தமிழ்நாடு

செப்.1 முதல் பள்ளிகள் திறப்பு.. வார இறுதிகளில் கோயில்கள் மூடல்: மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு!

தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

செப்.1 முதல் பள்ளிகள் திறப்பு.. வார இறுதிகளில் கோயில்கள் மூடல்: மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலின் தன்மை, அதன் தாக்கம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட வாரியான நோய்ப் பரவல், ஊரடங்குக் கட்டுப்பாடுகள், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மற்றும் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் செயலாக்கம், ஊரடங்கு தளர்வுகள் குறித்து மருத்துவ நிபுணர் குழுவினரிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து, தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடையவுள்ள நிலையில், மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் காணப்படும் நோய்த் தொற்றுப் பரவல் குறித்து அரசு உயர் அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதன் அடிப்படையில், கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு 23-8-2021 காலை 6 மணி வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் இன்று வெளியிட்ட உத்தரவில், “நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளுடன் கூடுதலாக நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் அதிக அளவில் பொதுமக்கள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் வகையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு மட்டும் தடை விதிக்கப்படுகிறது.

பள்ளிகள் செல்லாமல் பல மாதங்களாகத் தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது குழந்தைகளிடையே பெரும் மன அழுத்தத்தையும் சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும் ஏற்படுத்தி வருவதாகவும் நிபுணர்கள் தெரிவித்தனர்.

அனைத்துத் தரப்புக் கருத்துகளையும் ஆய்ந்து அதன் அடிப்படையில், வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் ஒரு நேரத்தில் 50 விழுக்காடு மாணவர்களுடன் கொரோனா தொற்று குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் (Standard Operating Procedure) பின்பற்றிப் பள்ளிகள் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிக் கல்வித்துறை அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories