தமிழ்நாடு

”இது வாக்குறுதிகளை நிறைவேற்றும் வளர்ச்சிக்கான பட்ஜெட்” - தி.மு.க அரசுக்கு திருமாவளவன் எம்.பி. புகழாரம்!

தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சிப்காட் அமைக்கப்படும் , வானூர் வட்டம் திருச்சிற்றம்பலத்தில் டைடல் பார்க் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது.

”இது வாக்குறுதிகளை நிறைவேற்றும் வளர்ச்சிக்கான பட்ஜெட்” - தி.மு.க அரசுக்கு திருமாவளவன் எம்.பி. புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திமுக அரசின் முதல் பட்ஜெட்: வாக்குறுதிகளை நிறைவேற்றும் வளர்ச்சிக்கான பட்ஜெட் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பாராட்டியுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “திமுக ஆட்சி பொறுப்பேற்று தனது முதல் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. திமுக தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலும் தமிழ்நாட்டை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும் வகையிலும் அமைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆதலால், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரையும் நிதி அமைச்சரையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டுகிறோம்.

தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்தது போல பெட்ரோல் மீதான மாநில அரசின் வரியில் மூன்று ரூபாய் குறைப்பதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே பெண்களுக்கு உரிமைத் தொகையாக மாதம் 1,000 ரூபாய் வழங்குவோம் என்ற திட்டத்தையும் நடைமுறைப்படுத்துவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன், மகளிர் சுயஉதவிக் குழுக்களின் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் பெறப்பட்ட சுமார் நாலரை லட்சம் மனுக்களில் 2 இலட்சத்து 30 ஆயிரம் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்துத் தீர்வு காணப்பட்டிருப்பது எந்தவொரு மாநிலத்திலும் செய்யப்படாத சாதனையாகும். இதற்காக முதல்வருக்கு தனிப்பட்ட முறையில் எமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நீர் மேலாண்மையின் அங்கமாக குளங்களை மேம்படுத்துவதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பதும் ; கிராமப்புற மக்களின் குடிநீர் தேவையை நிறைவு செய்வதற்காக 2000 கோடி ரூபாயில் மிகப்பெரிய திட்டத்தை அறிவித்திருப்பதும் ; புதிதாக ஆறு மீன்பிடித் துறைமுகங்களை அமைப்பதற்கு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பும் பாராட்டத் தக்கவையாகும்.

”இது வாக்குறுதிகளை நிறைவேற்றும் வளர்ச்சிக்கான பட்ஜெட்” - தி.மு.க அரசுக்கு திருமாவளவன் எம்.பி. புகழாரம்!

கிராமப்புறங்களில் குடிசை வீடுகளில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு நிரந்தரமான கான்க்ரீட் வீடுகளைக் கட்டித் தருவதற்கென்றே மீண்டும் சிறப்புத் திட்டமொன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அடுத்த 5 ஆண்டுகளில் அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் வழங்கவும் ஒரு வீட்டுக்கு ஒதுக்கப்படும் அரசு மானியத்தை 2.76 லட்சமாக உயர்த்தியும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது பாராட்டத்தக்கதாகும்.

தேசிய கல்வி கொள்கை என்ற பெயரில் பிற்படுத்தப்பட்டோர், ஆதி திராவிட வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களைக் கல்வியில் இருந்து அகற்றுவதற்கான சதித்திட்டத்தை ஒன்றிய அரசு மேற்கொண்டிருக்கும் நிலையில், மாநிலத்துக்கென கல்விக் கொள்கையை வகுப்பதற்கு வல்லுநர்களைக்கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்தவும், சித்த மருத்துவத்துக்கெனத் தனி பல்கலைக்கழகம் துவக்குவதென்ற அறிவிப்பும் பாராட்டுக்குரியவையாகும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை முறையாக செலவிடுவதை இந்த அரசு உறுதிப்படுத்தும் என்று அறிவித்திருப்பது நம்பிக்கையளிக்கிறது. ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் முனைவர் பட்டப்படிப்புக்கான உதவித்தொகையை உயர்த்தியும், அயல்நாடுகளில் சென்று படிப்பதை ஊக்குவிக்கும் விதமாக ரூ.5கோடி நிதி ஒதுக்கியும் மேற்கொள்ளபட்டுள்ள நடவடிக்கைகளை வரவேற்கிறோம்.

தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தில் மேலும் 7 தொகுதிகள் வெளியிடப்படும் என்றும்; உலக செவ்வியல் இலக்கிய நூல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்படும் என்றும் அறிவித்திருப்பதுடன், அகழாய்வுகளுக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்வதுடன் கொற்கை,அழகன்குளம் ஆகிய இடங்களில் கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்திருப்பதை வரவேற்கிறோம்.

தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சிப்காட் அமைக்கப்படும் , வானூர் வட்டம் திருச்சிற்றம்பலத்தில் டைடல் பார்க் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது. இவ்வாறு அனைத்துத் தளங்களிலும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டை மீட்டு வளர்ச்சிப் பாதையில் செலுத்துகிற வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ற திமுக அரசின் இந்த நிதிநிலை அறிக்கையைப் பாராட்டி வரவேற்கிறோம்!”

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories