
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் அரசு, மாணவர்களின் நலன் மற்றும் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு தமிழ்ப்புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், முதல் தலைமுறை பட்டமளிப்பு (FG) திட்டம், போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகைத் திட்டம், சமூக நீதி விடுதிகள் போன்ற பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டங்களின் தொடர்ச்சியாக, மாணவர்கள் நவீன உலகின் தேவைகளுக்கு ஏற்ப டிஜிட்டல் திறன் பெற “உலகம் உங்கள் கையில்” என்னும் அறிவூட்டும் கருப்பொருளின் கீழ் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்க்கு 20 இலட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்கள்.
அந்த அறிவிப்பின்படி, முதல் கட்டமாக 10 இலட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா இன்று சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மைய வளாகத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் கார்த்தி,” ஒரு பையன் படிக்கிறான் என்றால், சொத்தை வித்தாவது கூலி வேலைக்கு சென்றாவது படிக்க வச்சிட வேண்டும் என்று நினைக்கிற மாநிலம் தமிழ்நாடு. கல்விக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது தமிழ்நாடு அரசு.
நான் சினிமாவிற்கு வரேன் என்று சொல்லும் போது, "எங்க அப்பா சினிமா ஒரு நிலையில்லா தொழில், நீ படிச்சுடு எது கைகொடுக்காவிட்டாலும் உனது படிப்பு கைக்கொடுக்கும்" என்றார். எது சரி, தவறு என்று நமக்கு கற்றுக்கொடுப்பது கல்விதான். கல்வி இருந்தால் நமக்கு எந்த பயமும் இருக்காது" என தெரிவித்துள்ளார்.








