தமிழ்நாடு

“கடந்த அ.தி.மு.க அரசின் உத்தரவால் பறிபோன 90 லட்சம் இளைஞர்களின் வேலைவாய்ப்பு” : ‘தினகரன்’ நாளிதழ் வேதனை !

தமிழகத்தில் சுமார் 90 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு, இலவு காத்த கிளி போல் வேலைக்காக காத்திருக்கின்றனர்.

“கடந்த அ.தி.மு.க அரசின் உத்தரவால் பறிபோன 90 லட்சம் இளைஞர்களின் வேலைவாய்ப்பு” : ‘தினகரன்’ நாளிதழ் வேதனை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தினகரன் நாளேட்டில் வெளியாகியுள்ள தலையங்கம் பின்வருமாறு:-

தமிழகத்தில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களில் சமீபகாலமாக வடமாநிலத்தவரின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சுமார் 90 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு, இலவு காத்த கிளி போல் வேலைக்காக காத்திருக்கின்றனர். இங்கு இருப்பவர்களுக்கே வேலைவாய்ப்புகள் இல்லாதபோது, ஒன்றிய அரசின் பணியிடங்களில் வடமாநிலத்தவர்கள் கணிசமாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதிலும் ரயில்வே பணியிடங்களில் வடமாநிலத்தவர்களின் ஆதிக்கம் அதிகம். சில மாதங்களுக்கு முன்பு மதுரை ரயில்வே கோட்டத்தில் நடந்த ரயில்வே பணியிடங்களுக்கான தேர்வில் 90 சதவீதம் வடமாநிலத்தவர்கள் நியமிக்கப்பட்டனர். திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் வேலைக்கு தேர்வு செய்யப்பட்ட 300 பேரில் ஒரு தமிழக இளைஞர் கூட இடம் பெறவில்லை.

ஐசிஎப் ரயில்வே தொழிற்சாலையில் தொழில் பழகுநர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 1765 பேரில் 1600 பேர் வடமாநிலத்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவல்களும் வெளியாகின. இதன் தொடர்ச்சியாக இப்போது உத்தரபிரதேசம் கோரக்பூர் ரயில்வே வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட 54 பேரை, தெற்கு ரயில்வே பணிக்கு நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை தெற்கு ரயில்வே தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் பல தமிழக இளைஞர்களை புறம்தள்ளிவிட்டு, வடமாநிலத்தவர்கள் அப்பணியில் அமர வைக்கப்பட்டுள்ளனர். தெற்கு ரயில்வேயின் காத்திருப்போர் பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள், நியமிக்கப்பட்டுள்ள வடமாநிலத்தவர்களின் மதிப்பெண்களை விட அதிகமாகும். தகுதியுள்ள தமிழக இளைஞர்களை புறக்கணித்துவிட்டு, வடமாநிலத்தவர்களை பணிக்குள் நுழைத்திருப்பதை பலரும் கண்டித்து வருகின்றனர்.

மத்தியில் ஆளும் பாஜ அரசும், அவர்களுக்கு துதிபாடிகளாய் கடந்த ஆட்சி காலத்தை கழித்துவிட்ட அதிமுக அரசும், தமிழக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை காவு கொண்டனர். கடந்த 2019ம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட ஓர் அறிவிப்பில் ‘‘தமிழ் தெரியாதவர்களும் தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதலாம்’’ என தெரிவித்ததால், வடமாநிலத்தவர்களுக்கு வசதியாய் போயிற்று. கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக மின்வாரியத்திற்கு கூட வடமாநில இளைஞர்கள் பொறியாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 269 பொறியாளர்கள் பணியிடங்களை நிரப்பிட, நேர்முக தேர்வு நடந்த போது, அதற்கு 8 தமிழக இளைஞர்கள் மட்டுமே அழைக்கப்பட்டனர்.

ஒன்றிய அரசின் வேலைவாய்ப்புகளில் தமிழக இளைஞர்கள் இடம் பெறக்கூடாது என்பதில் ஒன்றிய அரசு கண்ணும், கருத்துமாய் செயல்படுவது கடந்த சில ஆண்டுகளாகவே கண் கூடாக தெரிகிறது. ‘‘தமிழக வேலைவாய்ப்புகள் தமிழருக்கே’’ என்ற கோஷம் இப்போது தமிழகத்தில் ஒலிக்க தொடங்கியுள்ளதும் அர்த்தமுள்ளதாகவே தெரிகிறது. தமிழக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் நடத்தும் தேர்வுகளில் தமிழக இளைஞர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கும் வகையில் தேர்வு விதிகளை உருவாக்குவதும் அவசியமாகும்.

banner

Related Stories

Related Stories