தமிழ்நாடு

"தடுப்பூசி நிலை குறித்து தெரிவிப்பதே சரி; கையிருப்பில் 1,060 தடுப்பூசிகள்" : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கிங்ஸ் மருத்துவமனையில் கூடுதலாகப் படுக்கைகள் அமைக்கப்பட்டு பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படவுள்ளது அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

"தடுப்பூசி நிலை குறித்து தெரிவிப்பதே சரி; கையிருப்பில் 1,060 தடுப்பூசிகள்" : அமைச்சர் மா.சுப்பிரமணியன்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் தொற்றின் அளவு குறைந்து வருகிறது; பாதிப்பின் அளவை விட குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் போர்க்கால நடவடிக்கைகளால் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று வேகமாகக் குறைந்து வருகிறது. தற்போது அரசு மருத்துவமனைகளில் 45,484 படுக்கைகள் காலியாக உள்ளது.

தென்சென்னையில் மருத்துவ கட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கிங்ஸ் மருத்துவமனையில் கூடுதலாகப் படுக்கைகள் அமைக்கப்பட்டு பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படவுள்ளது.

மேலும், கொரோனா பேரிடர் காலங்களில் மருத்துவ பணியாளர்களுக்கான உணவு மற்றும் தங்கும் இடங்களில் முறைகேடு நடப்பதாகக் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகப் புகார்கள் எழுந்து வந்தது. இதனடிப்படையில் அரசு பணம் முறையாகச் செலவிடப்படுகிறதா என்பது குறித்துக் கடந்த 20 நாட்களாக ஆய்வு மேற்கொண்டோம்.

ஆய்வுக்குப் பிறகு ஒரு நபருக்கு உணவு செலவு தொகை 570 ஆக இருந்தது. இது குறித்து விசாரணை மேற்கொண்டபோது உணவகமே வைத்திருகாதவர்கள் கூட வெளி இடத்தில் உணவை வாங்கி முறைகேடாகப் பணம் பெற்று வந்தது தெரியவந்துள்ளது.

இதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சிறந்த உணவகங்களில் பேசியதன் முடிவாக 500-600 ரூபாய்க்கு மருத்துவ பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உணவின் விலை தற்போது 350-450 ரூபாயாக குறைந்துள்ளது. இதன் மூலம் கடந்த அரசை காட்டிலும் நாள் ஒன்றிற்கு 30 லட்சம் ரூபாய் உணவிலிருந்து சேமிக்கப்படுகிறது.

அதேபோல், முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தை முறையாக செயல்படுத்தாத 40 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவப் பணியாளர்கள் உணவு மற்றும் தங்கும் விடுதிகளில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கொரோனா காலத்திற்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்.

தடுப்பூசிகள் அளவை ஒன்றிய அரசு மக்களிடம் தெரிவிக்கக் கூடாது என கூறியுள்ளது. தடுப்பூசி குறித்து மக்களிடையே உண்மை நிலையைத் தெரிவிப்பதுதான் சரியாக இருக்கும். தற்போது 1,060 தடுப்பூசிதான் கையிருப்பில் உள்ளது.

நீட் தேர்வு பாதிப்பை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழுவின் முதல் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் குழு கூட்டத்திற்குப் பிறகு ஆலோசித்து முடிவு செய்யப்படும் " என்றார்.

banner

Related Stories

Related Stories