முரசொலி தலையங்கம்

"சமூக நீதி வரலாற்றில் மிக முக்கியமான நாள் இன்று.. நூற்றாண்டு கண்ட வகுப்புரிமை அரசாணை" - முரசொலி தலையங்கம்

இன்று வரை சமூகநீதிக்கு அடித்தளமாக அமைந்துள்ள 'வகுப்புரிமை உத்தரவு' போடப்பட்ட நாள் இன்று!

"சமூக நீதி வரலாற்றில் மிக முக்கியமான நாள் இன்று.. நூற்றாண்டு கண்ட வகுப்புரிமை அரசாணை" - முரசொலி தலையங்கம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய தலையங்கம் (16-09-201) வருமாறு:

செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்! செப்டம்பர் 17- தந்தை பெரியார் பிறந்தநாளும் கழகம் தோன்றிய நாளும்! இரண்டுக்கும் இடைப்பட்ட செப்டம்பர் 16க்கு மட்டும் சிறப்பு இல்லாமல் இருக்குமா? இதோ இருக்கிறது!

செப்டம்பர் 16 ஆம் நாள்தான் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் வகுப்புரிமை உத்தரவு போடப்பட்ட நாள்! அதாவது சமூகநீதி அரசாணைக்கு இன்று 100வயது!

M.R.O. Public ordinary service G.O.no <http://g.o.no/> 613, dated 16.9.1921- என்பது இந்த அரசாணைக்குப் பெயர். அப்போது சென்னை மாகாணத்தில் ஆட்சி செலுத்தி வந்த கட்சி நீதிக்கட்சி எனப்படும் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் ஆகும். நீதிக்கட்சி ஆட்சியின் இரண்டாவது முதலமைச்சராக பொறுப்பேற்ற பனகல் அரசர் ஆட்சியில்தான் இந்த அரசாணை வெளியிடப்பட்டது.

1919 சட்டப்படி இரட்டையாட்சி நடைமுறைக்கு வந்தது. அதன்படி நடந்த முதல் தேர்தலில் சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. முதல் முதலமைச்சராக 1921 ஜனவரியில் முதலமைச்சர் கடலூர் ஏ.சுப்பராயலு தலைமையில் அமைச்சரவை அமைந்தது. பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும் என்று நீதிக்கட்சி உறுப்பினர் ஏ.தணிகாசலம் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது பெண்ணினத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். இதனிடையே உடல்நிலை குன்றியதால் முதலமைச்சர் ஏ.சுப்பராயலு ஜூலை 11 பதவி விலகினார். அதைத் தொடர்ந்து பனகல் அரசர், முதலமைச்சராக ஆனார். அவரது ஆட்சி அமைந்ததும் ஆகஸ்ட் 5ஆம் நாள் சட்டமன்றத்தில் டாக்டர் நடேசனார் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். “பார்ப்பனரல்லாதாருக்கு நியாயமான விகிதாச்சார அளவில் வேலைவாய்ப்புகள் கிடைப்பது இல்லை. எனவே,அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ற வகையில் விகிதாச்சார அடிப்படையில் வேலை வாய்ப்புகள் வழங்க வேண்டும்” என்பதுதான் நடேசனாரின் தீர்மானம் ஆகும். அரசே இதனை ஆணையாக வெளியிட இருப்பதாக முதலமைச்சர் பனகல்அரசர் சொன்னதன் அடிப்படையில் நடேசனார் இந்த தீர்மானத்தை திரும்பப்பெற்றார். அதனடிப்படையில் நீதிக்கட்சி அமைச்சரவையின் முதல் வகுப்புரிமை அரசாணை 16.9.1921 அன்று போடப்பட்டது.

கல்வி, வேலைவாய்ப்பு, சட்டசபை ஆகிய மூன்றிலும் மக்களின் விகிதாச்சார அடிப்படையில் ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் உதயமானது. வெள்ளுடை வேந்தர் தியாகராயரும், சமூக மருத்துவர்களான டி.எம்.நாயரும், நடேசனாரும் இணைந்து உருவாக்கிய அமைப்பு இது.

இதற்கு கால்கோள் நாட்டியவர் நடேசனார். அவர்தான் 1912ஆம் ஆண்டே திருவல்லிக்கேணியில் திராவிடர் இல்லம் தொடங்கினார். ஒடுக்கப்பட்டவர்களுக்கு உணவு விடுதிக்கு வெளியே சோற்றுப் பொட்டலத்தை தூக்கிப் போட்டதைப் பார்த்து நொந்த நடேசனார், ஒடுக்கப்பட்டவர் உட்கார்ந்து சாப்பிடவும், தங்கிப் படிக்கவும் உருவாக்கிய அமைப்பு தான் திராவிடர் இல்லம். இந்த இல்லத்தில் மாதம் தோறும் ஒன்றுபட்ட சிந்தனை கொண்டவர்களை அழைத்து பேச வைத்தார். அதற்கு பேசவந்தவர்கள்தான் தியாகராயரும், நாயரும். அன்றைய சென்னை மாநகராட்சியில் தலைதூக்கிய உயர்சாதி ஆதிக்கத்தை எதிர்த்தவர் நாயர். இப்படி ஒடுக்கப்பட்டவர் உள்ளத்தில் இருந்த எண்ணங்களை ஒருமுகப்படுத்திய மூன்று பேர் உருவாக்கிய அமைப்பே நீதிக்கட்சி. அதன் சிந்தனைகளுக்கு அரசாணை வடிவம் கொடுத்தவர் அன்றைய முதலமைச்சர் பனகல் அரசர்.

"சமூக நீதி வரலாற்றில் மிக முக்கியமான நாள் இன்று.. நூற்றாண்டு கண்ட வகுப்புரிமை அரசாணை" - முரசொலி தலையங்கம்

“எங்களால் புரிந்துகொள்ள முடியாதது என்னவென்றால், ஆங்கிலம் படித்த சிறுபான்மையான ஒரு வகுப்பினர் மட்டும் அரசாங்க அலுவலகங்களில் உயர்ந்தது தாழ்ந்தது ஆகிய எல்லாவற்றையும் ஏகபோகமான உரிமையாக்கிக் கொண்டு பெரும்பான்மை வகுப்பினரில் ஒரு சிலருக்குக் கூட இடம் கொடுக்காமல் இருந்துவருவதே ஆகும்” - என்று இவர்கள் 1916 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் கூறினார்கள். தேசிய வளர்ச்சி என்பது ஒவ்வொரு மனிதனும் இனமும் வகுப்பும் எவ்வளவு முன்னேறி உள்ளது என்பதைப் பொறுத்ததே ஆகும் என்றது அந்த அறிக்கை. ஒவ்வொரு வகுப்பும் தங்களுடைய வளர்ச்சியையும் சுயமரியாதையையும் சம உரிமையையும் பெற்று பணியாற்ற வேண்டும் என்று அந்த அறிக்கை கூறியது. அதுதான் அன்று முதல் இன்று வரை சமூகநீதிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.

இந்த அரசாணை 1928ஆம் ஆண்டு மாறுதல் செய்யப்பட்டது. 1948 ஆம் ஆண்டு ஓமந்தூரார் ஆட்சியில் வலிமைப்படுத்தப்பட்டது. 1970 ஆம் ஆண்டுகளில் உயர்த்தித் தரப்பட்டது. அடுத்து வந்த ஐம்பதாண்டு காலத்தில் உறுதியாக்கப்பட்டது. தமிழக அளவில் மட்டுமல்ல, இன்று அகில இந்திய அளவில் யாராலும் மாற்ற முடியாத தத்துவமாக சமூகநீதி மாற்றப்பட்டு விட்டது. இந்த சமூகநீதிக்கு தமிழ்நாட்டில் குந்தகம் ஏற்படுத்த சில சக்திகள் முனைந்தபோது, அதற்கு அரசியல் சட்ட அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும். தந்தை பெரியாரும் தனயன் அண்ணாவும் நிகழ்த்திய போராட்டங்கள் அதற்குக் காரணம் ஆகும். அதனையே இன்னும் விரிவுபடுத்தும் மண்டல் ஆணையக் கொள்கையை ஒன்றிய அரசின் ஒருமுகப்பட்ட கொள்கையாக மாற்றுவதற்கு முதலமைச்சர் கலைஞர் எடுத்த முயற்சி மிக முக்கியமான அடிப்படையாக அமைந்தது. சமூகநீதிக் காவலராம் வி.பி.சிங் அவர்கள் தனது பதவியை இழந்து சமூகநீதியைக் காத்தார். இன்று பல்வேறு மாநிலங்களில் சமூகநீதிக் குரல் ஒலிக்கிறது. அதற்குக் காரணம் இங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அமைந்துள்ள சமூகநீதி அரசாகும்.

சட்டநீதி - சமூகநீதி - சமதர்ம நீதி ஆகியவற்றை மையமாகக் கொண்ட ‘திராவிட வடிவ ஆட்சி’முறையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அமைத்து நடத்தி வருகிறார்கள். ‘சமூகநீதியின் சரித்திர நாயகர்’ என்று முதலமைச்சரைப் பாராட்டி உள்ளார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். இவை அனைத்தும் வரலாற்றின் தொடர்ச்சியே ஆகும். நீதிக்கட்சி ஆட்சியின் தொடர்ச்சி மட்டுமல்ல, நீதியின் தொடர்ச்சியே இதுதான்!

100 ஆண்டுகளுக்கு முன்னால் போடப்பட்ட உத்தரவால் எத்தனையோ பேருக்கு கல்விச் சாலைகள் திறந்தது. அதன் மூலமாக அந்த தலைமுறையே கல்வி பெற்றது. எத்தனையோ பேருக்கு வேலைகள் கிடைத்தது. அதன் மூலமாக அந்த தலைமுறையே முன்னேறியது. வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு வாசல் திறக்கப்பட்டதால் உள்ளே நுழைந்து முன்னேறிய சமூகம் தமிழ்ச் சமூகம்.

ஆயிரமாண்டு அடக்குமுறையால் அடைக்கப்பட்ட கதவை, ஒரே ஒரு அரசாணையால் உடைக்க முடியும் என்று காட்டிய நாள் செப்டம்பர் 16. அது அரசாணை மட்டுமல்ல, அதுவே அரசு என்பதையும் இன்றைய முதலமைச்சர் மெய்ப்பித்துக் கொண்டு இருக்கிறார்!

banner

Related Stories

Related Stories