தமிழ்நாடு

"புதுடெல்லியில் ஒலித்த உரிமைக்குரலும்! உறவின் நெகிழ்ச்சியும்!!" : பொன்.முத்துராமலிங்கம் புகழாரம்!

முதலமைச்சரின் டெல்லி பயணம் இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு கலங்கரை விளக்கமாகியிருக்கிறது என பொன்.முத்துராமலிங்கம் புகழாரம் சூட்டியுள்ளார்.

"புதுடெல்லியில் ஒலித்த உரிமைக்குரலும்! உறவின் நெகிழ்ச்சியும்!!" : பொன்.முத்துராமலிங்கம் புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்திய ஒன்றிய அரசின் பிரதமர் நரேந்திரமோடியை முதன்முறையாகச் சந்திப்பதற்கு 17.06.2021-ம் நாள் புதுடெல்லி பயணத்தை மேற்கொண்டார். அவருடன் அவரது துணைவியாரும் சென்றார்கள். டெல்லி வாழ் தமிழர்களும், கழக நாடாளுமன்ற உறுப்பினர்களும், குழுத் தலைவர்களும், தமிழ்நாட்டின் டெல்லி பிரதிநிதியும் விமான நிலைய வரவேற்பில் கலந்துகொண்டு மிகச்சிறப்பான, எழுச்சியும், உணர்ச்சியும் கலந்த ஒரு வரவேற்பை வழங்கினார்கள்.

இதனைத் தொடர்ந்து புதுடெல்லியில் கட்டப்பட்டு வரும், கழகப் பணிமனையாம் அறிவாலய கட்டிடப் பணிகளைப் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கிவிட்டு தமிழ்நாடு இல்லத்தில் ஓய்வு எடுத்துக்கொண்ட பின்னர் மாலை 5 மணிக்கு பிரதமர் நரேந்திரமோடி அவர்கள், அனுப்பிய கார்மூலம் பிரதமர் அலுவலகம் சென்று அவரைச் சந்திக்கிறார். இருவரும் மகிழ்ச்சிப் பெருக்குடன் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

அடுத்த கட்டமாக தமிழ்நாடு சார்ந்த அவசர கோரிக்கைகள், அவசரத்தேவைகள், நீண்டகால அடிப்படையிலான திட்டங்களுக்கு ஒப்புதல் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை (Memorandum) மாண்புமிகு தமிழ்நாட்டின் முதல்வர் மாண்புமிகு இந்திய ஒன்றிய அரசின் பிரதமரிடம் வழங்கினார். பிரதமரும், மகிழ்வுடன் மனுவினைப் பெற்றுக்கொண்டு உரிய ஏற்பாடுகளை மேற்கொள்வதாக உறுதியளித்ததோடு, தமிழ்நாடு முதலமைச்சர் எப்பொழுது வேண்டுமானாலும், என்னுடன் நேரடியாகப் பேசலாம் எனப் பிரதமர், முதலமைச்சரிடம் தெரிவித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கிய 25-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுவில், கூடுதல் தடுப்பூசிகள் வழங்க வேண்டும், “நீட்” உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும், மதுரையில் “எய்ம்ஸ்” மருத்துவமனையை விரைந்து அமைக்கவேண்டும் என்பதாகும். பிரதமரிடம் விடைபெற்றுக்கொண்ட தமிழ்நாட்டின் முதல்வர் தமிழ்நாடு இல்லத்தில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறார்.

"புதுடெல்லியில் ஒலித்த உரிமைக்குரலும்! உறவின் நெகிழ்ச்சியும்!!" : பொன்.முத்துராமலிங்கம் புகழாரம்!

அவர்களிடம் பிரதமரிடம் கொடுக்கப்பட்ட கோரிக்கை மனுக்கள் பற்றிய சுருக்கமான விபரங்களைத் தெரிவிக்கிறார். அவசரத் தேவையாக கூடுதலாக தடுப்பூசிகளை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும், ஊட்டி-செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசித் தொழிற்சாலைகளை இயக்கி தடுப்பூசி உற்பத்தியைப் பெருக்கிட வேண்டும், தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய ஜி.எஸ்.டி.வரி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கப்பட வேண்டும், காவேரி ஆற்றில் புதிதாக சட்ட வரன்முறைகளை மதிக்காமல், கர்நாடக அரசு மேற்கொள்ளவிருக்கும், “மேகதாது” அணை கட்டும் திட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது, முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்பட வேண்டும், காவேரி -கோதாவரி-குண்டாறு இணைப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும், தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்பும், உரிமையும் உறுதி செய்யப்பட வேண்டும்.

ஈழத்திலிருந்து அகதிகளாக இங்கு வந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும், இடஒதுக்கீட்டின் அளவை மாநிலங்களே தீர்மானிக்கும் உரிமை, பெண்களுக்கு 33 சதவிகித ஒதுக்கீடு, மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து ஆகிய கோரிக்கைகளும் மனுவில் இடம் பெற்றுள்ளன எனத் தெரிவித்ததோடு, இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற அழுத்தம் ஒன்றிய அரசுக்குக் கொடுப்போம், அப்பொழுதெல்லாம், தமிழ்நாடு சார்ந்த பத்திரிக்கையாளர்கள் தங்களின் முழுமையான ஆதரவை வழங்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டு பத்திரிகையாளர் சந்திப்பிலிருந்து விடைபெற்றுக் கொள்கிறார்.

இந்த சந்திப்பிற்குப் பின்னர் மார்க்சிய கம்யுனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ராஜா அவர்களையும் சந்தித்து உரையாடுகிறார். 17-ம் தேதி நிகழ்வுகளை இத்துடன் முடித்துக்கொண்டு மறுநாள் 18.06.2021-ம் நாள் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான அன்னை சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் தனது துணைவியாருடன் சென்று சந்தித்து உரையாடுகிறார். அவர்களுக்கு “சிந்து சமவெளி - வைகை நதிச் சமவெளி”நாகரிகத் தொடர்பினை விளக்கும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலகிருஷ்ணன் எழுதிய வரலாற்றுப் பதிவு நூலை அன்பளிப்பாக வழங்குகிறார். அவர்களோடு உரையாடிவிட்டு, அன்று மாலை விமானம் மூலம் சென்னை வந்தடைகிறார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் அரசு முறைப் பயணம் முதல் முறையாக புதுடெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்து விட்டு மற்றைய மதிப்புமிகு அரசியல் எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து, கருத்துப் பரிமாற்றங்கள் செய்து கொண்ட முறையும், பத்திரிகையாளர்களைச் சந்தித்து செய்திகளை வெளியிட்ட பாங்கும், பண்பும், புதுடெல்லி நிகழ்வுகள் அனைத்திலும் தமிழ்நாடு முதல்வர் மேற்கொண்ட உயர்ந்த அரசியல் பண்பாடும், அணுகுமுறையும் அரசியல் நோக்கர்களை மட்டுமல்ல, அனைத்து மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்றுள்ளது என்பதை யாராலும் மறுக்கவியலாது. “சொல்வதைத்தான் செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம்” என்ற கழக செயல்பாட்டின் வெளிப்படைத் தன்மையை வெளிப்படுத்தும் வகையில்தான் தமிழ்நாடு முதலமைச்சரின் அணுகுமுறையும், கருத்துப் பரிமாற்றங்களும் நடைபெற்றன.

"புதுடெல்லியில் ஒலித்த உரிமைக்குரலும்! உறவின் நெகிழ்ச்சியும்!!" : பொன்.முத்துராமலிங்கம் புகழாரம்!

உரிமையின் வெளிப்பாட்டை கோரிக்கைகள் மூலம் பிரதமரிடம் வெளிப்படுத்தும் பொழுதும், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அது தொடர்பான செய்திகளை வெளியிடும் பொழுதும் மென்மையான அணுகுமுறையினைப் பின்பற்றிய பாங்கும் பாதையும், அதே நேரத்தில் தமிழ்நாடு தழுவிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் பொழுதும் தமிழ்நாடு சார்ந்த பத்திரிக்கையாளர்கள் முழுமையான ஆதரவினை வழங்கிட வேண்டுமெனப் பத்திரிகையாளர்களைக் கேட்டுக்கொண்டது பத்திரிகையாளர்களின் மனதில் சரியான பதிவினை நிச்சயம் ஏற்படுத்தியிருக்கும், அதுமட்டுமல்ல அந்தப் பதிவின் வெளிப்பாடு உரிய நேரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திட பயன்பாடுமென்று தான் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

ஆம்! ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனக் கருதப்படும் பத்திரிகைகளும், ஊடகங்களும், தமிழ்நாடு முதலமைச்சரின் கோரிக்கை நியாயங்களைப் புரிந்துகொண்டு ஆதரவளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஜனநாயகத்தில் தேவைப்படுகிற ஒன்றுதான் என்பதை அரசியல் தொலைநோக்குடன் உணர்ந்துதான் தமிழ்நாடு முதலமைச்சர் அத்தகைய வேண்டுகோளையும் புதுடெல்லி பத்திரிகையாளர்களுக்கு விடுத்துள்ளார் என்பது இந்த நிகழ்வுகளை ஆழ்ந்து சிந்திப்பவர்களுக்கு விளங்கும்.

தமிழ்நாடு முதலமைச்சரின் புதுடெல்லி பயணத்தின் இரண்டாவது கட்டமாக, அரசியல் எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து தன்னுடைய ஆழமான நட்பின் வெளிப்பாட்டை உறுதிப்படுத்தியதோடு, அரசியல் கருத்துப் பரிமாற்றங்களும் நடைபெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து அன்னை சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் சந்தித்து அன்பைப் பரிமாறி நீண்டகால நட்பை உறுதிப்படுத்திக்கொண்ட தோடு சிந்து சமவெளி நாகரிகத்தையும் - வைகைகரை நாகரிகத்தையும் விளக்கிடும் ஓர் அற்புதமான வரலாற்றுப் பெட்டகமான, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய நூலை அன்னை சோனியா காந்திக்கும், ராகுல் காந்திக்கும் அன்புப்பரிசாக தமிழ்நாடு முதலமைச்சர் வழங்குகிறார். இந்த அற்புதமான வரலாற்று நூலைத் தேர்ந்தெடுத்து பண்டிட் ஜவகர்லால் நேரு குடும்பத்தவருக்கு வழங்குவதில் வரலாற்றுப் பொருத்தமும் உண்டு! “Dicovery of India” -“Gluipses of World History” ஆகிய பிரசித்தி பெற்ற வரலாற்று நூல்களை எழுதிய பண்டிட் ஜவஹர்லால் நேரு குடும்ப வாரிசுகளுக்கு இந்த வரலாற்று நூலை அளிப்பது பொருத்தமானதும். பெருமைக்குரியதுமாகும்.

"புதுடெல்லியில் ஒலித்த உரிமைக்குரலும்! உறவின் நெகிழ்ச்சியும்!!" : பொன்.முத்துராமலிங்கம் புகழாரம்!

சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்னர் தமிழ்நாட்டிற்கு வருகை தந்த ராகுல் காந்தி அவர்கள் இன்றைய சட்டப்பேரவை உறுப்பினரும், மாநில இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களோடு மதுரை மாவட்டம் அவனியாபுரம் கிராமத்தில் “ஜல்லிக்கட்டு” விழாக்களை ஆர்வத்தோடு பார்த்தார். பல மணிநேரம் ரசித்துப் பார்த்துவிட்டு, தமிழர்களின் நாகரிகம்,கலாச்சாரம், வீரம் பற்றிப் பேசியதை தமிழ்நாட்டு மக்கள் மறக்கமாட்டார்கள். அப்படிப்பட்ட தமிழ்நாட்டின் மீது அக்கறையும், தமிழ்நாட்டின் வளர்ச்சியின் மீது ஆர்வமும் கொண்ட பாரம்பரியமுள்ள அந்தக் குடும்பத்திற்கு சிந்து சமவெளி - வைகைச் சமவெளி நாகரிகத்தை விளக்கும் வரலாற்று நூலை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கியது எல்லாவகையிலும் பொருத்தமான கலாச்சாரச் சிந்தனைகளின் பரிமாற்ற நடவடிக்கையாகும்.

இப்படி தமிழ்நாட்டின் முதலமைச்சர் தன் முதல் அரசியல் புதுடெல்லி பயணத்தை அரசியல் யுக்திகள் மூலம் வெற்றிகரமாகவும், பண்பட்ட மென்மையான அணுகுமுறையாலும், இந்திய நாட்டில் வேற்றுமையிலும் நிரந்தர ஒற்றுமை காண முடியும் என்பதை நிரூபித்து இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு கலங்கரை விளக்கமாகியிருக்கிறார் என்பதே அவரது புதுடெல்லி பயணம் நாட்டுக்குத் தெரிவிக்கும் செய்தியும், சிந்தனையுமாகும்.

- பொன்.முத்துராமலிங்கம்,

மதுரை மாநகர் வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர்

நன்றி: முரசொலி

banner

Related Stories

Related Stories