
பெரம்பலூர் பாரதி நகரில் வசித்து வரும் கார் ஓட்டுநர் மகள் ரம்யா (23). கடந்த சில ஆண்டுகளாக, எளம்பலூர் சாலையைச் சேர்ந்த செல்வா என்கிற நீலகண்டன் (26) ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். அந்த பெண் தற்போது M.Sc., படித்து முடித்து தனியார் பள்ளியில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் நீலண்டன் அந்த பெண்ணின் வீட்டிற்கு நேற்று இரவு, தனது நண்பர் பெரம்பலூர் ரோஸ் நகரைச் சேர்ந்த சத்தியமூர்த்தி (24) என்பவருடன் சென்று, அவரை தனக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று கூறி தகராறு செய்துள்ளார். மேலும் கத்தியை காட்டி மிரட்டியதோடு மட்டுமில்லாமல், பெண்ணின் வீட்டின் வாசல் முன்பு பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் நகர போலிஸார் வழக்கு பதிந்து செல்வா என்கிற நீலகண்டன் மற்றும் சத்தியமூர்த்தி ஆகிய இருவரையும் அவருடன் தொடர்புடைய மேலும் சிலரை தேடிவருகின்றனர்.
மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய நீலகண்டன், சத்தியமூர்த்தி உள்ளிட்ட அனைவரும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தினால் பாரதிநகர் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.








