
திருச்சி பால்பண்ணை பகுதியைச் சேர்ந்தவர் நிஷாந்த். பிரபல ரவுடியான நிஷாந்த் மீது வழிப்பறி, கொள்ளை மற்றும் கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த வாழைக்காய் விஜய் என்ற பிரபல ரவுடிக்கும், நிஷாந்துக்கும் தொழில் போட்டி காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், நிஷாந்த் மற்றும் அவரது கூட்டாளிகள், கடந்த வருடம் வாழைக்காய் விஜய்யை நடுநோட்டில் ஓட ஓட விரட்டி கொலை செய்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட நிஷாந்த் கடந்த ஒருவருடம் சிறையில் இருந்தநிலையில், கடந்த மாதம் வெளிவே வந்தார்.
நிஷாந்த் வெளியே வந்த தகவல் அறிந்த வாழைக்காய் விஜய்யின் கூட்டாளிகள், அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளனர். அதன்படி கடந்த 10 நாட்களாக திட்டம் போட்டு, ராமகிருஷ்ணா மேம்பாலத்தின் கீழே நடந்து சென்றுகொண்டிருந்த நிஷாந்தை அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்தனர்.
இதனையடுத்து கொலை செய்த 9 பேரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், “எங்களுடைய நண்பரை கொலை செய்தவனைக் கொன்றால்தான், அவன் ஆன்மா சாந்தி அடையும். எனவே எங்கள் நண்பனைக் கொன்றதுபோல அவனையும் வெட்டிப் படுகொலை செய்தோம்” என அதிர்ச்சி தகவலைத் தெரிவித்துள்ளனர்ர். இந்தச் சம்பவம் திருச்சி பால்பண்ணை பகுதி மக்களிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.




