தமிழ்நாடு

‘சினிமா சிரிப்பு போலிஸ் கூட இப்படி காமெடி செய்யமாட்டார்’ - ஆட்டுக்கார அண்ணாமலைக்கு பத்திரிகையாளர் பதிலடி!

பத்திரிகையாளர்களை மிரட்டிய பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்கு ‘ஃப்ரண்ட் லைன்’ ஆசிரியர் விஜயசங்கர் ராமச்சந்திரன் பதிலடி கொடுத்துள்ளார்.

‘சினிமா சிரிப்பு போலிஸ் கூட இப்படி காமெடி செய்யமாட்டார்’ - ஆட்டுக்கார அண்ணாமலைக்கு பத்திரிகையாளர் பதிலடி!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற நாள் முதல் ஊடக சுதந்திரம் தொடர்ந்து நசுக்கப்பட்டு வருகிறது. பா.ஜ.க அரசை விமர்சிக்கும் பத்திரிகையாளர்களை, தேசத் துரோக வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைக்கும் கொடூரமும் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சராக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் பொறுப்பேற்றுள்ளார். எனவே இன்னும் ஆறு மாதங்களில் அனைத்து ஊடகங்களையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடுவோம்” என ஊடகங்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.

பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் இத்தகைய மிரட்டல் பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ‘ஃப்ரண்ட் லைன்’ ஆங்கில இதழின் ஆசிரியர் விஜயசங்கர் ராமச்சந்திரன் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார்.

அதில் பேசிய பத்திரிகையாளர் விஜயசங்கர் ராமச்சந்திரன், “எல்.முருகன் செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சராகி இருப்பதால் ஊடகங்களை நாம் 6 மாதத்திற்குள் கட்டுப்படுத்தலாம், கையிலெடுக்கலாம் என்று பா.ஜ.க தலைவர் அணணாமலை பேசியிருக்கிறார்.

முருகனின் அப்பா சிவபெருமானையே எதிர்த்துக் கேள்வி கேட்ட நக்கீரன் பரம்பரையில் வந்த பத்திரிகையாளர்களை இப்படி இவர் ‘மிரட்டுவது’ சிறுபிள்ளைத்தனமானது. சினிமாவில் வரும் சிரிப்பு போலிஸ் கூட இப்படிப் பேச மாட்டார்கள். “வேலூர் ஜெயில வெள்ளையடிச்சு வாடகைக்குவிட்ட பரம்பரை நாங்க” என்கிற வடிவேலவின் சினிமா வசனம்தான் நினைவுக்கு வருகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் விஜயசங்கர் ராமச்சந்திரன், தான் அளித்த பேட்டியின் ஒளிபரப்பப் படாத பகுதிகள் எனக் குறிப்பிட்டு சமூக வலைதளத்தில் பதிவு செய்திருக்கிறார்.

அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், “அண்ணாமலை, ஊடகங்கள் பொய் சொல்வதாகக் கூறுகிறார். ஆல்ட் நியூஸ் என்கிற இணையதளம் பொய்ச் செய்திகளை அறிவியல் தொழில்நுட்பத்தைக் கொண்டு அம்பலப்படுத்தி வருகிறது. அதன்படி பொய்ச் செய்திகளை வெளியிடுதில் பா.ஜ.கவைச் சேர்ந்தவர்களுக்குத்தான் முதலிடம் என்று அது சொல்கிறது.

பொய்ச் செய்தி என்றால் ஊடக விவாதங்களில் பா.ஜ.க உண்மைகளை எடுத்து வைத்து மறுக்கலாமே? ஆனால் பெட்ரோல், சிலிண்டர் விலை உயர்வு, கொரோனா தடுப்பில் செய்த தவறுகள் ஆகியவற்றை மறுக்க அவர்களுக்கு ஆதாரமில்லை. அதனால் திணறுகிறார்கள். இல்லையெனில் கூச்சல் போடுகிறார்கள். இது தவிர ராமன் எத்தனை ராமனடி போல் வலதுசாரி, வலதுசாரி ஆதரவாளர், வலதுசாரி சிந்தனையாளர் என்று பினாமி அடையாளங்களில் பா.ஜ.க, -ஆர்.எஸ்.எஸ்காரர்களுக்கு எப்போதுமே ஊடக விவாதங்களில் அதிக பிரதிநிதித்துவம் கொடுக்கப்படுகிறது.

எல்.முருகனை விட வலிமை வாய்ந்த அமைச்சர்கள் இருந்திருக்கிறார்கள். எமர்ஜென்சி நேரத்தில் அமைச்சராக இருந்த வி.சி.சுக்லா ஒரு உதாரணம். ஆனால் அவர்களையெல்லாம் எதிர்த்து நின்று சிறை சென்ற பத்திரிகையாளர்களும் இருக்கிறார்கள். எனவே அண்ணாமலையின் ‘மிரட்டல்’ இங்கு செல்லாது.

ஊடகங்களைக் குனியத்தான் சொன்னார்கள், ஆனால் அவர்கள் தவழ்ந்து சென்றார்கள் என எமெர்ஜன்சி நேரத்தில் நடந்தது குறித்து அத்வானி பேசினார். ஆனால் இன்று பெரும்பாலான ஊடகங்கள் தாமாக முன் வந்து தவழ்கிறார்கள். ஆனால் எதிர்க்குரல்களும் இருக்கின்றன.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories