தமிழ்நாடு

அரசிடம் கட்டமைப்பு உள்ளது; அதற்காக கொரோனாவை இலவசமாக வாங்க வேண்டுமா? - மக்களுக்கு முதல்வர் முக்கிய அறிவுரை

அலட்சியம் வேண்டாம்; எச்சரிக்கையாக இருப்போம்; மூன்றாம் அலையை தடுப்போம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு முக்கிய அறிவுரையை வழங்கியுள்ளார்.

அரசிடம் கட்டமைப்பு உள்ளது; அதற்காக கொரோனாவை இலவசமாக வாங்க வேண்டுமா? - மக்களுக்கு முதல்வர் முக்கிய அறிவுரை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மூன்றாம் அலை ஏற்படாத வகையில் விழிப்புணர்வுடன் இருக்குமாறு வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் நாட்டு மக்களுக்கு காணொலி மூலம் அறிவுறுத்தியுள்ளார்.

அதன் விவரம்:

"கொரோனா என்ற பெருந்தொற்று கடந்த பதினெட்டு மாத காலமாக நாட்டையும் நாட்டு மக்களையும் வாட்டி வதைத்து வருகிறது. மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்; அரசு ஏற்படுத்தி வைத்துள்ள மருத்துவக் கட்டமைப்புகள்; ஊரடங்குக் கட்டுப்பாடுகள்; நம்முடைய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் தன்னலம் கருதாத சேவை ஆகியவற்றின் காரணமாக கொரோனாவின் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்தி இருக்கிறோம். கட்டுப்படுத்தி இருக்கிறோமே தவிர, முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கவில்லை.

கொரோனா என்பது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு தொற்றும் நோயாக இருப்பதால் அதை எவ்வளவு கட்டுப்படுத்தினாலும் முழுமையாக முற்றுப்புள்ளி வைக்க இயலவில்லை. முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகக் கருதப்பட்ட நாடுகளில் கூட மீண்டும் பரவத் தொடங்கி இருக்கிறது.

கேரளா, கர்நாடகா போன்ற நமது அண்டை மாநிலங்களில் மீண்டும் தொற்றுப் பரவல் அதிகமாகி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்திலும் கூடுதலாகி வருகிறது. மக்கள் தொகை அதிகமாகவும், நெரிசலாக வாழும் சூழலும் உள்ள நாட்டில் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் பல்வேறு சிரமங்கள் இருந்தாலும் மக்களைக் காக்கும் பெரும் பொறுப்பு அரசின் கையில் இருக்கிறது என்பதை நான் உணர்ந்துள்ளேன். அதற்கேற்ப பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும் வருகிறோம்.

முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது, கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்கு வந்தது. தளர்வுகள் அறிவிக்கப்படும் போது லேசாகப் பரவத் தொடங்குகிறது. இதனைக் கவனத்தில் வைத்து மக்கள் செயல்பட வேண்டும் என்று மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். கடைகளைத் திறக்க அனுமதிப்பதன் மூலமாகத் தங்களது தேவைகளை வாங்குவதற்கு மக்களுக்கு வழி ஏற்படுத்தித் தருகிறோம். ஆனால் அங்கு வரும் மக்கள், கொரோனா காலக் கட்டுபாடுகளைப் பின்பற்றத் தவறிவிடுகிறார்கள். மாஸ்க் அணியாமல் செல்வது, கூட்டமாகக் கூடுவது, நெரிசலாக நிற்பது போன்றவற்றையெல்லாம் பார்க்கும்போது மக்கள் விழிப்புணர்வு பெறாமல் இருப்பது எனக்கு வேதனை ஏற்படுத்துகிறது.

அதனால்தான், சில குறிப்பிட்ட பகுதிகளில் அதிக அளவில் கூட்டம் சேருவது தொடர்ந்து காணப்பட்டால், அப்பகுதியை மூடும் நடவடிக்கையை எடுக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு நான் அறிவுறுத்தி இருக்கிறேன். சென்னையில் சில பகுதிகள் அப்படி மூடப்பட்டுள்ளன. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கக் கூடாது என்பதற்காக மட்டுமே கடைகள் திறக்க அனுமதி தரப்பட்டுள்ளது. அதை உணராமல், விதிமுறைகளைப் பின்பற்றாமல் மக்கள் நடந்து கொள்ளக் கூடாது.

கூட்டமாகக் கூடுவதன் மூலமாக, கொரோனா பரவலுக்கு மக்களே காரணமாகிவிடக் கூடாது என்று மீண்டும், மீண்டும் உங்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். மீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசாங்கத்தை நிர்பந்தித்து விடாதீர்கள் என்பதை கொஞ்சம் கடுமையாகவே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

மூன்றாவது அலையை மட்டுமல்ல, எந்த அலை வந்தாலும் அதனை எதிர்கொள்ளும் வல்லமை தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது. அதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளும் ஏராளமாக தயார் நிலையில் உள்ளது. அதற்காக, கொரோனாவை விலை கொடுத்து வாங்கி விடக்கூடாது என்பதை பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். முதல் அலையைவிட மாறுபட்டதாக இரண்டாவது அலை இருந்தது. அதேபோல, இரண்டாவது அலையை விட மாறுபட்டதாக மூன்றாவது அலை இருக்கலாம்.

நோய் இப்படித்தான் பரவும் - இந்த மாதிரியான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும் என்று உறுதியாகச் சொல்ல முடியாத நோயாக இருப்பதால் மக்கள் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. கொரோனாவில் இருந்து காத்துக்கொள்ள தடுப்பூசியே தலைசிறந்த ஆயுதம் என்பது உலகம் ஒப்புக்கொண்ட உண்மை ஆகும். தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசால் தரப்பட்ட தடுப்பூசிகளை முழுமையாகச் செலுத்தி விட்டோம். கூடுதலாக நாமும் வாங்கியும் பொதுமக்களுக்குச் செலுத்திவிட்டோம். படிப்படியாக ஒன்றிய அரசால் தடுப்பூசி தரப்பட்டு வருகிறது. இவை போதுமானதாக இல்லை. கிடைக்கக் கிடைக்க நாம் செலுத்தி வருகிறோம்.

முதல் டோஸ் - இரண்டாவது டோஸ் என முழுமையாக அனைத்து மக்களுக்கும் போட்டு முடிக்க வேண்டும். 18 வயதுக்கு குறைவான பிள்ளைகளுக்கு , பச்சிளம் குழந்தைகளுக்கான தடுப்பூசி நிலைப்பாடுகள் இன்னமும் எடுக்கப்படவில்லை. இத்தகைய சூழலில் மக்கள் எவ்வளவு எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் போட்டுக் கொள்ளுங்கள். தனியார் மருத்துவமனைகளும் இலவசமாகத் தடுப்பூசி செலுத்த முன் வந்துள்ளதை இந்த நேரத்தில் நான் பாராட்டுகிறேன்.

முதல், இரண்டாம் அலைகளை விட மூன்றாவது அலை மோசமானதாக இருக்கும், ஸ்பானிஷ் காய்ச்சலைப் போல இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்வதை பயமுறுத்தலாக இல்லாமல் நமக்கு தரப்படுகிற எச்சரிக்கையாக எடுத்துக் கொள்வோம். ஜிகா வைரஸ், டெல்டா, டெல்டா ப்ளஸ் என்று புதிய புதிய படையெடுப்புகள் சொல்லப்படுகின்றன. இவை அனைத்தையும் நாம் வெல்வோம்!

மிக மிக அவசிய அவசரத் தேவை இருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியில் வாருங்கள்.

அப்படி வரும்போதும் இரண்டு மாஸ்க்குகளை பயன்படுத்துங்கள். வெளியில் வைத்து மாஸ்க்குகளை கழற்றவோ, எடுக்கவோ வேண்டாம்.

கைகளை சுத்தமாக வைத்திருங்கள்.

சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்.

நோய்த் தடுப்பு மருந்துகள், சத்தான உணவு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

உடல்நலத்தையும் மனநலத்தையும் பேணுங்கள்.

நமக்கு நாமே காவல் என்பதை உணருங்கள்.

கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

நம்மையும் காப்போம்!

நாட்டையும் காப்போம்!

நன்றி வணக்கம் !"

banner

Related Stories

Related Stories