விளையாட்டு

T20 உலகக்கோப்பை - வினையான யார்க்கர்.. நெருங்கி வந்து பாகிஸ்தானிடம் வீழ்ந்த ஆஃப்கானிஸ்தான்!

டி20 உலகக்கோப்பையில் நேற்று பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டியில், பாகிஸ்தான் அணியின் ஆசிஃப் அலி ஒரே ஓவரில் 4 சிக்சர்களை அடித்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார்.

T20 உலகக்கோப்பை - வினையான யார்க்கர்.. நெருங்கி வந்து பாகிஸ்தானிடம் வீழ்ந்த ஆஃப்கானிஸ்தான்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

டி20 உலகக்கோப்பையில் நேற்று பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி நடைபெற்றிருந்தது. கடைசி வரை விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் ஆசிஃப் அலி ஒரே ஓவரில் 4 சிக்சர்களை அடித்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார்.

ஆஃப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபியே டாஸை வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஃப்கானிஸ்தான் அணியின் டாப் ஆர்டர் மொத்தமாகவே சொதப்பியிருந்தது. அத்தனை வீரர்களும் நிலைத்து நின்று ஆட பிரயத்தனப்படாமல் வந்த வேகத்தில் ஒன்றிரண்டு பவுண்டரிக்களை அடித்துவிட்டு அவுட் ஆகினர். 76-6 என்ற நிலையில் ஆஃப்கானிஸ்தான் அணி தட்டுத்தடுமாறி கொண்டிருந்தது. இந்நிலையிலேயே கேப்டன் முகமது நபியும் குல்பதினும் கூட்டணி சேர்ந்தனர். கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்த இந்த கூட்டணி 71 ரன்களை சேர்த்தது. இன்னிங்ஸின் கடைசி 3 ஓவரில் மட்டும் 43 ரன்களை வெளுத்தெடுத்தனர். குறிப்பாக, குல்பதீன் ஹசன் அலியின் ஒரே ஓவரில் 21 ரன்கள் கிடைப்பதற்கு காரணமாக இருந்தார். இவர்களின் ஆட்டத்தினால் ஆஃப்கன் அணி 20 ஓவர்கள் முடிவில் ஓரளவுக்கு சவால் அளிக்கக்கூடிய வகையில் 147 ரன்களை எடுத்தது.

ஆஃப்கானிஸ்தானின் பந்துவீச்சுதான் குறிப்பாக சுழற்பந்துவீச்சுதான் அவர்களின் பலம் என்பதால் ஆட்டம் எப்படியும் இறுதிக்கட்டம் வரை செல்லும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. அதேமாதிரியே 19 வது ஓவர் வரை ஆஃப்கானிஸ்தான் பாகிஸ்தானுக்கு கடுமையாக போட்டி அளித்திருந்தது.

முஜிபுர் ரஹ்மான் - ரஷீத் கான் இவர்கள் இருவரும் வீசிய அந்த 8 ஓவர்கள் பாகிஸ்தானை ஆட்டம் காண வைத்தது. முதல் ஓவரிலிருந்து வரிசையாக நான்கு ஓவர்களையும் ஒரே ஸ்பெல்லில் வீசி முடித்தார். இந்த 4 ஓவர்களில் வெறும் 14 ரன்களை மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டையும் வீழ்த்தினார். அதுவும் முக்கியமான ரிஸ்வானின் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.

முதல் பாதியில் முஜிப் பாகிஸ்தானின் ரன் வேகத்தை குறைக்க, இரண்டாம் பாதியில் எதிர்பார்த்ததை போலவே ரஷீத்கான் அந்த வேலையை செய்தார். 11 வது ஓவரிலிருந்து தொடர்ச்சியாக ஒரே ஸ்பெல்லில் 4 ஓவர்களை வீசிய ரஷீத்கான் 26 ரன்களை மட்டுமே கொடுத்து ஹஃபீஸ் மற்றும் அரைசதம் அடித்திருந்த பாபர் அசாம் என இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இவர்கள் இருவரின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் டெத் ஓவரில் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கூடியது. கடைசி இரண்டு ஓவர்களில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டது. போட்டி யாருக்கு சாதகமாக வேண்டுமானாலும் முடியலாம் என்ற நிலையில் கரீம் ஜனத்தின் கைக்கு பந்து சென்றது.

6 பந்துகளையும் யார்க்கராக/ஒயிடு யார்க்கராக வீசும் எண்ணத்தோடு ஜனத் இருந்தார். டெத் ஓவர்களில் யார்க்கர் என்பது பந்து வீச்சாளர்களின் கூர்மையான ஆயுதமாக இருக்கும். ஆனால், அதை சரியாக செயல்படுத்த வேண்டும். கொஞ்சம் பிசகி தவறு நடந்தாலுமே மிகப்பெரிய எதிர் விளைவை ஏற்படுத்திவிடும். அதுதான் நேற்று ஜனத்துக்கு நடந்திருந்தது.

6 பந்துகளையும் யார்க்கராக வீச முயன்றவர். அந்த ஓவரில் இரண்டே இரண்டு யார்க்கர்களை மட்டுமே சரியாக துல்லியமாக வீசியிருந்தார். அந்த இரண்டு யார்க்கர்களையும் ஆசிஃப் அலியால் தொட கூட முடியவில்லை. ஆனால், மீதமிருந்த 4 பந்துகளிலும் சரியாக யார்க்கர் வீச முடியாமல் ஜனத் தடுமாறியிருந்தார். யார்க்கர் வீச முயன்று சரியாக ஃபுல் லெந்த்தில் ஸ்லாட்டில் வீசியிருந்தார். இந்த நான்கு பந்துகளிலுமே பெரிய சிக்சர்களை பறக்கவிட்டு 19 வது ஓவரிலேயே ஆட்டத்தை ஆசிஃப் அலி முடித்துவிட்டார்.

யார்க்கர் போட நினைத்ததில் எந்த தவறுமில்லை. ஆனால், அது சரியாக அமையாதபட்சத்தில் என்ன செய்ய வேண்டும் என்கிற ப்ளான் B ஆஃப்கானிஸ்தானிடம் இல்லாமல் இருந்தது. அதுதான் இங்கே பிரச்சனையாக அமைந்தது. தவறாக விழுந்த அந்த யார்க்கர்கள் ஆஃப்கானிஸ்தானின் வெற்றி வாய்ப்பை பறித்துவிட்டது. பாகிஸ்தான் தொடர்ச்சியாக தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது.

ஒரே ஓவரில் 4 சிக்சர்கள் அடித்து சூப்பர் ஹீரோவாகிய ஆசிஃப் அலி கடந்த போட்டியிலுமே அட்டகாசமாக ஆடியிருந்தார். நியுசிலாந்துக்கு எதிரான அந்த போட்டியிலுமே 12 பந்துகளில் 27 ரன்களை அடித்து மேட்ச்சை வெற்றிகரமாக முடித்திருப்பார். நேற்றைய போட்டியில் 7 போட்டிகளில் 25 ரன்களை அடித்திருப்பார். பாகிஸ்தான் அணிக்கு ஒரு வெறித்தனமான ஃபினிஷர் கிடைத்திருக்கிறார்.

banner

Related Stories

Related Stories