தமிழ்நாடு

“தமிழரின் பண்பாட்டு அடையாளங்களை பறைசாற்ற இனி உலகெங்கும் பயணம் செய்வோம்” : முதல்வர் அசத்தல் அறிவிப்பு!

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’என உலகிற்கு அறிவித்த தமிழரின் பண்பாட்டு அடையாளங்களைத் தேடி, இனிஉலகெங்கும் பயணம் செய்வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

“தமிழரின் பண்பாட்டு அடையாளங்களை பறைசாற்ற இனி உலகெங்கும் பயணம் செய்வோம்” : முதல்வர் அசத்தல் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தென்னிந்திய வரலாற்றில் மிகப் பெரும் புரட்சியாக 1968 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி தமிழ்நாட்டில் ஏற்பட்டது. அந்த ஆட்சியில் எதிர்கால முன்னேற்றத்திற்கு வேண்டிய அனைத்து அடிப்படை அடித்தளங்களும் அமைத்துக் கொடுக்கப்பட்டன.

அதேபோல், முத்தமிழறிஞர் கலைஞர் முதல்வராக இருந்தபோது, தமிழ் மொழி வளர்ச்சிக்கு தி.மு.க பெருந்தொண்டாற்றி வருகிறது. அந்தவகையில், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’என உலகிற்கு அறிவித்த தமிழரின் பண்பாட்டு அடையாளங்களைத் தேடி, இனிஉலகெங்கும் பயணம் செய்வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புக்கள் பின்வருமாறு :-

“தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத் தேடி, இந்திய நாடெங்கும், அதேபோல் கடல்கடந்து பயணம் செய்து தமிழர்கள் வெற்றித்தடம் பதித்த வெளிநாடுகளிலும் தமிழ்நாடு தொல்லியல் துறை உரிய அனுமதிகள் பெற்று இனி ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும்.

கேரள தொல்லியல்துறையுடன் இணைந்து ஆய்வுப்பணி!

முதற்கட்டமாக, சங்ககால துறைமுகமான முசிறி தற்போதுபட்டணம் என்ற பெயரில் கேரள மாநிலத்தில் அமைந்துள்ளது. சேரநாட்டின் தொன்மையினையும், பண்பாட்டினையும் அறிந்து கொள்ளும் வகையில், கேரள மாநிலத் தொல்லியல் வல்லுநர்களுடன் இணைந்து ஆய்வுப்பணி மேற்கொள்ளப்படும்.

ஆந்திர, கர்நாடக, ஒடிசா மாநிலத்தில் ஆய்வுகள்!

ஆந்திர மாநிலத்திலுள்ள வேங்கி, கர்நாடக மாநிலத்தின் தலைக்காடு மற்றும் ஒடிசா மாநிலத்திலுள்ள பாலூர் ஆகிய வரலாற்றுச் சிறப்புடைய இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ள உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

எகிப்து, ஓமன் நாடுகளில் ஆய்வுகள்!

அன்றைய ரோமப் பேரரசின் ஒருபகுதியாக விளங்கிய எகிப்து நாட்டிலுள்ள குசிர்-அல்-காதிம் மற்றும் பெர்னிகா, மேலும் ஓமன் நாட்டின் கோர் ரோரி ஆகிய இடங்களில் பழந்தமிழகத்தோடு இருந்த வணிகத் தொடர்பை உறுதி செய்யும் வகையில், தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன.

அந்தப் பகுதிகளில், அந்தந்த நாட்டின் தொல்லியல் வல்லுநர்களுடன் இணைந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேசியா, வியட்நாம் நாடுகளில் ஆய்வுகள்!

மாமன்னன் இராசேந்திர சோழன் வெற்றித் தடம் பதித்த தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் அந்தந்த நாட்டு தொல்லியல் வல்லுநர்கள்துணையோடு, உரிய அனுமதி பெற்று ஆய்வுகள்மேற்கொள்ளப்படும்.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’!

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என உலகிற்கு அறிவித்த தமிழரின் பண்பாட்டு அடையாளங்களைத் தேடி, இனிஉலகெங்கும் பயணம் செய்வோம். இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என்பதைச் சான்றுகளின் அடிப்படையில் அறிவியல் பூர்வமாக நிறுவுவதே நமது அரசின் தலையாயக் கடமை என்பதை இம்மாமன்றத்தின் மூலம் உலகிற்கு அறிவிப்பதில் நான் பெருமையாகக் கருதுகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories