தமிழ்நாடு

“திராவிட மாடல் ஆட்சியின் மாண்பை நாளுக்கு நாள் உயர்த்திக் காட்டும் மு.க.ஸ்டாலின்” - கி.வீரமணி பாராட்டு!

“மாநில உரிமை, சமூகநீதியை மட்டுமல்ல - அரசமைப்புச் சட்டத்தினையே பாதுகாப்பது தி.மு.க. அரசே!” என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

“திராவிட மாடல் ஆட்சியின் மாண்பை நாளுக்கு நாள் உயர்த்திக் காட்டும் மு.க.ஸ்டாலின்” - கி.வீரமணி பாராட்டு!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஒன்றிய அரசின் குடியுரிமைச் சட்டம் இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது; இது தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வரவேற்கத்தக்கது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாடு சட்டமன்றம் அதன் ஒப்பற்ற முதலமைச்சரான ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்’ மு.க.ஸ்டாலின் அவர்களது ஆளுமையில், ஆட்சியில் ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டு மக்கள் நலன் காக்கும் சட்ட திட்டங்களை இயற்றி, வரலாறு படைப்பதுடன், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் (பதவிப் பிரமாணம் எடுத்தபடி) பல்வேறு கூறுகளையும் - அது வற்புறுத்தும் விழுமியங்களையும் பாதுகாக்கும் வழியிலும் சிறப்பாகச் செயல்பட்டு ஜனநாயகத்தின் மாண்பைப் பெரிதும் காப்பாற்றி வருகிறது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் (Preamble) உள்ள ‘மதச்சார்பின்மை’, ‘ஜனநாயகக் குடிஅரசு’ ஆகிய தத்துவங்களுக்கு எதிராக, குடியுரிமை வழங்குவதில் மதத்தைப் புகுத்தி, ஒன்றிய அரசு இயற்றிய குடியுரிமை திருத்தத் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, நேற்று (8.9.2021) முதலமைச்சர் அவர்களால் முன்மொழியப்பட்டு, அவையில் ஏற்கப்பட்டு நிறைவேறிய தீர்மானம், மத நல்லிணக்கம், சமூகநீதி, மதச்சார்பின்மையை முன்னெடுக்கும் ஒரு முக்கிய தீர்மானமாகும்!

சிறுபான்மைச் சமூகத்தவரான முஸ்லிம் மக்களைத் தனிமைப்படுத்தி, அவர்களது குடியுரிமையைச் சுற்றி வளைத்துப் பறிப்பதற்கான ஆபத்து அச்சட்டங்களுக்குள் புதைந்திருப்பதனால், நாடு தழுவிய அளவில் அவர்களும், முற்போக்கு கருத்துள்ள அத்துணைக் கட்சியினரும் பெருந்திரள் மக்கள் ஆர்ப்பாட்டத்தை, கண்டனத்தை நடத்தினர். (அப்போது கொரோனா தொற்றின் வீச்சு இந்த அளவு பரவாத நேரம்). இச்சட்டங்களை கைவிட்டு, இந்த பேதப்படுத்தும் சட்டங்களை ரத்து செய்து, சிறுபான்மையினரின் அச்சத்தினைப் போக்க வேண்டியது - ஒன்றிய அரசின் கடமை என்பதால், முதுகெலும்புள்ள மாநில அரசுகள் அதன் சட்டமன்றங்களில் ரத்து செய்யக்கோரும் தீர்மானத்தை - கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்கம், புதுச்சேரி (முந்தைய காங்கிரஸ் ஆட்சியில்) ஆகிய மாநிலங்கள் இயற்றி, ஒன்றிய அரசுக்கு அனுப்பியுள்ளன!

தமிழ்நாட்டில் எல்லாவற்றிலும் இரட்டை வேடம் போட்ட அ.தி.மு.க. அரசு, நாடாளுமன்றத்தில் ஆதரித்துவிட்டு, அந்தச் சட்டத்தினால் இஸ்லாமியர்களுக்கு தமிழ்நாட்டிற்குப் பாதிப்பு ஏதும் வராது - என்று கூறி, ஒரு தவறான நிலைப்பாட்டை எடுத்தது. அதற்கான விலையையும் சட்டமன்றத் தேர்தலில் கொடுத்தது! என்றாலும், இன்னமும் பாடம் எதுவும் கற்றுக்கொள்ளவில்லை.

இதற்குக் காரணம், தங்களது ஊழல்கள் இப்போது அடுக்கடுக்காக ஊற்றுபோல பீறிட்டுக் கிளம்புவதால், டில்லியையே தங்களது ‘ஆபத்பாந்தவன்’, ‘அனாதை ரட்சகன்’ என்று கருதி, ‘கஜேந்திர மோட்சம்‘ தேடிய பழைய யானை கதை புராணம் போன்று, இருதலைக்கொள்ளி எறும்பாகி நிற்கும் அவலம் அப்பட்டமாக இதன்மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது!

இத்தீர்மானத்தை முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே முன்மொழிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘அரசியல் ரீதியான பாகுபாட்டை சட்ட ரீதியான பாகுபாடாக உறுதிப்படுத்திடுவது மிகவும் தவறானது, என்பதை, விஷமத்தனமானது, என்பதை பளிச்சென்று சுட்டிக்காட்டியுள்ளார்!

ஒருமைப்பாடு என்பது மண்ணுக்கா? மக்களுக்கா? மக்கள் இல்லாது மண் நாடல்லவே - அது பாலை அல்லது காடுதானே! எனவே, மக்களைப் பிரித்து, இஸ்லாமியச் சிறுபான்மையினரை இச்சட்டங்கள்மூலம் வஞ்சிப்பது எவ்வகையில் நியாயம் ஆகும்?

அதுமட்டுமல்ல, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தைச் சார்ந்த சிறுபான்மையினர் (ஹிந்து என்பதையே இப்படி குறிப்பிடுகின்றன, அச்சட்டங்களில்) வரலாம் என்று சொல்லும்போது, இலங்கையில் அங்குள்ள இலங்கைத் தமிழர்கள் (அவர்களில் பெரும்பாலோர்) இவர்கள் கண்ணோட்டப்படி ஹிந்துக்கள் இல்லையா? அவர்களை மட்டும் ஏற்க மறுப்பது, இலங்கைத் தமிழர்களுக்கு - ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதி அல்லவா? ஏன் இந்த இரட்டை அளவுகோல்?

(இந்த லட்சணத்தில் பலி ஆடு, பூசாரியையும், கசாப்புக் கடைக்காரனையும் நம்பும் பரிதாபம்போல, ஆர்.எஸ்.எஸ்.சிடம் நீதி கேட்க நாகபுரிக்குப் படையெடுத்த விந்தைத் தமிழர்களான ஈழத்து தமிழர்கள் சிலரைப்பற்றி நினைத்தால் வேதனைதான் மிஞ்சுகிறது!)

நமது முதலமைச்சர் மாநில உரிமைகளுக்கும், சமூகநீதிக்கு மட்டும் காவலராக இன்று திகழவில்லை; கூடுதல் பொறுப்பாக அரசமைப்புச் சட்டத்தினையும் கூடப் பாதுகாத்து - அதன்படி தனது ஆட்சியில் வலியுறுத்தி, மனித உரிமை முதல் மாநில உரிமைவரை அவற்றின் காப்பாளராகக் கடமையாற்றுவதன்மூலம், ‘திராவிட மாடல் ஆட்சி’ எப்படி மானுட உரிமைகளுக்கான மக்களாட்சி என்பதை நாளும் உலகத்திற்குக் காட்டி உயர்ந்துகொண்டே உள்ளது தி.மு.க. அரசு.

இழந்த உரிமைகளின் மீட்டுருவாக்கத்திற்கான அடிக்கல் நாட்டும் அருமையான இதுபோன்ற முயற்சிகளுக்காக முதலமைச்சரையும், இவ்வாட்சியையும் நிச்சயம் சிறுபான்மையினர் மட்டுமல்ல; பெரும்பான்மையினரும் மக்களாட்சி மாண்பிற்காக பாராட்டவே கடமைப்பட்டுள்ளனர்!

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories