முரசொலி தலையங்கம்

“அஞ்சாமையை இலக்கணமாக்கி போராட்டக்களம் அமைத்த போராளியின் பிறந்தநாள்” - முரசொலி தலையங்கம்!

அடக்குமுறைக்கு அஞ்சியும், தடைகளுக்குத் தொடை நடுங்கியும் கிடந்தவர் மத்தியில், அஞ்சாமையை இலக்கணமாக்கி போராட்டக்களம் அமைத்த ஒரு போராளியின் பிறந்தநாள்!

“அஞ்சாமையை இலக்கணமாக்கி போராட்டக்களம் அமைத்த போராளியின் பிறந்தநாள்” - முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளையொட்டி சிறப்புத் தலையங்கம் தீட்டியுள்ளது முரசொலி நாளேடு. முரசொலி நாளேட்டின் இன்றைய (15-09-2021) தலையங்கம் வருமாறு:

செப்டம்பர் 15 - அடிமைச் சொற்களை மட்டுமே உச்சரித்துக் கொண்டிருந்த ஒரு இனத்துக்கு உணர்ச்சிச் சொற்களை உற்பத்தி செய்து கொடுத்த ஒரு பேச்சாளன் பிறந்தநாள்!

பல்லவி பாடுவதும், பாசுரம் பாடுவதும், கழிவிரக்கக் கருத்துக்களை மட்டுமே எழுதிக் கொண்டிருந்த ஒரு இனத்துக்கு மறுமலர்ச்சி எழுத்துக்களை எழுதக் கற்றுக் கொடுத்த ஒரு எழுத்தச்சன் பிறந்தநாள்!

அடக்குமுறைக்கு அஞ்சியும், தடைகளுக்குத் தொடை நடுங்கியும் கிடந்தவர் மத்தியில், அஞ்சாமையை இலக்கணமாக்கி போராட்டக்களம் அமைத்த ஒரு போராளியின் பிறந்தநாள்!

நாடகங்களில் இருண்ட காலமும், திரைப்படங்களில் தசை திரண்ட காலமும்கோலோச்சும் போது, அங்கும் தனது கொள்கைக்கு அரிதாரம் பூசி எடுத்துவந்த கலையுலகக் கர்த்தாவுக்குப் பிறந்தநாள்!

நாடாளுமன்றத்துக்குச் சென்று அந்த நம்பருக்கு கணக்குச் சொல்லும் நபர்களாக அவர்கள் இருந்தபோது, “நான் திராவிட மரபினத்தைச் சேர்ந்தவன், நமது அரசமைப்புச் சட்டத்தின் பல ஒற்றைத் தன்மைகளை எதிர்த்துப் போரிடுகின்ற ஒரு தாக்குதல் முன்னணியாகவே நீங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கருதிக் கொள்ள வேண்டுகிறேன்” என்று பேசும் துணிச்சல், அன்று அந்த ஒற்றை மனிதருக்கே இருந்தது. அந்த ஒற்றை மனிதருக்குப் பிறந்தநாள்!

கட்சி அலுவலகங்களை கதையாடல் மன்றமாக இல்லாமல், எந்நாளும் போர்ப்பயிற்சிப் பாசறையாக அனலாக வைத்திருந்த ஒரு போராட்டக்காரனுக்குப் பிறந்தநாள்! பெரியாரோடு தோள் நின்று - பெரியாருக்கு எதிராகவும் நின்று - பின்னர் பெரியாருக்கே ஆட்சியைக் காணிக்கையாக்கிய ஒரு பெருந்தன்மையாளனுக்குப் பிறந்தநாள்!

1956 ஆம் ஆண்டு விருதுநகரில் தியாகி சங்கரலிங்கனாருக்குக் கொடுத்த வாக்குறுதியை 1968 இல் மறக்காமல் நிறைவேற்றும் வண்ணம், தாய்த் தமிழ்நாட்டுக்கு ‘தமிழ்நாடு' என்று பெயர்சூட்டிய தனயன் பிறந்தநாள்!

தமிழும் ஆங்கிலமும் மட்டுமே போதும் என்று, மும்மொழிக் கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழ் மன்னனின் பிறந்தநாள்!

மரணிக்கும் தருவாயிலும் “இதோ இந்தப் புத்தகத்தை முடித்துவிடுகிறேன்”என்று சொல்லி, படிப்பில் மூழ்கிய ஒரு படிப்பாளியின் பிறந்தநாள் இது!

அதனால்தான் அது கொண்டாடப்படுகிறது. அவர் கொண்டாடச் சொல்லவில்லை. ஆனால் நாடு கொண்டாடுகிறது. கொண்டாட்டங்களை விரும்பாத தலைவன், கொண்டாடப்படுகிறான். அவர் தன்னை அழகுபடுத்திக்கொள்ளவில்லை. தமிழை அழகுபடுத்தினார். அவர் தன்னை, கம்பீரமாக்கிக் கொள்ளவில்லை. தமிழனை கம்பீரமாக்கினார். அவர் தன்னளவில் தன்னிறைவு பெறவில்லை. தமிழ்நாட்டை தன்னிறைவு பெற்ற நாடாக ஆக்கினார். அதனால்தான் ‘அண்ணா' என்பது குடும்பப் பெயராக இல்லாமல், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஒரு தத்துவத்தின் பெயராக ஆகிவிட்டது. அந்தத் தத்துவத்தின் வாரிசான தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி நடக்கிறது.

அண்ணாவின் ஆட்சி நடக்கிறது. ‘நான் முதலமைச்சராக ஆகிவிட்டேன், ஆனால் அதிகாரம் எதுவும் இல்லாத பதவி தம்பி இது' என்று அண்ணா வருந்திய காலம் உண்டு. அவரது உயிலாக அந்த மாநில சுயாட்சிக் கொள்கை இருந்தது. அதனையே, ‘மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி' ஆக வடிவமைத்து முழங்கினார் கலைஞர். இதோ இப்போது சுயாட்சி காட்சியாகவே முதல்வர் மு.க.ஸ்டாலின் காலத்தில் பார்க்கிறோம்!

‘ஒன்றியம்' என்ற ஒற்றைச் சொல்லில் ஆடி நிற்கிறது டெல்லியின் அதிகாரம். அந்தச் சொல் ஒன்றும் புதிதல்ல. சட்டம் சொல்வதுதான். அரசியலமைப்புச் சட்டம் சொல்வதுதான்! அதைத்தான் சொன்னார் முதலமைச்சர்!

“அஞ்சாமையை இலக்கணமாக்கி போராட்டக்களம் அமைத்த போராளியின் பிறந்தநாள்” - முரசொலி தலையங்கம்!

“ஒன்றிய அரசு என்று சொல்வதை ஏதோ சமூகக் குற்றம் போலச் சொல்கிறார்கள். சட்டத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளதோ அதைத்தான் நாங்கள் சொல்கிறோம். நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் முதல் வரி, ‘இந்தியா, அதாவது பாரதம் - மாநிலங்களைக் கொண்ட ஓர் ஒன்றியமாய் இருக்கும்' என்று தான் உள்ளது. அதைத்தான் பயன்படுத்துகிறோமே தவிர, சட்டத்தில் இல்லாததை அல்ல.

ஒன்றியம் என்பது தவறான சொல் அல்ல, மாநிலங்கள் ஒன்று சேர்ந்தது என்பதுதான் பொருள். இன்னும் சிலர் பேரறிஞர் அண்ணா சொல்லாததை, கலைஞர் அவர்கள் சொல்லாததை நான் சொல்லி வருவதாகச் சொல்கிறார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் 1957ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலேயே, ‘இந்திய யூனியன்' என்றுதான் அடையாளப் படுத்தப்பட்டுள்ளது. 1963 சனவரி 25 அன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய பேரறிஞர் அண்ணா அவர்கள், ‘அரசினுடைய இறைமை என்பதற்கு நாம் மேற்கொள்ளும் பொருள் என்ன? அரசியல் இறைமையானது பொதுமக்களிடம் நிலைத்துள்ளது என அரசியலமைப்பின் முகவுரை கூறுகிறது. சட்டம் சார்ந்த இறைமையானது, கூட்டாட்சி ஒன்றியத்துக்கும், அதன் அங்கங்களுக்கும் இடையே (அதாவது மாநிலங்கள்) பிரித்துத் தரப்பட்டுள்ளது' என்றுதான் பேசி இருக்கிறார்.

சமஷ்டி என்ற வார்த்தையை மரியாதைக்குரிய ம.பொ.சி. அவர்கள் பயன்படுத்தி உள்ளார்கள். ‘வெளியேறுக மிகுதியான அதிகாரக் குவிப்பு - வருக உண்மையான கூட்டாட்சி!' என்று மூதறிஞர் ராஜாஜி அவர்களே எழுதி உள்ளார்கள். எனவே ஒன்றியம் என்ற வார்த்தையைப் பார்த்து யாரும் மருளத்தேவையில்லை.” என்று, தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னபோது, பேசுவது அண்ணாவைப் போலவே இருந்தது.

மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யவேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் வந்தபோதும் -குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் வந்தபோதும்-‘நீட்’ தேர்வில் இருந்து விலக்குப் பெறும் மசோதாவைத் தாக்கல் செய்தபோதும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது அண்ணாவைப் போலவே இருந்தது. இது அண்ணாவின் ஆட்சி மட்டுமல்ல, அண்ணாவின் மன்னன் ஆட்சி!

banner

Related Stories

Related Stories