
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் அரசு, மாணவர்களின் நலன் மற்றும் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு தமிழ்ப்புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், முதல் தலைமுறை பட்டமளிப்பு (FG) திட்டம், போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகைத் திட்டம், சமூக நீதி விடுதிகள் போன்ற பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டங்களின் தொடர்ச்சியாக, மாணவர்கள் நவீன உலகின் தேவைகளுக்கு ஏற்ப டிஜிட்டல் திறன் பெற “உலகம் உங்கள் கையில்” என்னும் அறிவூட்டும் கருப்பொருளின் கீழ் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்க்கு 20 இலட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்கள்.
அந்த அறிவிப்பின்படி, முதல் கட்டமாக 10 இலட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா இன்று சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மைய வளாகத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் விஜய் சேதுபதி " ல்வி என்பது எவ்வளவு அவசியமான ஒன்று என்பதை உணர்ந்து தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கல்வி ஒருவருக்கு கிடைப்பதால் அந்த குடும்பமே அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்து செல்கிறது. மாணவர்களின் கல்விக்கு உறுதுணையாக இருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றிகள்.
ஒருவரின் வளர்ச்சி என்பது அவருக்குக் கிடைக்கும் அறிவை அடிப்படையாகக் கொண்டே அமைகிறது. அறிவை வைத்தே அவர்களின் முன்னேற்றம் நிகழ்கிறது. அந்த வளர்ச்சிக்கு எந்தத் தடையும் வந்தாலும், அதை உடைத்து மாணவர்கள் முன்னேறிச் செல்ல வழியை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி கொடுக்கிறது" என தெரிவித்துள்ளார்.








