தமிழ்நாடு

ஒவ்வொரு குடிமகனும் செலுத்தும் வட்டித்தொகை எவ்வளவு? : வெள்ளை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்..!

வெள்ளை அறிக்கையின் மூலம் அ.தி.மு.க ஊழல் ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடுகள் அம்பலமாகியுள்ளன. நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இங்கே...

ஒவ்வொரு குடிமகனும் செலுத்தும் வட்டித்தொகை எவ்வளவு? : வெள்ளை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்..!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கடந்த 10 ஆண்டுகால தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்து 120 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை, சென்னை தலைமைச் செயலகத்தில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நேற்று வெளியிட்டார்.

இந்த வெள்ளை அறிக்கையின் மூலம் அ.தி.மு.க ஊழல் ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடுகள் அம்பலமாகியுள்ளன. நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

கடந்த 2013-14 ஆம் ஆண்டிற்குப் பிறகு தமிழ்நாட்டின் நிதி நிலைமை மோசமடையத் தொடங்கியது.

மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் கர்நாடக மாநிலங்கள் கடந்த 2017-18 மற்றும் 2018-19 ஆம் ஆண்டுகளில் உபரி வருவாய் எட்டிய நிலையில் தமிழ்நாடு மட்டும் தொடர்ந்து வருவாய்ப் பற்றாக்குறையைச் சந்தித்து வந்துள்ளது. கடந்த 2019-20ஆம் ஆண்டு வருவாய்ப் பற்றாக்குறையின் அளவு ரூ.35,909 கோடி; 2020-21ஆம் ஆண்டு 61,320 கோடி ரூபாய் வருவாய்ப் பற்றாக்குறை.

வெளிச்சந்தையில் கடன் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டி சாலைகள், பாலங்கள், கட்டிடங்கள் அமைத்தல் போன்ற மூலதனச் செலவுகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்வது வழக்கம். ஆனால் கடந்த பத்தாண்டுகளில் அந்த நிலை மாறி, கடன் பெற்று அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கும் நிலை வந்தது. அதுவும் கடந்த சில ஆண்டுகளில் கடன் பத்திரம் மூலம் திரட்டிய நிதியை வைத்து ஏற்கனவே வாங்கிய கடனுக்கான வட்டியைச் செலுத்த வேண்டிய அவல நிலைக்கு தமிழ்நாட்டின் நிதிநிலைமை சென்றுவிட்டது.

தமிழ்நாட்டின் அரசின் மொத்த பொதுக்கடன் 31.3.2021அன்று ரூ.5,70,189 கோடி.

கடந்த பத்தாண்டுகளில் அரசின் வருவாய் வளர்ச்சி குறைந்துகொண்டே வருகிறது.

கடந்த 2006-07 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.48 சதவீதமாக இருந்த சொந்த வரி வருவாய் வரவினங்கள் தொடர்ந்து சரிவைச் சந்தித்து, சென்ற 2021-21ஆம் ஆண்டில் வெறும் 5.46 சதவீதமாக இருந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீத சரிவு என்பது தற்போதைய மதிப்பில் 60 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பைக் குறிக்கிறது.

கடந்த 2018-19 ஆம் ஆண்டின் முதன்முறையாக தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மொத்த வரி வருவாயின் விகிதம் தேசிய சராசரி அளவை விடக் குறைந்தது.

தமிழ்நாட்டின் வாகன வரி வருவாய் கர்நாடகா, கேரளா மாநிலங்களை விடக் குறைவு.

சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மீதான வரி வருவாய் குறைந்துள்ளது மட்டுமின்றி, வருவாய் இழப்புகளும் ஏற்பட்டுள்ளன.ஒன்றிய அரசு நியமித்த நிதிக்குழுக்கள் தமிழ்நாட்டின் நலனுக்காக எதிராக உருவாக்கிய விதிமுறைகள் காரணமாக, தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய ரூபாய் 2577.29 கோடி கிடைக்கவில்லை. அதை வாதாடிப் பெறுவதற்கான முயற்சியில் தமிழக அரசு ஈடுபடவில்லை.

2020-21ஆம் ஆண்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்பட்ட அதிக வரிகளின் மூலம் ஒன்றிய அரசு 3,89,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது. ஆனால் வெறும் 837 கோடி ரூபாய் மட்டுமே தமிழ்நாட்டிற்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்களுக்கான செலவினங்கள் 5.4 சதவீதம் குறைந்துள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய நேரத்தில் தேர்தல்கள் நடக்காத காரணத்தினால் ஒன்றிய அரசின் மானியங்களை முழுமையாகப் பெறமுடியாமல் உள்ளாட்சி அமைப்புகளின் செயல்திறன் மிகவும் பாதிப்படைந்தது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் மின்வாரியத்தின் ஒட்டுமொத்தக் கடன்ரூபாய் 2 இலட்சம் கோடி, சென்னை மாநகர் மற்றும் தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியங்களின் மொத்தக் கடன் ரூபாய் 5,282 கோடி.

முறையற்ற நிர்வாகத் தினாலும், மோசமான நிதி மேலாண்மையினாலும், போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு 59 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இதன் மூலம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் தினசரி இழப்பு -15 கோடி ரூபாய்.

மின்வாரியம் கடந்த பத்தாண்டுகளாக மின்சாரத்தை அதிக விலையில் வாங்குவதும், சொந்த உற்பத்தி நிலையங்களின் உற்பத்தி அதிகரிக்காததாலும், மின்வாரியத்திற்கு யூனிட் ஒன்றுக்கு 2.36 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தினசரி இயக்க இழப்பு 55 கோடி ரூபாய் ஆகும்.

ஒவ்வொரு தனி நபருக்கான இழப்பு, வட்டி மற்றும் கடன்:

தமிழகம் பெற்றுள்ள கடனுக்காக தினசரி செலுத்தும் வட்டித்தொகை: ரூ. 115 கோடி.

பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் தினசரி செலுத்தும் வட்டித் தொகை: 180 கோடி ரூபாய்;

ஒவ்வொரு குடிமகனும் ஓராண்டிற்கு செலுத்தும் வட்டித்தொகை (பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட): 7,700 ரூபாய்;

ஒவ்வொரு குடிமகனுக்கான மொத்தக் கடன் (பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வெளியில் தெரியாத கடன்கள் உட்பட): 1,10,000 ரூபாய்.

banner

Related Stories

Related Stories