தமிழ்நாடு

“அக்.5ஆம் நாளை ‘தனிப்பெரும் கருணை’ நாளாக அறிவித்து இருப்பது வகைப்பட்ட பண்பாட்டுப் புரட்சியே!”: முரசொலி!

கருணையும் அன்பும் வற்றிப் போய் - வன்மம் பிரித்தாளும் சதிச்சூழ்ச்சிகளும் முற்றிப் போய்வரும் இக்காலத்தில் ‘தனிப்பெரும் கருணை' நாளை முதலமைச்சர் அறிவித்து இருப்பது ஒரு வகைப்பட்ட பண்பாட்டுப் புரட்சியே!

“அக்.5ஆம் நாளை ‘தனிப்பெரும் கருணை’ நாளாக அறிவித்து இருப்பது வகைப்பட்ட பண்பாட்டுப் புரட்சியே!”: முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய தலையங்கம் (07-10-2021) வருமாறு:

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற அருட்பிரகாச வள்ளலாரின் பிறந்த தினமான அக்டோபர் 5 ஆம் நாளை தனிப்பெரும் கருணை நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்கள். இதனைவிடப் பொருத்தமான மகானும் இருக்க மாட்டார். இதனை விடப் பொருத்தமான பேரும் இருக்க முடியாது!

சாதியும் மதமும் சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி தான் இராமலிங்க வள்ளலார். சாதி மதம் சமயமெனும் சங்கடம்விட்டு அறியேன் சாத்திரச் சோறாடுகின்ற சஞ்சலம் விட்டு அறியேன் - எனப் பாடியவர் அவர். கண்மூடி வழக்கம் எல்லாம் மண்மூடிப் போகக் கடைசி வரை பாடியவர் அவர்.

சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தேன் சாத்திரக் குப்பையும் தணந்தேன் நீதியும் நிலையும் சத்தியப் பொருளும் நித்திய வாழ்க்கையும் சுகமும் ஆதியும் நடுவும் அந்தமும் எல்லாம் அருட்பெருஞ்சோதி என்று அறிந்தேன் - என்று முடிவுக்கு வந்தவர் அவர்.

மருட்சாதி சமயங்கள் மதங்கள் ஆச்சிரம வழக்கம் எலாம் குழிக்கொட்டி மண்மூடிப்போகச் சொன்னவர் அவர். மதமென்றும் சமயமென்றும் சாத்திரங்கள் என்றும் மன்னுகின்ற தேவரன்றும் மற்றவர்கள் வாழும் பதமென்றும் பதம் அடைந்த பத்தர் அனுபவிக்கபட்ட அனுபவங்கள் என்றும் பற்பலவாவிரிந்த விதம் ஒன்றுந்தெரியாது மயங்கினேனே என்று சொன்னவர் அவர். நால் வருணத்தைக்கண்டித்தவர் அவர். மதத்திலே சமய வழக்கிலே மாயை மருட்டிலே இருட்டிலே வீண் பொழுது ஏன் கழிக்கின்றார் என்று கேட்டவர் அவர்.

மதமெனும் பேய் பிடித்தாட வேண்டாம் என்றவர் அவர். மொத்தத்தில், சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே சாத்திரச்சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே ஆதியிலே அபிமானத்து அலைகின்ற உலகீர் அலைந் தலைந்து வீணேநீர் அழிதல் அழகலவே என்றவர் அவர். 1823இல் பிறந்து 1874 இல் மறைந்தவர் வள்ளலார். பிரிட்டிஷ் ஆட்சி இருக்கிறது. இந்த சூழலில் வாழ்ந்தவர் வள்ளலார். கருணையில்லா ஆட்சி கடிந்து ஒழிக என்பது பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான கலகக் குரல். வள்ளலார் பாடல்கள் தொகுக்கப்பட்டு 1867 இல் திருவருட்பா ஆக வெளியானது. கருணை தான் கடவுள் என்றார். கடவுளுக்கு உருவமில்லை என்றார்.

ஒளிதான் கடவுள் என்றார். பல தெய்வங்களையும் ஏற்கவில்லை, பலி கொடுப்பதையும் ஏற்கவில்லை. வேதம், ஆகமம், புராணம், சாத்திரம் ஆகியவற்றை அவர் ஏற்கவில்லை. மூடப்பழக்க வழக்கங்களைக் கடுமையாகக் கண்டித்தார். சமரச சுத்த சன்மார்க்க சங்கம் கண்டார். பசிப்பிணி போக்கும் தர்மசாலையை உருவாக்கினார். சமரச சுத்த சன்மார்க்க ஞானசபையையும் உருவாக்கினார். கோவிலை சபை என்றார். தீபமும் கண்ணாடியுமே அவர் விரும்பிய வடிவங்கள். தன்னைச் சந்தித்த சங்கராச்சாரியார், சமற்கிருதத்தை அனைத்து மொழிகளுக்குமான தாய்மொழி என்று சொன்னபோது, அப்படியானால் ‘தந்தை மொழி தமிழ்’ என்றவர் வள்ளலார்.

இவர் 19 ஆம் நூற்றாண்டில் இன - மொழி - சமூகச் சீர்திருத்தத்தின் கலகக் குரல். எனவேதான் வள்ளலாரை தன்னுடைய முன்னோடிகளில் ஒருவராக பெரியார் குறிப்பிட்டுள்ளார். இராமலிங்கரின் சமரச சன்மார்க்க நெறிகளை அரசியல் களத்தில் ஆரம்ப காலத்தில் இருந்தே பரப்பிய இயக்கம்தான் திராவிட இயக்கம் என்பதை யாரும் மறைக்க முடியாது. ஆறாம் திருமுறை பாடல்களைத் தொகுத்து, ‘இராமலிங்கர் பாடல் திரட்டு’ என்ற நூலை 1940ஆம் ஆண்டுகளிலேயே வெளியிட்டவர் தந்தை பெரியார் அவர்கள்.

“வட நாட்டு சாமியார்களை போற்றும் தமிழனே வடலூர் வள்ளலார் எந்த விதத்தில் தாழ்ந்தவர்?’’ என்று கேட்டவர் பெரியார். “இராமகிருஷ்ணரைப் போற்றும் அன்பனே! சிந்தித்துப் பார். உன் இராமலிங்கர் எந்த விதத்தில் அவரை விடத் தாழ்ந்தவர். அவரை எந்த வடநாட்டானாவது போற்றக் கண்டுள்ளாயா? உன்னுடைய ஒரு நாயன்மாரையாவது வடநாட்டானுக்குத் தெரியுமா? கபிலன் கூறியதென்னவென்று நீ அறிவாயா? ஏன் தம்பி, உனக்கு இவ்வளவு ஆரியப்பற்று? இனியேனும் இன உணர்வு கொண்டெழு தம்பி! உன் இனத்தான் எந்த விதத்திலும் அறிவிலோ, ஆற்றலிலோ தாழ்ந்தவன் அல்ல என்பதை இன்றே உணர்வாய்” என்று எழுதியவர் தந்தை பெரியார்.

அந்த சிந்தனையின் அடிநாதமாகத்தான் இன்று வள்ளலாருக்கு மரியாதை செய்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஏதோ புதிதாக வள்ளலாரைப் பேசுவதாக சிலரும், தங்களைப் பார்த்து வள்ளலாரைப் பேசத் தொடங்கி இருப்பதாகச் சிலரும் சொல்கிறார்கள். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 419 ஆவது வாக்குறுதியாக வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்று சொல்லி இருக்கிறோம். “சாதி சமய நல்லிணக்கத்தைப் பேணும் வகையில் அருட்பிரகாச வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்கப் போதனைகளைப் போற்றும் வகையில்” இது அமையும் என்று சொல்லப்பட்டு உள்ளது.

திடீரென்று இராமலிங்க அடிகளைப் பற்றி தி.மு.க பேச ஆரம்பித்திருக்கிறது என்று நினைக்கக் கூடாது. கருணையும் அன்பும் வற்றிப் போய் - வன்மம் பிரித்தாளும் சதிச்சூழ்ச்சிகளும் முற்றிப் போய்வரும் இக்காலத்தில் ‘தனிப்பெரும் கருணை' நாளை தமிழ்நாட்டின் முதலமைச்சர் அறிவித்து இருப்பது ஒரு வகைப்பட்ட பண்பாட்டுப் புரட்சியே!

அரசியல் - பொருளாதார - சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இணையானது மட்டுமல்ல, அதனையும் விட கூடுதல் அழுத்தம் தரப்பட வேண்டியது பண்பாட்டு ஒழுக்கவியல் விழுமியங்கள் ஆகும். அன்பு - பண்பு - அரவணைப்பு - ஒத்துழைப்பு - கருணை - மதித்தல் - மாற்றார் கருத்துக்கு முக்கியத்துவம் தருதல் - ரத்த பேதம் பார்க்காமை - பால்பேதம் காட்டாமை - மனிதனை மனிதனாக மதித்தல் - அனைத்துயிரும் தன்னுயிர் போல் காத்தல் - வாடிய பயிரைக் காணும் போது வாடுதல் ஆகிய விழுமியங்களிலும் அக்கறை செலுத்தும் அரசாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு அமைந்திருப்பது மக்களின் பயனே!

“கருணையில்லா ஆட்சி கடிந்து ஒழிந்து” உருவாகி இருக்கிறது கருணை மிகு ஆட்சி!

banner

Related Stories

Related Stories