விளையாட்டு

T20 உலகக்கோப்பை - பொல்லார்டின் அதிரடி முடிவு.. கடைசி பந்தில் கோட்டைவிட்ட வங்கதேசம்!

வங்கதேச அணியுடனான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

T20 உலகக்கோப்பை - பொல்லார்டின் அதிரடி முடிவு.. கடைசி பந்தில் கோட்டைவிட்ட வங்கதேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் நேற்று வங்கதேச அணியும் வெஸ்ட் இண்டீஸும் மோதியிருந்தனர். கிட்டத்தட்ட இந்த போட்டி ஒரு நாக் அவுட் போட்டியை போன்றதே. இந்த போட்டியில் தோற்கும் அணி இந்த தொடரை விட்டு ஏறக்குறைய வெளியேறிவிடும் என்ற நிலையிலேயே இந்த போட்டி நடைபெற்றது. கடைசி பந்து வரை பரபரப்பாக சென்ற இந்த போட்டியை வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

வெஸ்ட் இண்டீஸ் அணியே முதலில் பேட்டிங் செய்திருந்தது. கடந்த இரண்டு போட்டிகளிலுமே வெஸ்ட் இண்டீஸ் அணி பயங்கர மோசமாகவே பெர்ஃபார்ம் செய்திருந்தது. குறிப்பாக, இங்கிலாந்துக்கு எதிராக 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருந்தது. அதே ஃபார்மையே இந்த போட்டியிலும் தொடர்ந்திருந்தனர்.

கடந்த போட்டியில் டெஸ்ட் ஆட்டம் ஆடியிருந்த சிம்மோன்ஸை இந்த போட்டியில் பென்ச்சில் வைத்துவிட்டு எவின் லீவிஸுடன் யுனிவர்சல் பாஸான கெய்லை ஓப்பனிங் இறக்கியிருந்தார்கள். எவின் லீவிஸ், கெய்ல், ஹெட்மயர் என அதிரடியான வீரர்கள் மூவர் ஆடியும் பவர்ப்ளேயில் வெறும் 29 ரன்களை மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் எடுத்திருந்தது. கெய்ல் 4 ரன்களிலும், லீவிஸ் 6 ரன்களிலும் ஹெட்மயர் 9 ரன்களிலும் அவுட் ஆகியிருந்தனர்.

T20 உலகக்கோப்பை - பொல்லார்டின் அதிரடி முடிவு.. கடைசி பந்தில் கோட்டைவிட்ட வங்கதேசம்!
Kamran Jebreili

ஒரு எண்ட்டில் அறிமுக போட்டியில் களமிறங்கிய சேஸ் மட்டும் நிலைத்து நின்று ஆட, இன்னொரு எண்ட்டில் எந்த வீரராலும் அதிரடியான ஆட்டத்தை ஆட முடியவில்லை. பொல்லார்டே 16 பந்துகளில் 8 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். இந்நிலையில்தான் பொல்லார்ட் ஒரு முக்கியமான முடிவை எடுத்தார். அதாவது அவரால் சரியாக ஆட முடியவில்லை என்பதால் அவுட் ஆகாமல் தானே ரிட்டையர் அவுட் ஆகி வெளியேறினார். பொல்லார்ட் தானாக வெளியேறிய இந்த முடிவு அதிர்ச்சியாக பார்க்கப்பட்டாலும் இந்த முடிவுதான் வெஸ்ட் இண்டீஸிற்கு திருப்பு முனையாக அமைந்தது.

இதன்பிறகு, க்ரீஸுக்குள் வந்த பூரன் 22 பந்துகளில் 40 ரன்கள் அடித்தார். 4 சிக்சர்களை வெளுத்தார். இந்த ஆட்டம்தான் வெஸ்ட் இண்டீஸ் ஒரு கௌரவமான ஸ்கோரை எட்ட காரணமாக அமைந்தது. ஹோல்டரும் கடைசியில் சில சிக்சர்களை அடிக்க, பொல்லார்ட் மீண்டும் க்ரீஸுக்குள் வந்து சிக்சரோடு இன்னிங்ஸை முடித்து வைத்தார். வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்களில் 142 ரன்களை எடுத்தது.

தொடரில் நிலைக்க வேண்டுமாயின் 143 ரன்கள் எடுத்தே ஆக வேண்டும் என்ற சூழலில் வங்கதேசம் களமிறங்கியிருந்தது. லீவிஸோடு கெய்ல் ஓப்பனராக வந்ததை போல வங்கதேசத்துக்கு சர்ப்ரைஸாக நைமுடன் ஷகிப்-அல்-ஹசன் ஓப்பனராக வந்திருந்தார். ஆனால், இந்த மாற்றம் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஷகிப் 9 ரன்களில் ரஸலின் பந்துவீச்சில் ஹோல்டரிடம் கேட்ச் ஆனார். நைமும் 17 ரன்னில் ஹோல்டரின் பந்துவீச்சில் போல்டானார்.

வெஸ்ட் இண்டீஸிற்கு 46 பந்துகளில் 39 ரன்களை எடுத்து சேஸ் ஆங்கர் இன்னிங்ஸை ஆடியதை போல வங்கதேசத்திற்கு லிட்டன் தாஸ் நின்று ஆங்கர் இன்னிங்ஸ் ஆடினார். லிட்டன் தாஸ் - மஹ்மத்துல்லா கூட்டணி கொஞ்சம் சிறப்பாக ஆடியது. ப்ராவோ வீசிய 19 வது ஓவரின் கடைசிப்பந்தில் 44 ரன்களில் லிட்டன் தாஸ் வெளியேறினார்.

இந்நிலையில், கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் வங்கதேசம் இருந்தது. கேப்டன் மஹ்மத்துல்லா க்ரீஸில் இருந்தார். ரஸல் கடைசி ஓவரை வீசினாத். மஹ்மத்துல்லாவால் இந்த ஓவரில் ஒரு பவுண்டரியை கூட அடிக்க முடியவில்லை. இரண்டு இரண்டு ரன்களாக மட்டுமே ஓடினார். கடைசி பந்தில் வங்கதேசத்தின் வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்டது.

ரஸல் ஒரு வெறித்தனமான யார்க்கரை இறக்க அந்த பந்தை மஹ்மத்துல்லாவாக் தொட கூட முடியவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஃபீல்டிங் ரொம்ப சுமாராகவே இருந்தது. அப்படியிருந்தும் வங்கதேசம் நெருங்கி வந்து 3 ரன்களில் தோற்றது மோசமான விஷயமாகவே அமைந்தது. வங்கதேச அணி ஏறக்குறைய இந்த தொடரின் அரையிறுதி வாய்ப்பை இழந்து விட்டது.

T20 உலகக்கோப்பை - பொல்லார்டின் அதிரடி முடிவு.. கடைசி பந்தில் கோட்டைவிட்ட வங்கதேசம்!

போட்டியின் முடிவை தீர்மானிக்கும் யார்க்கர்கள்!

சூப்பர் 12 சுற்றில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளுமே பரபரப்பாக இறுதி வரை சென்றிருந்தது. இரண்டு போட்டியிலுமே பௌலர்கள் வீசிய யார்க்கர் டெலிவருக்களே வெற்றி தோல்வியை தீர்மானித்தன. வெஸ்ட் இண்டீஸ் Vs வங்கதேசம் போட்டியில் கடைசி பந்தில் வங்கதேசத்துக்கு 4 ரன்களை கொடுக்காமல் தடுக்க வேண்டும் என்ற சூழலில் ரஸல் கையிலெடுத்த ஆயுதம் யார்க்கரே. அதை கச்சிதமாக துல்லியமாக வீசியிருந்தார். அந்த பந்தை பேட்ஸ்மேனால் தொட கூட முடியவில்லை. வெஸ்ட் இண்டீஸ் வென்றது.

ஆஃப்கானிஸ்தான் vs பாகிஸ்தான் போட்டியில் 19 வது ஓவரில் ஆஃப்கன் பௌலர் ஜனத் 6 பந்துகளையும் யார்க்கராக வீசுகிறேன் என முடிவெடுத்து 4 சிக்சர்களை வழங்கி சொதப்பியிருந்தார். ஜனத் துல்லியமாக வீசிய இரண்டு யார்க்கர்களில் பேட்ஸ்மேனால் ஒரு ரன்னை கூட அடிக்க முடியவில்லை. ஆனால், யார்க்கர் என முடிவெடுத்து தவறிப்போய் ஃபுல் லெந்த்தில் அவர் வீசிய நான்கு பந்துகளையும் ஆசிஃப் அலி சிக்சராக்கியிருந்தார். டெத் ஓவர்களில் பௌலர்கள் துல்லியமாக யார்க்கர் வீசினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். ஆனால், தவறும்பட்சத்தில் நிச்சயம் பெரிய எதிர் விளைவு ஏற்பட்டுவிடும். ஒரு யார்க்கர் வெல்லும்...ஒரு யார்க்கர் கொல்லும்!

banner

Related Stories

Related Stories