தமிழ்நாடு

“மாநிலத்தில் சுயாட்சி.. மத்தியில் கூட்டாட்சி” : அண்ணாவின் உயிலை வழிமொழிந்த ரகுராம் ராஜன் - ‘முரசொலி’ !

தமிழ்நாடு அரசு செல்லும் திராவிடக் கொள்கை வடிவ ஆட்சியைப் பின்பற்றி பல்வேறு மாநில அரசுகள் செயல்படும் காட்சிகளை இன்று பார்க்கிறோம். அதற்கு இரகுராம் ராசன் போன்றவர்களின் குரல் வலுச்சேர்ப்பதாக அமைந்துள்ளது.

“மாநிலத்தில் சுயாட்சி.. மத்தியில் கூட்டாட்சி” : அண்ணாவின் உயிலை வழிமொழிந்த ரகுராம் ராஜன் - ‘முரசொலி’ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (14-09-2021) தலையங்கம் வருமாறு:

மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி என்பது தமிழினத் தலைவர் கலைஞரின் முழக்கம் ஆகும். அதனை இப்போது இரகுராம் ராசனும் முழங்குகிறார். திராவிட இயக்கத்தின் நூற்றாண்டுக் குரல், இன்று இந்தியா முழுமைக்கும் எதிரொலித்துக் கொண்டு இருக்கிறது!

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவரான இரகுராம் ராசன் எழுப்பியுள்ள குரல் என்பது காலத்தின் குரலாகும். “இந்தியா மிகப்பெரிய நாடு என்பதால் ஒன்றிய அரசே அனைத்து மாநிலங்களையும் நிர்வகிப்பது கடினம். ஒன்றிய அரசிடம் அதிகாரங்கள் இருக்கட்டும். ஆனால், அதைவிட அதிக அதிகாரங்கள் மாநிலங்களிடம் இருக்கட்டும். மாநிலங்களிடம் கூடுதல் அதிகாரம் இருந்தால் தான் ஜனநாயகம் வலுவடையும். பொது மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டால்தான் மக்களின் தேவைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்” என்பது இரகுராம் ராசனின் குரலாகும்!

இதனை திராவிட இயக்கம் 100 ஆண்டுகளாகச் சொல்லி வருகிறது. நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான டி.எம்.நாயர் அவர்கள் இது பற்றி விரிவாக எழுதி இருக்கிறார். டி.எம்.நாயர், ஜஸ்டிஸ் இதழில் (1917 நவம்பர் 9) எழுதுகிறார்: “கேரளம், கன்னடம், ஆந்திரம், தமிழ் பிரதேசங்கள் அடங்கியதுதான் தென் இந்தியா. இவைகள் சேர்ந்ததே இன்றைய சென்னை மாகாணம்.

இந்தத் தென் இந்தியாவில் வாழும் மக்கள் ஒரே கூட்டத்தவர் (திராவிடர்). இந்த நான்கு சகோதரர்கள் பேசும் மொழிகள் ஒரே மூலத்திலிருந்து பிரிந்தவை. இந்தத் தென் இந்தியா, இந்தியாவின் மத்திய அரசிலிருந்து விலகி, நான்கு பிரதேசங்களும் சேர்ந்த கூட்டு அரசு ஏற்பட வேண்டும். எங்கள் தென்னிந்தியர் விடுதலைக் கழகம் அதற்காகவே ஏற்பட்டது, அதற்காகவே பாடுபடப்போகிறது” (க.திருநாவுக்கரசு, நீதிக்கட்சி வரலாறு பக்கம் 201) என்று டி.எம்.நாயர் எழுதி இருக்கிறார்.

மாநில சுயாட்சி, அதிக அதிகாரங்கள், மத்தியில் அதிகாரம் குவிவது ஆகியவை குறித்தும் டி.எம்.நாயர் அதிகம் பேசி உள்ளார். ‘சுய அதிகாரம் பெற்ற மாநிலங்களைப் பெற்ற பிறகு, இப்போது இருப்பதை விட மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் அளிப்பது நமது அடுத்த கட்ட நடவடிக்கையாக இருக்கும்’ என்றும் ‘கூட்டாட்சி முறையின் அடிப்படையில் மட்டுமே இந்தியாவில் ஒரு முறையான சுய அரசு நடைமுறையை உருவாக்கி வளர்க்க முடியும் என்பதையும் அதற்கு சுயாட்சி அதிகாரம் பெற்ற மாகாண அரசுகள் முதன்மையான நிபந்தனை என்பதையும் நாம் தெரிவித்துள்ளோம்’ என்றும் ‘ஜஸ்டிஸ்’ இதழில் எழுதினார்.

‘பதவியில் இருக்கும் ஆளுநர்களுக்கு மற்றவர்களின் நிலைமையைக் கண்டறிய வாய்ப்பு இல்லை’ என்று இவர்தான் முதலில் சொன்னார். அதேபோல், ‘மாநிலங்களை நிருவாக வசதிக்காக மாற்றி அமைக்க வேண்டும், அதுவும் மொழி அடிப்படையில் மாற்றி அமைக்க வேண்டும்’ என்று 1917இல் சொன்னார்.

‘தற்போது இந்திய அரசிடம் குவிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும். இவற்றில் பலவற்றை மாநில அரசுகளின் பொறுப்பில் விட வேண்டும். இதை நிறுவினால்தான் கூட்டாட்சி முறை வெற்றி பெற முடியும். மாநில அரசுகள் தங்கள் கீழ் இருக்கும் அனைத்துத் துறைகளிலும் தன்னாட்சி பெற்றவையாக இருக்க வேண்டும் என்கிறார். ‘வருகிற அதிகாரம் அக்கிரகாரத்துடன் நிற்காமல் எங்கள் வீதிகளுக்கும் வரட்டும்’ என்றார் டி.எம்.நாயர்.

இதுதான் இந்திய விடுதலையின் போது அதிக அதிகாரங்கள் கொண்ட மாநிலங்களை அமைப்பது என்ற காங்கிரசு முழக்கமாக மாறியது. ஆட்சியில் அமர்ந்த காங்கிரசு இதனைச் செய்து தர மறுத்தபோது, பேரறிஞர் அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உரிமை முழக்கமாக மாற்றினார்.

‘தி.மு.க.வின் இன்றைய முக்கியக் குறிக்கோள் என்ன?’ என்று பேரறிஞர் அண்ணாவிடம் 1965 ஆம் ஆண்டு கேட்கப்பட்ட போது, “உண்மையான கூட்டாட்சி மலர இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தி அமைத்தலும், மாநிலங்களுக்கு கூடுதலான சுயாட்சி உரிமையைப் பெறுதலும்’’ என்று சொன்னார்.

1967 தேர்தலின் போது கழகம் வெளியிட்ட அறிக்கையில், “தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரில் நாட்டில் ஒரு பகுதி இன்னொரு பகுதியின் மீது ஆதிக்கம் செலுத்தாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை தி.மு.க ஏற்றுக்கொண்டுள்ளது” என்று அறிவிக்கப்பட்டது. ‘தில்லியில் குவிந்துள்ள அதிகாரங்களை எல்லாம் மாநிலங்களுக்கு மாற்றவேண்டும் என்ற தத்துவத்திலே பிறந்ததுதான் மாநில சுயாட்சி’ என்று முதல்வர் அண்ணா அவர்கள் பேசினார்கள். அன்றைய தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி., “இதுதான் அண்ணாவின் உயில்’’ என்றார். அதைத்தான் இன்று இரகுராம் ராசன் வழிமொழிந்துள்ளார்.

அண்ணாவின் மறைவுக்குப் பிறகு முதல்வராகப் பொறுப்பேற்ற கலைஞர் அவர்கள், பி.வி.இராசமன்னார் தலைமையில் மாநில அதிகாரங்களை வலுப்படுத்துவதற்கான குழுவை அமைத்தார். இந்திய ஒற்றுமை பாதிக்கப்படாத வகையிலும், அதே நேரத்தில் மாநிலங்களை வலுப்படுத்தும் வகையிலும் தனது அறிக்கையை இந்தக் குழு கொடுத்தது. இதனை அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பி வைத்தார் முதல்வர் கலைஞர். டெல்லியில் நடந்த தேசிய ஒருமைப்பாட்டுக் குழுக் கூட்டத்திலும் முதல்வர் கலைஞர் இதனை வலியுறுத்திப் பேசினார்.

1974 ஏப்ரல் 16 - தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மகத்தான நாளாகும். அத்தகைய தீர்மானத்தைத்தான் இன்று இரகுராம் ராசன் வழிமொழிந்திருக்கிறார். இதன் தொடர்ச்சியாக 2021 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையிலும் தி.மு.க மாநில சுயாட்சிக் கொள்கையை ஓங்கி ஒலித்துள்ளது. நிதி உரிமைகள் - கல்வி உரிமைகள் - சமூகநீதி உரிமைகள் - மொழி உரிமைகள் - ஆளுநரால் தரும் நெருக்கடிகள் - இந்தி ஆதிக்க எதிர்ப்பு - நீட் தேர்வு நுழைப்பு - சுற்றுச்சூழல் நெருக்கடிகள் - என்ற அனைத்து விதமான ஒன்றிய அரசின் நெருக்கடிகளுக்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகமும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசும் குரல் கொடுத்து வருகிறது. இந்தக் குரலானது இன்று அகில இந்திய அளவில் இருக்கும் மற்ற கட்சிகளாலும் எதிரொலிக்கும் குரலாக, வரவேற்கும் குரலாக மாறிக் கொண்டு இருக்கிறது.

தமிழ்நாடு அரசு செல்லும் ‘திராவிடக் கொள்கை வடிவ ஆட்சி’யைப் பின்பற்றி பல்வேறு மாநில அரசுகள் செயல்படும் காட்சிகளை இன்று பார்க்கிறோம். அதற்கு இரகுராம் ராசன் போன்றவர்களின் குரல் வலுச்சேர்ப்பதாக அமைந்துள்ளது.

banner

Related Stories

Related Stories