கோடியில் மாம்பலம் கால்வாய் சீரமைப்பு மற்றும் கரையோர வடிகால் பணிகள் முடிக்கப்பட்டன. 2020ல் வட சென்னையில் உள்ள கொசஸ்தலை ஆறு வடிநில கோட்டத்தில் 780 கி.மீ நீளத்தில் மழைநீர் வடிகால் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஆசிய வளர்ச்சி வங்கியின் மூலம் ரூ.3,220 கோடி பெறப்பட்டு, 45 தொகுப்பு பணிகளாக நடைபெற்று வருகிறது.

மழை நீர் வடிகால்கள் அமைப்பதற்கு மட்டும் இவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்துள்ள நிலையில், இந்தாண்டு நவம்பர் 6ம்தேதி இரவு பெய்த மழைக்கே சென்னை தாங்கவில்லை. சென்னையில் தி.நகர், கே.கே.நகர் புரசைவாக்கம், கொசப்பேட்டை, ஓட்டேரி, வில்லிவாக்கம், கொளத்தூர், சைதாப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ள நீர் குளம் போல தேங்கியுள்ளது. மழைநீர் வடிகால் வழியாக வெளியேறவில்லை. மழைநீர் வடி கால்வாய் கட்டியும் அந்த இடத்தில் தண்ணீர் தேங்கியதற்கு, முறையான திட்டமிடல் இல்லாதது மற்றும் தரமான முறையில் பணிகள் நடைபெறாததே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. கடனுதவி மூலம் பெறப்பட்ட நிதியை சரியாக பயன்படுத்தி மழைநீர் வடிகால் கட்டாமல் விட்டுள்ளனர்.

அப்படியே விட்டுவிட்டு சென்றனர்!

மேலும், மழை நீர் வடிகால் பல இடங்களில் கால்வாய்களுடன் இணைக்கப்படவில்லை. இதுவும் முக்கிய காரணங்களில் ஒன்றாக கூறப்படுகிறது. இதனால், மழைநீர் வடிகால் வழியாகச்சென்ற தண்ணீர் அப்படியேஉள்ளே தேங்குவதுடன்,ரிவர்சில் உள்ளே இருக் கும்தண்ணீரும் வெளியே வருகிறது. ஒரு கி.மீட்டருக்குவடிகால் அமைத்துள்ளனர்.ஆனால், அமைத்த வடிகாலை எதனுடன் இணைப்பது என்று தெரியாமல் அப்படியே விட்டு விட்டு சென்றனர். இதனால், மழை நீர் வடிகால் மூலம் தண்ணீர் கால்வாய் வழியாக கடலுக்குசென்று சேருவதற்கு பதிலாக மீண்டும் தெருக்களிலும், குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. இதனாலேயே தற்போது சென்னை மாநகரில் பல இடங்களில் மழை நீரில் தத்தளிக்க காரணம். குறிப்பாக, பல இடங்களில் 3 முதல் 5 அடி வரை தூரத்துக்கு தண்ணீர் நிற்கிறது. இந்த தண்ணீர் வடிய வேண்டுமென்றால் அங்கு கால்வாய் வசதி முறையாக இருக்க வேண்டும். ஆனால், வடிகால்கள் இருந்தும் இணைக்கப்படாததால் தண்ணீர் மழைநீர் வடிகால் கால்வாயில் எந்த பக்கமும் செல்ல முடியாமல் பூமிக்கடியில் தேங்கி நிற்கிறது. அதன் பாதிப்பு வெளியேயும் தெரிகிறது.

மக்கள் கொந்தளிப்பு!

இதனால், பொது மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.நகர் பகுதியில் நவீன கட்டமைப்புகள் ஏற்படுத்துவதாக கூறி தற்போது மழைநீரில் மிதக்க விட்டு விட்டு விட்டதாக அப்பகுதி மக்கள் கொந்தளிப்புடன் உள்ளனர். அடையாறு வடிநில கோட்டத்தில் பணிகளை 406 கிலோமீட்டர் நீளத்துக்கு மழை நீர் வடிகால் ரூ.1387.27 கோடி தமிழ்நாடு நீடித்த நிலையான நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் உலக வங்கி நிதியுடன் முழுமையாக முடிக்கப்பட்ட நிலையில், மத்திய சென்னையில் தற்போது எவ்வளவு மழை பொழிந்தாலும் இந்த வடிகால் மூலம் அடையாறில் வரும் மழைநீர் கடலுக்குச் சென்றுவிடும் என்று அப்போது ஆணையராக இருந்த பிரகாஷ் தெரிவித்தார். ஆனால், தற்போது தண்ணீரில் மூழ்கி இருக்கும் இடங்களில் அடையாறு வடிநில கோட்ட பகுதிகளும் ஒன்றாக உள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு மழைநீர் வடிகால் அமைப்பதில் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து ஆய்வுசெய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories