தமிழ்நாடு

“சமூகநீதி நாள் - பெரியாரின் கருத்துகளுக்குச் செயல் வடிவம் கொடுத்த தி.மு.க அரசு” : ‘முரசொலி’ புகழாரம் !

தமிழினத்தின் உயர்வுக்காக உழைத்து வரும் திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிய நாள்! இந்த ஒற்றுமை என்பது, நாள் ஒற்றுமை மட்டுமல்ல, ஆள் ஒற்றுமையும்தான்!

“சமூகநீதி நாள் - பெரியாரின் கருத்துகளுக்குச் செயல் வடிவம் கொடுத்த தி.மு.க அரசு” : ‘முரசொலி’ புகழாரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய தலையங்கம் (17-09-2021) வருமாறு:

செப்டம்பர் 17 - தமிழினத்தின் தலை நிமிர்வுக்காக நூற்றாண்டு காலம் உழைத்த தந்தை பெரியாரின் பிறந்தநாள்!

தமிழினத்தின் உயர்வுக்காக உழைத்து வரும் திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிய நாள்! இந்த ஒற்றுமை என்பது, நாள் ஒற்றுமை மட்டுமல்ல, ஆள் ஒற்றுமையும்தான்!

பெரியாரிடம் இருந்து பிணக்கு கொண்டு பிரிந்து வந்து உருவாக்கிய இயக்கமாக ஆரம்ப கட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் அடையாளப்படுத்தப்பட்டது உண்மை. ஆனால், பெரியாரின் கொள்கைகளை அரசியல் களத்தில் கொண்டு சேர்க்க ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினால்தான் சரியானது என்று நினைத்ததால் தொடங்கப்பட்டதே திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை பேரறிஞரும், முத்தமிழறிஞரும், பேராசிரியரும் பல நேரங்களில் சொல்லி இருக்கிறார்கள். எனவே சமூகக் களத்தில் பெரியாரும், அரசியல் களத்தில் அண்ணாவும் பிரிந்து நின்று போராடியதே 1950 - 60 காலக்கட்டத்து தமிழ்நாட்டு வரலாறாக இருந்தது.

ஆட்சி அமைக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். பெரியார் இருக்கும் திசைநோக்கித்தான் அண்ணாவும், கலைஞரும், நாவலரும், என்.வி. என்னும், அன்பிலும் சென்றார்கள். 1967 தேர்தல் களத்தில் பெரியாரும், அண்ணாவும் எதிரெதிர் திசையில் இருந்தார்கள். அதைக்கூட பலரும் இலாபமாக நினைத்தார்கள். அவர்களின் ஆசையில் மண்ணைத் தூவிவிட்டு பெரியார் மாளிகைக்கு அண்ணா வந்து சேர்ந்தார்.

“என்னைத் தண்டிப்பது போல அண்ணா அவர்கள் திருச்சிக்கு வந்து விட்டார்கள். இவர்களது பெருந்தன்மையால் எனக்கு வெட்கமாகப் போய்விட்டது. தலைநிமிர்ந்து பேசமுடியவில்லை” என்று நாகரசம்பட்டி கல்வி நிலையம் திறப்பு விழாவில் பெரியார் பேசினார். சரி, பெரியாரைச் சென்று அண்ணா சந்திக்காமல் போயிருந்தால் என்ன நடந்திருக்கும்? எதிரிகள் நினைப்பது போல நடந்திருக்குமா? இல்லை! அதையும் பெரியாரே சொல்லி இருக்கிறார்.

மயிலைநாதன் என்று அந்தக் காலத்தில் ஒரு பத்திரிக்கையாளர் இருந்தார். அவர் பெரியாரைச் சென்று சந்தித்து ஒரு பேட்டி எடுக்கிறார். “அண்ணா, உங்களை வந்து சந்தித்திருக்காவிட்டால்...?’’ என்று கேள்வி கேட்கிறார். “அண்ணா திருச்சி வந்து என்னைச் சந்திக்காமல் இருந்தால், நானே அண்ணாவிடம் வலியச் சென்று உங்களை ஆதரிக்கிறேன் என்று மானத்தை விட்டுச் சொல்லவும் தயாராக இருந்தேன்’ என்றாராம். மயிலைநாதனே இதனை எழுதி இருக்கிறார். இந்தக் காவியங்கள் காட்டாத நட்பு இது!

“பெரியாரின் கருத்துகளுக்குச் செயல் வடிவம் கொடுப்போம். அதற்காகத்தான் பதவியில் இருக்கிறோம்” என்று பெரியாரை மேடையில் வைத்துக் கொண்டு சொன்னார் முதல்வர் அண்ணா. ‘பெரியாருக்கு தியாகிகள் பென்ஷன் தரப்படுமா?’ என்று சட்டமன்றத்தில் ஒரு உறுப்பினர் கேட்டபோது, ‘இந்த அரசே அவருக்குக் காணிக்கை’ என்றார் முதல்வர் அண்ணா.

அண்ணாவுக்கு உடல் நலமில்லை, ஆடிப்போனவர் பெரியார்தான். இனி என்ன ஆகுமோ, இந்த இனத்தைக் காக்க யார் இருக்கிறார்கள் என்று நினைத்தார். அவர் மனதில் முதலில் பட்டவர் கலைஞர் தான். அண்ணாவுக்கு அடுத்து கலைஞர்தான் என்பதை அண்ணா இருக்கும் போதே கணித்தவர் பெரியார். முதலமைச்சராக அண்ணா இருக்கும் போதே, அமைச்சர் கலைஞர் படத்தை திட்டக்குடியில் திறந்து வைத்துப் பேசியவர் பெரியார்.

“கலைஞர் கருணாநிதியின் உழைப்பும் முயற்சியும் இல்லாவிட்டால் கழகத்தின் செல்வாக்கு இந்தளவுக்கு உயர்ந்திருக்காது’’ - என்று பேசினார் பெரியார். கலைஞருக்குச் சிலை அமைக்க வேண்டும் என்று முதலில் சொன்னதும் பெரியாரே. அதனை முதல்வர் அண்ணாவை வைத்து திறக்க நினைத்ததும் பெரியாரே. அண்ணாவின் மறைவுக்குப் பிறகு நாவலர் அல்ல, கலைஞரே அந்த இடத்துக்குத் தகுதி வாய்ந்தவர் என்று சொல்லி கலைஞரை ஏற்றுக் கொள்ள வைத்ததும் பெரியாரே!

“அண்ணாவின் புகழ் ஓங்க வேண்டுமானால், அண்ணாவுக்குப் பிறகும் அண்ணா இருப்பது போலவே காரியங்கள் நடக்க வேண்டும். இத்திறமையும் கட்சியைப் பாதுகாக்கும் திறமையும் ஒருங்கே பெற்றவர் கலைஞர்தான்” என்று எழுதிய பெரியார், “காமராசர், தமிழனுக்குக் கண் கொடுத்தார். தி.மு.க ஆட்சியானது தமிழர்களை எழுந்து நடக்க வைக்க வேண்டும்” என்று கட்டளையிட்டார். எழுந்து நடக்க வைத்தார் கலைஞர். எழுச்சி பெற வைத்துக் கொண்டு இருக்கிறார் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்பதே பெரியாரின் இறுதிப் போராட்டம். எல்லா இடங்களிலும் ஓரளவாவது அடிவாங்கும் ஜாதியானது கர்ப்பக் கிரகத்துக்குள் ஓடி ஒளிந்து கொண்டுள்ளது என்று வருந்தினார்.

அதைத்தான், அய்யாவின் நெஞ்சில் உள்ள முள் என்றார் கலைஞர். அந்த முள்ளை, வாழும் கலைஞர் முறித்து இருக்கிறார். சமற்கிருதம் மட்டுமே தேவனுக்குப் புரியும் தேவபாஷையாக இருந்ததை மாற்றி, அன்னைத் தமிழ் ஆலயங்களில் ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. அதற்கான போற்றிப் புத்தகங்களை அரசே வெளியிட்டு உள்ளது. சமூகநீதியை மாநில அளவிலும், ஒன்றிய அளவிலும் நிலைநாட்டத் தேவையான அனைத்து முயற்சிகளையும் முதலமைச்சர் எடுத்து வருகிறார்.

தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவித்த முதலமைச்சர், அதற்கான உறுதிமொழியை வடித்துத் தந்திருக்கிறார். ஆண்டுதோறும் செப்டம்பர் 17 ஆம் நாள் அது தமிழகம் முழுவதும் ஒலிக்க இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக சமூகநீதிக் கண்காணிப்புக் குழுவை அமைத்துள்ளார் முதலமைச்சர்.

“சமூக நீதி அளவுகோலானது சட்டப்படி இருக்கிறது. ஆனால் முழுமையாகச் செயல் படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்காக தமிழ்நாடு அரசால் ஒரு கண்காணிப்புக் குழுவை அமைக்க முடிவெடுத்துள்ளோம். கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல் முறையாக, முழுமையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை இக்குழு கண்காணிக்கும். வழிகாட்டும். செயல்படுத்தும். சரியாக நடைமுறைப்படுத்த வில்லையானால் அக்குழு நடவடிக்கை எடுக்கும். இதற்கான விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். இதில் அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள் இடம் பெறுவார்கள்” என்ற அறிவிப்பு, சமூகநீதி வரலாற்றில் மிக முக்கியமான அடுத்த கட்ட நடவடிக்கையாகும்.

1921 ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சியில் முதல் அரசாணை வெளியிடப்பட்டாலும் அதனை அமல்படுத்துவது போல நடித்து, அமல்படுத்த விடாமல் சில அதிகாரிகள் மட்டம் போட்டார்கள். அதனை பின்னர் அமைச்சர் ஆன எஸ்.முத்தையாதான் கண்டுபிடித்தார். இத்தகைய கண்காணிப்பைத்தான் இன்றைய முதலமைச்சர் அவர்கள் தொடங்கி உள்ளார்கள். இப்போது சொல்லுங்கள் இது பெரியாரின் தி.மு.க. அல்லவா? அரசு அல்லவா? முதல்வர் அல்லவா? அதனால்தான் செப்டம்பர் 17 என்பது நாள் பொருத்தம் உள்ளது மட்டுமல்ல, ஆள் பொருத்தம் உள்ளது என்கிறோம்!

banner

Related Stories

Related Stories