தமிழ்நாடு

ஒரு வாக்கு, 2 வாக்கு வித்தியாசத்தில் வென்ற பஞ்சாயத்து தலைவர்கள்.. உள்ளாட்சி தேர்தலில் ருசிகரம்!

திருச்சி மாவட்டம் சிறுமருதூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் கடல்மணி என்பவர் வெற்றி பெற்றுள்ளார்.

ஒரு வாக்கு, 2 வாக்கு வித்தியாசத்தில் வென்ற பஞ்சாயத்து தலைவர்கள்.. உள்ளாட்சி தேர்தலில் ருசிகரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கோவையில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தலில் பா.ஜ.கவைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் வெறும் ஒரு வாக்கு பெற்ற நிலையில், சில இடங்களில் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் சிலர் வெற்றி பெற்றுள்ளனர்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள சிறுமருதூர் ஊராட்சியில் டி.ரமேஸ்குமார் என்பவர் ஊராட்சி மன்றத் தலைவராக பதவி் வகித்தார். அண்மையில் ரமேஸ்குமார் உயிரிழந்ததால், ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

மொத்தம் 1,150 வாக்காளர்களை கொண்ட ஊராட்சியில் 3 பேர் போட்டியிட்டனர். இதில் மறைந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் மனைவி கன்னியம்மாள், கடல்மணி என்ற கதிரவன், சத்தியநாதன் ஆகியோர் போட்டியிட்டனர். மொத்தம் 989 வாக்குகள் பதிவாகின.

இதில் கடல்மணி என்ற கதிரவன் 424 வாக்குகளும், கன்னியம்மாள் 423 வாக்குகளும் பெற்றனர். ஒரு வாக்கு வித்தியாசத்தில் கடல்மணி என்ற கதிரவன் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற கடல்மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.

ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் கதிரவன், “மக்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் உழைப்பேன். அரசின் சலுகைகள் கிராமத்திற்கு என்ன கிடைக்க வேண்டுமோ அதை கிடைக்கப்பெற்று அந்த பணியை செவ்வனே செய்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதேபோல, கடலூர் மாவட்டம் மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தில்லைநாயகபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் மகாவதி இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

காஞ்சிபுரம் கருப்படித்தட்டை, காந்தி நகர் 1வது வார்டு உறுப்பினர் தேர்தலில் பிரபு என்பவர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

banner

Related Stories

Related Stories