தமிழ்நாடு

62 ஆண்டுகளுக்கு முன்பு கலைஞர் எழுதிய குறிப்பு... ஆய்வில் கிடைத்த புதையல்... மாவட்ட ஆட்சியர் நெகிழ்ச்சி!

62 ஆண்டுகளுக்கு முன்பு கலைஞரின் ஆய்வு குறிப்பேட்டை பார்த்து கரூர் மாவட்ட ஆட்சியர் நெகிழ்ச்சியடைந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

62 ஆண்டுகளுக்கு முன்பு கலைஞர் எழுதிய குறிப்பு... ஆய்வில் கிடைத்த புதையல்... மாவட்ட ஆட்சியர் நெகிழ்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கரூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் நேற்று வேங்காம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆய்வு செய்தார். வழக்கமாக ஆய்வு மேற்கொண்ட பிறகு அதிகாரிகள் ஆய்வுக்குறிப்பு எழுதுவது வழக்கம்.

அந்த வகையில் ஆட்சியர் ஆய்வுக்குறிப்பேட்டில் எழுதும்போது, அவரின் பார்வையில் 1959ம் ஆண்டு அப்போதைய குளித்தலை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் இப்பள்ளியில் ஆய்வு செய்து, அவரது கைப்பட எழுதிய குறிப்பைப் பார்த்து ஆட்சியர் வியந்துபோனார்.

பின்னர் ஆட்சியர் பிரபுசங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், கலைஞர் கைப்பட எழுதிய ஆய்வுக்குறிப்பேட்டை பகிர்ந்து, வேங்காம்பட்டி என்ற கிராமத்தில் ஆட்சியராக எனது முதல் ஆய்வின்போது இந்த புதையலைக் கண்டேன். 1959-ஆம் ஆண்டு குளித்தலை எம்.எல்.ஏ.வாக இருந்த கலைஞர் எழுதிய ஆய்வுக்குறிப்பு இது எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் அந்த ஆய்வு குறிப்பேட்டில், "மு.கருணாநிதி எம்.எல்.ஏ, இன்று வேங்காம்பட்டி மாவட்ட மன்ற ஆரம்பப் பாடசாலையைப் பார்வையிட்டேன். இரண்டு ஆசிரியர்களும் இருந்தார்கள். மொத்த மாணவர்கள் 107ல் இன்று வருகை தந்திருந்தவர்கள் 71 பேர்.

இந்தப் பள்ளிக்கென கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம் மேல் மரங்கள் உளுத்துப் போயிருக்கின்றன. அவை உடனடியாக கவனிக்கப்பட்டால் நலம். ஆசிரியர்கள் நன்கு பணியாற்றுவதாகப் பொதுமக்கள் பாராட்டினார்கள்.

மாணவர்களின் சுகாதாரம் இன்னும் அதிகமாக கவனிக்கப்படுதல் நன்று" என எழுதி, 'அன்புள்ள மு.கருணாநிதி' எனக் கையெழுத்திட்டு, 26.6.1959 என அதில் தேதியிட்டுள்ளார்.

கலைஞர் அவர்கள் தன் கைப்பட எழுதிய இந்த ஆய்வுக் குறிப்பேடு இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் 62 ஆண்டுகளுக்குப் பிறகு கலைஞரின் ஆய்வுக்குறிப்பை பார்த்து பொதுமக்களும், தி.மு.க தொண்டர்களும் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories