தமிழ்நாடு

“அம்மா சொன்னது ஞாபகம் இருக்கு..” : புனீத் ராஜ்குமார் நினைவிடத்தில் நடிகர் சூர்யா உருக்கம் !

நடிகர் சூர்யா இன்று புனீத் ராஜ்குமார் நினைவிடத்தில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

“அம்மா சொன்னது ஞாபகம் இருக்கு..” : புனீத் ராஜ்குமார் நினைவிடத்தில் நடிகர் சூர்யா உருக்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த புனீத் ராஜ்குமார் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு சினிமா ரசிகர்கள் மற்றும் இந்திய திரைப் பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவரது மறைவுக்கு ரசிகர்கள், பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து புனீத் ராஜ்குமார் உடல் காண்டீவராவில் உள்ள அவரது தந்தை நினைவிடத்திற்கு அருகிலேயே அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, பிரபு உள்ளிட்டோர் புனீத் ராஜ்குமார் நினைவிடத்தில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்நிலையில் நடிகர் சூர்யா இன்று புனீத் ராஜ்குமார் நினைவிடத்தில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். அப்போது 20 நிமிடம் தலைகுனிந்த நடிகர் சூர்யா, கண்ணீர்விட்டு அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சூர்யா, “இப்படி நடந்திருக்கவே கூடாது. எங்கள் இருவர் குடும்பமும் நெருக்கமான நண்பர்களாக இருந்தோம். என் அம்மா வயிற்றில் நான் 4 மாதக் குழந்தையாக இருந்தபோது புனீத் அவர் அம்மா வயிற்றில் 7 மாதக் குழந்தையாக இருந்தார் என்று எனக்கு என் அம்மா சொன்னது நினைவில் இருக்கிறது.

புனீத்துக்கு இப்படி நடந்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சமூகத்துக்கு அவர் செய்த அற்புதமான விஷயங்களை கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் குடும்பத்தினர், நலம் விரும்பிகளுக்கு ஆறுதலையும், இதைத் தாங்கும் மன உறுதியும் தரவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். அதன்பின்னர் புனீத் ராஜ்குமார் இல்லத்திற்கு சென்ற நடிகர் சூர்யா, அவரது குடும்ப உறுப்பினர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories