தமிழ்நாடு

#T20WorldCup: ஆதிக்கம் செலுத்தும் இங்கிலாந்து.. மீண்டெழும் தென்னாப்பிரிக்கா.. சூப்பர் 12 சுற்று ஹைலைட்ஸ்!

இங்கிலாந்து அணிக்கு டார்கெட் 126. ஜேசன் ராய், மலான், பேர்ஸ்ட்டோ ஆகியோரின் துணையோடு ஒரே ஆளாக நின்று பட்லர் அதிரடியாக வெளுத்தெடுத்திருந்தார்

#T20WorldCup: ஆதிக்கம் செலுத்தும் இங்கிலாந்து.. மீண்டெழும் தென்னாப்பிரிக்கா.. சூப்பர் 12 சுற்று ஹைலைட்ஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் நேற்று இரண்டு போட்டிகழ் நடைபெற்றது. முதல் போட்டியில் இலங்கையும் தென்னாப்பிரிக்க அணியும் மோதின. விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி கடைசி ஓவரில் சென்று திரில் வெற்றி பெற்றது. இன்னொரு போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இதில், இங்கிலாந்து அணி ரொம்பவே எளிதாக வென்றிருந்தது.

இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க போட்டியில் இலங்கை அணியே முதலில் பேட் செய்திருந்தது. ஷார்ஜாவில் இந்த போட்டி நடைபெற்றதால் இலங்கை அணிக்கு பேட்டிங் கொஞ்சம் சிரமமாகவே இருந்தது. ஓப்பனரான நிஷாங்கா மட்டுமே நிலைத்து நின்று ஆடினார். மற்ற எல்லா பேட்ஸ்மேன்களுமே பயங்கரமாக சொதப்பியிருந்தனர். நிஷாங்காவுக்கும் அசலங்காவுக்கும் இடையே மட்டுமே சிறியதாக ஒரு பார்ட்னர்ஷிப் உருவாகியிருந்தது. இந்த கூட்டணி 41 ரன்களை அடித்திருந்த போது அசலங்கா 21 ரன்னில் ரன் அவுட் ஆகி சென்றார்.

இதன்பிறகு, இலங்கை அணியின் மிடில் ஆர்டர் மொத்தத்தையும் சைனாமேன் பௌலரான ஷம்சி வீழ்த்தினார். பனுகா ராஜபக்சே, அவிஷ்கா ஃபெர்ணாண்டோ, வனிந்து ஹசரங்கா என மூன்று பேட்ஸ்மேன்களை வரிசையாக தனது அடுத்தடுத்த மூன்று ஓவர்களில் வீழ்த்தினார். 19 வது ஓவர் வரை நிலைத்து நின்று ஆடிய நிஷாங்கா 72 ரன்னில் பிரிட்டோரியஸின் பந்துவீச்சில் அவுட் ஆனார். நிஷாங்காவின் நிலையான ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 142 ரன்களை சேர்த்தது.

143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியும் கடுமையாக திணறியது. சமீரா, லகிரு குமாரா ஆகியோர் வேகத்தில் மிரட்டினர். இந்த உலகக்கோப்பை தொடரிலேயே நோர்கியாவிற்கு பிறகு அதிக வேகத்தில் வீசும் பௌலர்களாக இவர்களே இருக்கிறார்கள். டீகாக், ரீசா ஹென்ரிக்ஸ் என ஓப்பனிங் விக்கெட்டுகள் இரண்டையும் சமீரா வீழ்த்திக் கொடுத்தார். இலங்கை நிஷாங்கா ஆடியதை போல தென்னாப்பிரிக்காவிற்கு கேப்டன் பவுமா ஆங்கர் இன்னிங்ஸ் ஆடினார். ஒரு எண்ட்டில் விக்கெட்டை விடாமல் நின்று ஸ்ட்ரைக்கை மட்டும் ரொட்டேட் செய்தார். ஆனாலும் இன்னொரு எண்ட்டில் விக்கெட் விழுந்து கொண்டே இருந்தது. குறிப்பாக, லெக் ஸ்பின்னர் வனிந்து ஹசரங்கா ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார். மார்க்ரம், பவுமா, பிரிட்டோரியஸ் என மூன்று முக்கிய வீரர்களையும் வனிந்து ஹசரங்கா அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தியிருந்தார். இலங்கை சார்பில் டி20 உலகக்கோப்பையில் ஹாட்ரிக் எடுக்கும் முதல் பௌலர் எனும் பெருமையை பெற்றார்.

ஆட்டம் முழுவதும் இலங்கை அணியின் கட்டுக்குள் இருந்தது. கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவை. இந்த கடைசி ஓவரிலேயே இலங்கை அணி சொதப்பியது. லகிரு குமாரா கடைசி ஓவரில் ஃபுல் லெந்த்தாக வீச இரண்டு இமாலய சிக்சர்களை பறக்கவிட்டு மில்லர் ஆட்டத்தை தென்னாப்பிரிக்கா பக்கம் திருப்பினார். ரபாடா ஒரு பவுண்டரியை அடித்துக் கொடுக்க தென்னாப்பிரிக்க அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்றது.

இன்னொரு போட்டியில் இங்கிலாந்து அணியும் ஆஸ்திரேலிய அணியும் மோதியிருந்தனர். இரண்டு அணிகளும் பயங்கரமாக முட்டி மோத்க்கூடியவை என்பதால் ஆட்டம் சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒன்சைடு மேட்ச்சாக இங்கிலாந்து அணி சுலபமாக இந்த போட்டியை வென்றது.

இரண்டு அணியிலுமே கிட்டத்தட்ட 8 வீரர்கள் பேட்டிங் ஆடும் திறனுடன் இருந்தனர். அவ்வளவு பெரிய பேட்டிங் லைன் அப்பை வைத்துக் கொண்டும் ஆஸ்திரேலிய அணி தடுமாறவே செய்தது. கேப்டன் ஃபின்ச் மட்டுமே விக்கெட் விடாமல் கொஞ்ச நேரம் நின்று ஆடினார். பகுதி நேர பந்து வீச்சாளரான லிவிங்ஸ்டன் 4 ஓவர்கள் வீசி 15 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். இந்தளவுக்குதான் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் இருந்தது. ஃபின்ச் 44 ரன்னில் அவுட் ஆக கடைசி ஆஸ்டன் ஏகர், கம்மின்ஸ், ஸ்டார்க் ஆகியோர் கொஞ்சம் அதிரடி காட்ட ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 125 ஆக உயர்ந்தது.

இங்கிலாந்து அணிக்கு டார்கெட் 126. ஜேசன் ராய், மலான், பேர்ஸ்ட்டோ ஆகியோரின் துணையோடு ஒரே ஆளாக நின்று பட்லர் அதிரடியாக வெளுத்தெடுத்திருந்தார். 32 பந்துகளில் 71 ரன்கள் 5 பவுண்டரிகள் 5 சிக்சர்கள். ஆட்டம் அத்தோடு முடிந்தது. 11.4 ஓவர்களிலேயே இங்கிலாந்து அணி இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதுவரை ஆடிய அத்தனை போட்டிகளிலுமே முழுமையான ஆதிக்கம் செலுத்தி இங்கிலாந்து அணி வென்றிருக்கிறது.

banner

Related Stories

Related Stories