தமிழ்நாடு

செல்போன் டவர் அமைக்க நிலம் கொடுத்தால் ரூ.35 லட்சம்... ஆசையைத் தூண்டி ரூ.7 லட்சத்தை சுருட்டிய கும்பல்!

செல்போன் கோபுரம் அமைத்துத் தருவதாகக் கூறி ரூ.7 லட்சம் மோசடி செய்த கும்பலை போலிஸார் கைது செய்தனர்.

செல்போன் டவர் அமைக்க நிலம் கொடுத்தால் ரூ.35 லட்சம்... ஆசையைத் தூண்டி ரூ.7 லட்சத்தை சுருட்டிய கும்பல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சேலம் மாவட்டம் சித்தனூரைச் சேர்ந்தவர் சகாயமேரி. இவர் சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருகிறார். இவருக்குக் கடந்த சில நாட்களுக்கு முன்பு Insite towers என்ற நிறுவனத்திலிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.

அதில், உங்களுக்குச் சொந்தமான நிலத்தில் செல்போன் கோபுரம் அமைக்க அனுமதித்தால் மாதாமாதம் ரூ.35 ஆயிரம் வாடகை கொடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சகாயமேரியும் இந்த நிறுவனத்தைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

அப்போது, அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தொலைதொடர்புத்துறை அனுமதி பெற அதிகாரிகளுக்கு லட்சம் கொடுக்க வேண்டியுள்ளது. இதற்கு ரூ. 7 லட்சம் வரை பணம் தேவைப்படுகிறது. நீங்கள் கொடுத்து உதவினால், உங்களுக்கு வாடகை தரும்போது சேர்த்துத் தந்துவிடுகிறோம் என அவரது ஆசையைத் தூண்டியுள்ளனர்.

இதை நம்பிய சகாயமேரி அவர்கள் கூறிய வங்கிக் கணக்கில் ரூ. 7 லட்சத்தைச் செலுத்தியுள்ளார். பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து எந்தத் தகவலும் வராததால் பலமுறை அவர்களது எண்ணுக்கு அழைத்தபோது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ளது.

செல்போன் டவர் அமைக்க நிலம் கொடுத்தால் ரூ.35 லட்சம்... ஆசையைத் தூண்டி ரூ.7 லட்சத்தை சுருட்டிய கும்பல்!

இதையடுத்து தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சகாயமேரி இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். வழக்குப் பதிவு செய்த போலிஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து இந்த மோசடியில் 13 பேருக்குத் தொடர்பு இருப்பது போலிஸாருக்கு தெரியவந்தது.

பிறகு இவர்கள் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலிஸார் 13 பேரையும் சுற்றிவளைத்துப் பிடித்தனர். மேலும் அவர்களிடமிருந்த இரண்டு லேப்டாப்கள், 34 செல்போன்கள், 45 சிம்கார்டுகள், 20 வங்கிக் கணக்கு புத்தங்களை போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் இந்தக் கும்பல் யார் யாரிடம் இதேபோன்று கைவரிசை காட்டியுள்ளது என்பது குறித்தும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories