தமிழ்நாடு

சிறந்த முதல்வர்கள்: முதலிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; மூன்றே மாதத்தில் சாதனை - உதயநிதி பெருமிதம்!

முதலமைச்சராகப் பொறுப்பேற்று 3 மாதத்திலேயே கிரவுட் விஸ்டம் கருத்துக் கணிப்பில் சிறந்த முதல்வருக்கான முதலிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுவிட்டார் என உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்.

சிறந்த முதல்வர்கள்: முதலிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; மூன்றே மாதத்தில் சாதனை - உதயநிதி பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை ஆவடி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஜேபி எஸ்டேட் பகுதியில் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் பால்வளத் துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் அலுவலகம் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் தி.மு.க இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து ஆவடி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பயிலக்கூடிய 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு இணைய வழி கல்விக்கு உதவும் விதமாக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் ஏற்பாட்டில் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் 120 டேப்லட்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் என பலர் உடனிருந்தனர்.

தொடர்ந்து மேடையில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்,

ஆவடி தொகுதியில் இதுவரை பல்வேறு நலத்திட்ட உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன். ஆனால் தற்பொழுது சட்டமன்ற உறுப்பினராக முதல் முறையாக ஆவடி தொகுதியில் நடைபெறுகின்ற நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளேன். எனக்கு நினைவு தெரிந்து நான் குழந்தையாக இருந்த நாள் முதல் என்னை தூக்கி வளர்த்தவர் ஆவடி நாசர். கிரவுட் விஸ்டம் என்கின்ற இணையதளம் மாதம் மாதம் பொதுமக்களிடம் கருத்து கணிப்பு நடத்தி யார் சிறந்த முதல்வர் என்று தெரிவிக்கும்.

அவ்வகையில் சென்ற மாதம் இந்தியா முழுவதும் பொதுமக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தியதில் சிறந்த முதலமைச்சர் என்ற இரண்டாவது இடத்தை நமது முதல்வர் பெற்றிருந்தார். ஆனால் இந்த மாதம் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் இந்தியாவிலேயே தலைசிறந்த முதல்வருக்கான இடத்தை நமது தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் அமைச்சராக பொறுப்பேற்று மூன்று மாதத்திலேயே பிடித்து விட்டார்.

தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்று ஒரு மாதத்திற்குள் அனைத்து அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் தலைவரின் ஆணைக்கிணங்க முழுமூச்சுடன் செயல்பட்டு ஓரளவுக்கு கொரோனாவை கட்டுப்படுத்தி விட்டோம். அதுமட்டுமின்றி தற்போது மூன்றாவது அலை வரக்கூடும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது.

கொரோனா மூன்றாவது அலை ஏற்படக் கூடாது. அதற்காக அனைவரும் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் அதேபோல் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும்.” எனக் கூறினார்.

banner

Related Stories

Related Stories