தமிழ்நாடு

“தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு 95% நோய் எதிர்ப்பாற்றல் உள்ளது”: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

செங்கல்பட்டு தடுப்பூசி ஆலை செயல்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து பிரதமரிடம் முதலமைச்சர் நேரில் வலியுறுத்துவார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

“தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு 95% நோய் எதிர்ப்பாற்றல் உள்ளது”: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை, கிண்டி கிங் அரசு கொரோனா மருத்துவமனைக்கு தனியார் அறக்கட்டளை வழங்கிய 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று ஏராளமான தொண்டு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் உதவியால் மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்த உதவியாக உள்ளது.

மேலும், தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு கிங் அரசு கொரோனா மருத்துவமனையில் 650 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் உள்ளது. தற்போது 224 படுக்கைகள் பயன்பாட்டில் உள்ளது. 384 படுக்கைகள் காலியாக உள்ளது. நேற்றைய தினம் தமிழ்நாட்டில் 54,850 படுக்கைகள் காலியாக உள்ளது என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இறப்பு எண்ணிக்கையை மேலும் குறைக்க முதலமைச்சர், மருத்துவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பர்வர்கள் எண்ணிக்கை 3 மாவட்டங்களில் 100கீழ், 27 மாவடங்களில் 500க்கும் கீழ், ஆயிரத்துக்கு மேல் 2 மாவட்டங்களில் தொற்று உள்ளது.

மேலும்,11 மாவட்டங்களில் தொற்றின் வேகத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவையில் 4 ஆயிரம் அளவிற்கு இருந்த தொற்று இருந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது. தொற்றின் அலை முழுமையாக குறைந்தாலும் தொடர்ந்து முககவசம் அணிதல், தனிமனித இடைவெளி, அடிக்கடி கை கழுவுதல் போன்றவைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

தமிழ்நாட்டில் 1493 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டதில் 77 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆபத்தான நிலையில் இருந்த காவலை திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினால், ராஜுவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். காவலருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தற்போது நலமுடன் உள்ளார்.

அதேபோல் செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனம் குறித்து ஓன்றிய அரசு எவ்வித முடிவெடுக்கவில்லை. முதலமைச்சர் டெல்லி செல்லும்போது பிரதமரிடம் செங்கல்பட்டு தடுப்பூசி ஆலை செயல்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து வலியுறுத்துவார்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் 1 கோடியே 10 லட்சத்து 40 ஆயிரம் தடுப்பூசிகள் மத்திய அரசு வழங்கியுள்ளது. நேற்று வரை 1 கோடியே 3 லட்சத்து 38 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு 75% நோய் எதிர்ப்பு திறன் உள்ளது, இரண்டாவது தவனை தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு 95% நோய் எதிர்ப்பாற்றல் உள்ளது” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories