தமிழ்நாடு

“கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம்; சந்தேகமே வேண்டாம்” - பழனிசாமிக்கு முதலமைச்சர் பதில்!

“ஆட்சிப் பொறுப்பேற்ற 49 நாளில் அத்தனை அறிவிப்புகளையும் நிறைவேற்றுவோம் என எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வைத்து கேள்வி எழுப்பியதற்கு நன்றி” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

“கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம்; சந்தேகமே வேண்டாம்” - பழனிசாமிக்கு முதலமைச்சர் பதில்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இன்று சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “தி.மு.க தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட 505 அறிவிப்புகளையும் நிறைவேற்றவில்லையே?” எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஆட்சிப் பொறுப்பேற்ற 49 நாளில் அத்தனை அறிவிப்புகளையும் நிறைவேற்றுவோம் என எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வைத்து கேள்வி எழுப்பியதற்கு நன்றி” எனத் தெரிவித்தார்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “ஐந்தாண்டு ஆட்சி செய்யும் அரசு, கொள்கை திட்டங்கள் அனைத்தையும் ஆளுநர் உரையில் சொல்லிவிட முடியாது. ஆளுநர் உரை முன்னோட்டம்தான். அதாவது ஆளுநர் உரை ட்ரெய்லர்தான். முழு நீளத் திரைப்படத்தைத் திரையில் காண்க என்று முன்னர் சொல்லி வந்ததுபோல, மேற்கொண்டு வரும் பயணத்தில் சவால்கள், அதைச் சந்திக்கும் சவால்கள் அனைத்தும் விரைவில் இந்தப் பேரவையில் வைக்கப்படும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்படும்.

பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது பழமொழி, நாங்கள் 10 ஆண்டுகள் பொறுத்திருந்தோம். இப்போதுதான் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளோம். கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றிக் காட்டுவோம். அதில் ஒரு துளிகூட உங்களுக்குச் சந்தேகம் வேண்டாம். தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகள் கொடுத்ததை நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் ஆட்சிக்கு வந்து இன்றோடு 49 நாட்கள் ஆகியுள்ளன. ஆனாலும் என் மீதும், தி.மு.க அரசின் மீதும் இருக்கின்ற நம்பிக்கையின் காரணமாக இப்போதே அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியிருக்கலாமே என்கிற எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியிருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும். அதில் துளியளவும் சந்தேகம் தேவையில்லை. ஆட்சிக்கு வந்த முதல் நாளிலிருந்து நாட்டு மக்களுக்குக் கொடுத்துள்ள வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். அதற்கான பணிகளில்தான் எங்களை நாங்கள் ஒப்படைத்துள்ளோம்.

சமீபத்தில் பல்வேறு ஊடகங்களில் தி.மு.க அரசின் முதல் 30 நாட்கள் எப்படி இருக்கிறது என்று கேள்வி கேட்டு செய்தி பதிவிட்டதைக் கண்டிருப்பீர்கள். தி.மு.கவிற்கு வாக்களிக்கவில்லையே என்று பலரும் தங்கள் வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்கள்.

எங்களுக்கு வாக்களித்தவர்கள் இவர்களுக்கு வாக்களித்தோமே என்று மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையிலும், வாக்களிக்காதவர்கள் இவர்களுக்கு வாக்களிக்கவில்லையே என்று வருத்தப்படும் வகையில் இருப்போம் என்று நான் ஏற்கெனவே பேட்டி அளித்தபடி செயல்பட இத்தகைய பதிவுகள் எங்களுக்கு உத்வேகமாக இருக்கும்.

பதவி ஏற்றவுடன் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்க உத்தரவிடப்பட்டது. முதல் தவணையாக ரூ.2000 மற்றும் ஜூன் 3 அன்று இரண்டாவது தவணை ரூ.2000 என மொத்தம் 8,393 கோடி ரூபாய் செலவில் 2 கோடியே 17 லட்சம் குடும்பங்கள் பயனடைந்துள்ளன.

அடுத்து மகளிருக்கு இலவசப் பேருந்துப் பயணம், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவருக்கும் அது நீட்டிக்கப்பட்டது. ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்தோம். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் இன்று காலை வரை 75,546 மனுக்களுக்கு இதுவரை தீர்வு காணப்பட்டுள்ளது. முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை, கொரோனாவைக் கட்டுப்படுத்த கட்டளை மையம், தடுப்பூசியை மக்கள் இயக்கமாக மாற்றி 47 நாட்களில் 67 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories