தமிழ்நாடு

“4 மாதங்களில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : ‘தினத்தந்தி’ நாளேடு புகழாரம் !

பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் ஆகியோர் மறைந்தாலும், அவர்கள் விட்டுச்சென்ற பாதையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பீடுநடைபோட்டு வருகிறார்.

“4 மாதங்களில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : ‘தினத்தந்தி’ நாளேடு புகழாரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தினத்தந்தி நாளேட்டில் வெளியாகியுள்ள தலையங்கம் பின்வருமாறு:-

தேர்தல் பிரசாரத்தின்போது ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் செய்தார். அப்போது ஒவ்வொரு மேடையிலும் ஒருபெட்டியில் மக்கள் குறைகளை, கோரிக்கைகளை போடலாம். ஆட்சிக்கு வந்தவுடன் அவர்கள் பிரச்சினைகளையெல்லாம் 100 நாட்களில் தீர்க்கும்வகையில் ஒரு துறையை உருவாக்குவதுதான் என் முதல் கையெழுத்தாக இருக்கும் என்றார். இதுபோல தேர்தல்அறிக்கையில் 505 வாக்குறுதிகளை வழங்கினார். பிரசார கூட்டங்களில் பேசும்போது, ‘நான் சொன்னதை செய்வேன். செய்வதைத்தான் சொல்வேன். ஏனெனில் நான் கலைஞர் மகன்‘ என்று பெருமைப்பட கூறினார். பல கூட்டங்களில் இந்த உறுதியை அவர் மக்களுக்கு அளித்தார்.

அதுபோல மே 7-ந்தேதி ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தாக அவர் சொன்னபடி ஒரு ஆணையல்ல, 5 அரசாணைகளை வெளியிட்டார். “2 கோடியே 9 லட்சம் அரிசி குடும்பஅட்டைதாரர்கள் அனைவருக்கும் தலா ரூ.4 ஆயிரம் கொரோனா நிவாரண நிதியுதவி, ஆவின்பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, பெண்களுக்கு அரசு நகரபஸ்களில் இலவசபயணம், மக்கள் மனுக்கள் மீது தீர்வுகாண உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறை, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான செலவினத்தை முதல்-அமைச்சர் காப்பீட்டுத்திட்டத்தில் அரசே ஏற்பு“ என்ற 5 கோப்புகளில் கையெழுத்திட்டு சாதனை படைத்தார். ‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறை‘ மூலம், இதுவரை 4 லட்சத்து 57 ஆயிரத்து 645 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, 2 லட்சத்து 29 ஆயிரத்து 216 குறைகளுக்கான மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

இதுதவிர முக்கியமான நடவடிக்கைகளை நிபுணர்களோடு கலந்து ஆலோசித்துதான் முதல்-அமைச்சர் முடிவெடுக்கிறார். கடந்த ஜூலை மாதம் எஸ்தர் டப்லோ, ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன், ஜீன் டிரீஸ், எஸ்.நாராயண் ஆகியோர் அடங்கிய முதல்-அமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டது. இதுபோல பல குழுக்கள் நிபுணர்களை கொண்டு அமைக்கப் பட்டிருக்கின்றன.

தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதையும், கொடுக்கப்படாத திட்டங்களுக்கான அறிவிப்புகளையும் வெளியிடுவதையே தலையாய பணியாக கொண்ட மு.க.ஸ்டாலின், கவர்னர் அறிக்கையில் 51 வாக்குறுதிகள், அவரது பதிலில் 2 வாக்குறுதிகள், பட்ஜெட்டில் 43 வாக்குறுதிகள், வேளாண் பட்ஜெட்டில் 23 வாக்குறுதிகள், அமைச்சர்கள் மூலமாக அவர்கள் துறைசார்ந்த அறிவிப்புகளில் 64 வாக்குறுதிகள், மற்றவகைகளில் 16 வாக்குறுதிகள் உள்பட 202 வாக்குறுதிகளை அரசின் அறிவிப்புகளாகவே வெளியிட்டிருக்கிறார்.

இதில் பல அறிவிப்புகள் மக்களின் நீண்டகால கோரிக்கைகளாக இருப்பது குறிப்பிடத்தக்கது. எடுத்துக்காட்டாக காவல்துறையில் பணிபுரிபவர்கள் தங்களுக்கு வாராந்திர விடுப்புவேண்டும் என்று நீண்டநெடுநாட்களாகவே எதிர்பார்த்து கொண்டிருந்தார்கள். அதை மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு சாத்தியமாக்கியிருக்கிறது.

அந்தவகையில் கடந்த 4 மாதங்களில் 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றிய வேகம், நிறைவேற்றிய சாதனை நிச்சயமாக பாராட்டுக்குரியது. இதேவேகத்தில் போனால், 5 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியதில்லை. ஓரிரு ஆண்டுகளிலேயே அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுவிடும் என்பதில் சந்தேகமே இல்லை. ஒருபுறம் தேர்தல்வாக்குறுதிகளை நிறைவேற்றிய மு.க.ஸ்டாலின், தேர்தல் அறிக்கையில் சொல்லாத 24 திட்டங்களையும் அறிவித்து சாதனை படைத்துள்ளார். எடுத்துக்காட்டாக அரசு பள்ளிக்கூடங்களில் படித்த மாணவர்களுக்கு அனைத்து தொழிற்கல்வி இடஒதுக்கீடு பிரிவிலும் 7.5 சதவீதம் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். அப்படி இடம்பெறும் மாணவர்கள் கட்டணம் எதுவும் செலுத்தவேண்டியதில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இப்படி சொல்லியதையும் செய்து, சொல்லாததையும் செய்துவரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று என்ன அறிவிப்பு வெளியிடப்போகிறாரோ? என்று மக்கள் ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். நிறைவேற்றிய வாக்குறுதிகள் அனைத்தையும் நானே பட்டியல் போட்டு காண்பிப்பேன். 3 மாதங்களுக்கு ஒருமுறை நானே மக்களிடம் இதை சொல்வேன் என்று மு.கஸ்டாலின் உறுதியளித்திருப்பது மக்களுக்கு பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது.

banner

Related Stories

Related Stories