விளையாட்டு

வரலாறு திரும்புமா.. பதிலடி கொடுக்குமா இந்திய அணி ? - முக்கிய கட்டத்தில் T20 உலகக்கோப்பை போட்டி!

நியுசிலாந்து மற்றும் இந்திய அணி இரண்டையும் எடைபோட்டு பார்த்தால் இரண்டுமே சம அளவிலான பலம் பலவீனங்களை கொண்ட அணியாகவே இருக்கிறது.

வரலாறு திரும்புமா.. பதிலடி கொடுக்குமா இந்திய அணி ? - முக்கிய கட்டத்தில் T20 உலகக்கோப்பை போட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்றின் மிக முக்கிய போட்டியில் இந்திய அணியும் நியுசிலாந்தும் இன்று மோதவிருக்கின்றன. இரண்டு அணிகளும் தங்களது முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வியை தழுவியிருந்தன. இந்நிலையில் இந்த போட்டியில் வெல்லும் அணிக்கே அரையிறுதி வாய்ப்பு அதிகமாகும். எனவே இந்த போட்டியை இரண்டு அணிகளுமே நாக் அவுட்டை போன்றே ஆடவிருக்கின்றனர்.

இந்திய அணியை பொறுத்தவரைக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான கடந்த போட்டியில் பேட்டிங் பௌலிங் என இரண்டிலுமே கடுமையாக சொதப்பியிருந்தது. பேட்டிங்கில் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், சூரியகுமார் யாதவ் என டாப் ஆர்டர் மொத்தமாக சொதப்பியிருந்தது. கேப்டன் விராட் கோலி மட்டுமே நின்று அரைசதம் அடித்திருந்தார். பௌலிங்கில் இன்னும் மோசமாக பெர்ஃபார்ம் செய்திருந்தனர். ஒரு விக்கெட்டை கூட இந்திய பௌலர்களால் வீழ்த்தியிருக்க முடியவில்லை. பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது.

அதேநேரத்தில், பாகிஸ்தானுக்கு எதிராக நியுசிலாந்து அணி கொஞ்சம் கடினம் அளித்திருந்தது. பேட்டிங்கில் சொதப்பியிருந்தாலும் பௌலிங்கில் கொஞ்சம் பாகிஸ்தான் அணியை இழுத்து பிடித்திருந்தது.

நியுசிலாந்து மற்றும் இந்திய அணி இரண்டையும் எடைபோட்டு பார்த்தால் இரண்டுமே சம அளவிலான பலம் பலவீனங்களை கொண்ட அணியாகவே இருக்கிறது.

ஆனால், ஐ.சி.சி தொடர்களில் இந்தியாவிற்கு எதிராக நியுசிலாந்தின் கையே ஓங்கியிருக்கிறது. 2003 க்கு பிறகு ஐ.சி.சி தொடர்களில் இந்திய அணி நியுசிலாந்தை வீழ்த்தியதே இல்லை. 2019 ஓடிஐ உலகக்கோப்பையிலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் இந்திய அணியை நியுசிலாந்து வீழ்த்தியதை ரசிகர்களால் மறக்கவே முடியாது.

வரலாறு திரும்புமா.. பதிலடி கொடுக்குமா இந்திய அணி ? - முக்கிய கட்டத்தில் T20 உலகக்கோப்பை போட்டி!

ஆனால், இரண்டு அணிகளும் கடைசியாக ஆடிய டி20 தொடரில் இந்திய அணியே வென்றுள்ளது. 2020 தொடக்கத்தில் நியுசிலாந்தில் வைத்து நடைபெற்ற அந்த தொடரில் 5-0 என இந்திய அணியே வென்றிருக்கும்.

இவையெல்லாமே கடந்த கால ரெக்கார்டுகள்தான். கிரிக்கெட்டை பொறுத்தவரைக்கும் அணிகள் இன்றைக்கு என்ன செய்யப்போகின்றன என்பதே முக்கியம். உலகக்கோப்பை தொடரில் இந்தியாவை வென்றிடவே செய்யாத பாகிஸ்தான் அணி இந்த உலகக்கோப்பையில் இந்தியாவை எளிதில் வென்றிருக்கிறதே. அதனால், ரெக்கார்டுகள் எல்லாம் பழைய கதையே. நியுசிலாந்துக்கு எதிராக ஐ.சி.சி தொடர்களில் இந்தியா மோசமான ரெக்கார்டை வைத்திருப்பதால் இந்திய அணியால் நியுசிலாந்தை வீழ்த்தவே முடியாது என்று இல்லை.

இன்றைய ஆட்டத்தின் வெற்றி தோல்வியில் டாஸ் மிக முக்கிய பங்கு வகிக்கும். துபாய் மைதானத்தில் சூப்பர் 12 சுற்றில் இதுவரை நடந்திருக்கும் 6 போட்டிகளிலும் சேஸ் செய்த அணிகளே வென்றிருக்கிறது. அதனால் டாஸை வென்று சேஸிங்கை தேர்வு செய்யும் அணிக்கு ஆட்டம் சாதகமாக அமையும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

இந்திய அணிக்கு ஒரு கூடுதல் பௌலிங் ஆப்சன் இல்லாததே மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தது. காரணம், ஹர்திக் பாண்ட்யா காயம் காரணமாக பந்து வீச முடியாமல் இருந்தார். இப்போது ஹர்திக் பாண்ட்யா நன்றாகவே தேறியிருக்கிறார். வலைப்பயிற்சியில் பந்துகளை வீசியிருக்கிறார். எனவே இந்த போட்டியில் ஒன்றிரண்டு ஓவர்களை வீசுவார் என எதிர்பார்க்கலாம். அப்படி அவர் ஒன்றிரண்டு ஓவர் வீசும்பட்சத்தில் அது இந்திய பௌலிங்கிற்கு நல்ல வேரியேசனை கொடுக்கும்.

ஷர்துல் தாகூர்
ஷர்துல் தாகூர்

வேகப்பந்து வீச்சாளர்களில் புவனேஷ்வர் குமார் மோசமான ஃபார்மில் இருக்கிறார். பவர்ப்ளேயில் புவனேஷ்வர்குமார் பந்தை ஸ்விங் செய்யாவிடில் அவரால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. அவருக்கு பதில் ஷர்துல் தாகூரை அணிக்குள் கொண்டு வரலாம் என பல முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்திருக்கின்றனர். ஷர்துல் தாகூர் இப்போது நல்ல ஃபார்மில் இருக்கிறார். இரண்டாம் பாதி ஐ.பி.எல் தொடரில் மட்டும் 16 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார். பெரும்பாலான விக்கெட்டுகள் இக்கட்டான சூழலில் வந்தவை. புவனேஷ்வர் குமாருக்கு பதில் ஷர்துல் தாகூர் உள்ளே வரும்பட்சத்தில் பவர்ப்ளேயில் விக்கெட் எடுக்கும் பொறுப்பு ஷமி மற்றும் பும்ரா மீதே விழும்.

பேட்டிங்கை பொறுத்தவரைக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக மொத்தமாக சொதப்பியதை போல மீண்டும் இந்திய அணி சொதப்ப வாய்ப்பில்லை. ஆனால், இடக்கை வேகப்பந்து வீச்சாளரான ட்ரெண்ட் போல்டிடம் தொடக்கத்தில் இந்திய வீரர்கள் ஜாக்கிரதையாக இருந்தாக வேண்டும். நல்ல தொடக்கம் கிடைத்துவிட்டால் அதை பெரிய ஸ்கோராக மாற்றும் பேட்டிங் லைன் அப் இந்தியாவிடம் இருப்பதால் பெரிய பிரச்சனையில்லை.

நியுசிலாந்து அணியும் வலுவான பேட்டிங் லைன் அப்பை கொண்டிருக்கிறது. 11 வீரர்களில் 8 பேர் பேட்டிங் ஆடும் திறனோடு இருக்கிறார்கள்.பௌலிங்கிலும் ட்ரெண்ட் போல்ட், டிம் சவுத்தி என மிரட்டும் வேகங்களும் இஷ் சோதி, சாண்ட்னர் என நல்ல சுழலையும் வைத்திருக்கின்றனர். கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளர் தேவைப்படும்பட்சத்தில் ஆடம் மில்னே ப்ளேயிங் லெவனுக்குள் கொண்டு வரப்படுவார்.

இரண்டு அணிகளுக்குமே இது ஒரு நாக் அவுட் போட்டியை போன்றதே, இதில் தோற்கும் அணி அரையிறுதி வாய்ப்பிற்காக மற்ற அணிகளின் முடிவை சார்ந்திருக்கும் நிலைக்கு தள்ளப்படும். எனவே இரண்டு அணிகளுமே இந்த போட்டியை வென்று அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்தும் முனைப்புடனேயே களமிறங்கும். வரலாறு திரும்புமா...அல்லது இந்திய அணி பதிலடி கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

banner

Related Stories

Related Stories