தமிழ்நாடு

“சமூகநீதியை கண்காணிக்க குழு; சரியாக நடைமுறைப்படுத்தாவிட்டால் நடவடிக்கை”: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

தமிழகத்தில் சமூக நீதியை கண்காணிக்க குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

“சமூகநீதியை கண்காணிக்க குழு; சரியாக நடைமுறைப்படுத்தாவிட்டால் நடவடிக்கை”: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் சமூக நீதியை கண்காணிக்க குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சமூகநீதி அரசாணையின் நூற்றாண்டு நாளையொட்டி இன்று முக்கிய அற்விப்பை வெளியிட்டுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திராவிட இயக்கம் என்பது சாமானியர்கள் உயர்வதற்காக, சாமானியர்களால் சரித்திரம் படைக்கப்பட்ட - தொடர்ந்து படைக்கப்படும் உயரிய வரலாற்றைக் கொண்டது' என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டார்கள். இந்த வரலாறு இன்று நேற்றல்ல; நூற்றாண்டுத் தொடர்ச்சியைக் கொண்டது ஆகும்.

1916ம் ஆண்டு தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரால் தொடங்கப்பட்ட நீதிக்கட்சியானது அன்றைய சென்னை மாகாணத்தில் சமூகநீதி, தீண்டாமை ஒழிப்பு, ஒடுக்கப்பட்டோர் உரிமை, சுயாட்சிக் கருத்துகள் ஆகியவற்றுக்காக குரல் கொடுத்தது. 1920-ஆம் ஆண்டு நடந்த முதல் தேர்தலில் வென்ற நீதிக்கட்சி ஆட்சியானது இதனை பல்வேறு அரசாணைகள் மூலமாகச் செயல்படுத்தியது. அதில் மிகமிக முக்கியமான அரசாணை வெளியிடப்பட்டு இன்றுடன் 100 ஆண்டுகள் ஆகிறது. அதுதான் தமிழ்ச்சமுதாயத்தின் பல தலைமுறைகளை மாற்றிய சமூகநீதி அரசாணை ஆகும்.

16.9.1921ஆம் நாள் அன்றைய நீதிக்கட்சி ஆட்சியின் முதலமைச்சரான பனகல் அரசர் காலத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. “அரசுப்பணிகளில் குறிப்பிட்ட வகுப்பினர் ஆதிக்கம் செலுத்தும் நிலை இருக்குமானால் அது நாட்டுக்குப் பெரும் தீங்கை விளைவிக்கும். அனைத்துச் சமூகத்தினரும் ஏற்றம் பெறும் வகையில் மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு பணியிடங்கள் வழங்கப்பட வேண்டும்” என்ற அடித்தளத்தில் அந்த அரசாணை வெளியிடப்பட்டது.

இதுதான் சமூகநீதிக்கான அடித்தளம் ஆகும். அதிலிருந்துதான் சமூகநீதி வரலாற்றின் மாபெரும் பயணம் தொடங்கியது. நூறு ஆண்டுகள் கழித்து செப்டம்பர் 16ம் நாளான இன்று வெள்ளுடை வேந்தர் தியாகராயர், சமுதாய சீர்திருத்த மருத்துவர்களான நடேசனார், டி.எம்.நாயர், கடலூர் ஏ.சுப்பராயலு, பனகல் அரசர், அமைச்சர் எஸ்.முத்தையா, பி.டி.இராஜன் ஆகியோரை நினைத்துப் பார்க்கிறேன். இவர்கள் உள்ளிட்ட பெருமக்கள் அன்று தொடங்கி வைத்த சமூகநீதிப் புரட்சிதான் தமிழ்ச்சமுதாயத்தின் இலட்சக்கணக்கானவர்கள் இல்லங்களில் விளக்கேற்றக் காரணமாக அமைந்தது.

இந்த உத்தரவை எப்படிச் செயல்படுத்த வேண்டும் என்ற தரவரிசைப் பட்டியலைப் போட்டுக் கொடுத்தார் அன்றைய அமைச்சர் எஸ்.முத்தையா அவர்கள். அதனால் தான், 'இனிப் பிறக்கும் பிள்ளைகளுக்கு முத்தையா என்று பெயர் சூட்டுங்கள்' என்றார் தந்தை பெரியார் அவர்கள்.

இந்த சமூகநீதி அரசாணையானது தமிழ்நாடு எல்லையைக் கடந்து இந்தியா முழுவதும் இன்று வெற்றி நடைபோட்டு வருகிறது. இத்தகைய அகில இந்தியப் புரட்சிக்குக் காரணமான அனைவரையும் இந்த நேரத்தில் வணங்குகிறேன். திராவிட முன்னேற்றக் கழக அரசானது, இத்தகைய சமூகநீதிப் பயணத்தின் அடுத்தகட்டத்தை இன்று முதல் அறிமுகம் செய்ய இருக்கிறது.

சமூகநீதி அளவுகோலானது சட்டப்படி இருக்கிறது. ஆனால் முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்காக தமிழ்நாடு அரசால் ஒரு கண்காணிப்புக் குழுவை அமைக்க முடிவெடுத்துள்ளோம். கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல் முறையாக, முழுமையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை இக்குழு கண்காணிக்கும்; வழிகாட்டும்; செயல்படுத்தும்.

சரியாக நடைமுறைப்படுத்த படாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு இக்குழு பரிந்துரை செய்யும். இதற்கான விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். இதில் அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள் இடம்பெறுவார்கள். சமூகநீதி அரசாணையின் நூற்றாண்டு நாளில் சமூகநீதிக் கண்காணிப்புக் குழுவை அமைப்பதில் பெருமை அடைகிறேன்.” என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories