தமிழ்நாடு

“மாற்றுத்திறனாளி சிறுவனை வாசல் வரை தள்ளிச் சென்று வழியனுப்பி வைத்த கலெக்டர்” : சேலத்தில் நெகிழ்ச்சி!

மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு சக்கர நாற்காலி வழங்கியதோடு, அவரை வாசல் வரை தள்ளிச் சென்று வாகனத்தில் ஏற்றி வழியனுப்பி வைத்த சேலம் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

“மாற்றுத்திறனாளி சிறுவனை வாசல் வரை தள்ளிச் சென்று வழியனுப்பி வைத்த கலெக்டர்” : சேலத்தில் நெகிழ்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு முதலமைச்சர் உத்தரவின் பேரில் தமிழ்நாடு முழுவதும் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த குறை தீர்க்கும் நாள் முகாமில் ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது கோரிக்கைகளை மனுவாக அதிகாரிகளிடம் அளித்தனர்.

இந்த நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கீழ்தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக தனி முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் கலந்துகொண்ட சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் மாற்றுத்திறனாளி இடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.

அப்பொழுது சேலம் மாவட்டம் டேனிஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் என்ற கூலித் தொழிலாளியின் மகன் வரதராஜன் என்ற மாற்றுத்திறனாளி தனக்கு சக்கர நாற்காலி வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார்.

மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம், மாற்றுத்திறனாளி வரதராஜனுக்கு உடனடியாக சக்கர நாற்காலி வழங்கிட நடவடிக்கை மேற்கொண்டார். இதனையடுத்து மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மூலமாக சக்கர நாற்காலி வரவழைக்கப்பட்டதை தொடர்ந்து, அந்த மாற்றுத்திறனாளியை மாவட்ட ஆட்சியரே தூக்கி சக்கர நாற்காலியில் அமர வைத்து, அவரே சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு வந்து அவரை ஆட்சியர் அலுவலக நுழைவாயில் வரை விட்டு வாகனத்தில் ஏற்றி வழியனுப்பி வைத்தார்.

மேலும் பல்வேறு உதவிகள் கிடைத்திடவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மாவட்ட ஆட்சியரின் இந்த மனிதநேய மிக்க செயலைக் கண்ட பொதுமக்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

மேலும், மனு அளிக்க வந்த தங்களுக்கு உடனடியாக சக்கர நாற்காலி வழங்கியது மட்டுமல்லாமல், வெளியே வரை வந்து விட்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று மாற்றுத்திறனாளியும் அவரது உறவினர்களும் தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories