தமிழ்நாடு

மக்களின் சிந்தை குளிர்ந்த நல்லாட்சியை நாளும் தருகிறார்; இதுதான் ‘திராவிடியன் மாடல்’ - கி.வீரமணி புகழாரம்!

முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளில் முதலமைச்சரின் அய்ம்பெரும் முத்தான அருந்திட்டங்கள் திராவிடியன் மாடல் என்பதற்கான அரிய அடையாளங்களே இவை என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மக்களின் சிந்தை குளிர்ந்த நல்லாட்சியை நாளும் தருகிறார்; இதுதான் ‘திராவிடியன் மாடல்’ - கி.வீரமணி புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 98 ஆம் ஆண்டு பிறந்த நாளில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த முத்தான அய்ம்பெரும் அருந்திட்டங்கள் - ‘திராவிடியன் மாடல்’ என்பதற்கான அடையாளங்களாகும். பாராட்ட மனம் இல்லாதவர்கள் அமைதி காத்தால், மரியாதையாவது மிஞ்சும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

“முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 98 ஆம் ஆண்டு பிறந்த நாளில் முத்தான அய்ந்து அறிவிப்புகளை ஓய்வறியா உழைப்பின் உருவமான நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருப்பது அனைத்துத் தரப்பு மக்களாலும் ஆரவாரத்துடன் வரவேற்கப்படவேண்டிய அருமையான செயல்திட்டங்களாகும்!

அய்ம்பெரும் அருமையான செயல் திட்டங்கள்!

1. சென்னையில் ‘கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்’ வளாகத்தில் ரூபாய் 250 கோடி செலவில், 500 படுக்கைகள் வசதிகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை (Super Multi Speciality Hospital) உருவாக்குதல்.

2. சங்கம் வளர்த்த மதுரை - திராவிடப் பண்பாட்டுக்கான ஊற்றுகளில் முக்கியமானது. மதுரையும், அதன் கீழடி போன்ற ஆய்வுக்களங்களும் என்ற நிலையில், அந்த மதுரை மாநகரில் மக்கள்தம் அறிவை விரிவு செய்து அகண்டமாக்கும் வகையில், கலைஞர் பெயரில் ‘கலைஞர் (நினைவு) நூலகம்‘ ஒன்றை 70 கோடி ரூபாய் செலவில் அமைத்தல்.

3. இயல், இசை, நாடகம் - இவற்றில் சிறந்து சாதனை படைக்கும் எழுத்தாளர்களை ஊக்குவித்து, சிறப்பிக்கும் வகையில், ‘இலக்கிய மாமணி விருது’ உருவாக்கப்பட்டு, தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் மூன்று பேருக்கு ஆண்டுதோறும் இந்த விருதும், பாராட்டுச் சான்றிதழும், அய்ந்து லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படுதல் (கனவு இல்லமும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இலக்கியத்தில் தேசிய விருது பெற்றவர்களுக்கு வழங்கல்).

4. வேளாண் துறையில், காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் தங்களது அறுவடை நெல்லை மழை மற்றும் இயற்கைப் பேரிடர்களிலிருந்து கொள்முதலுக்குமுன் பாதுகாக்க முடியாமல், சேதம் அடையும் நிலை காரணமாக மனமுடைந்து, வெந்து, நொந்து சாகும் நிலையை மாற்றி, திருவாரூரில் ‘நெல் கொள்முதல் முனையம்‘ 24 கோடி ரூபாய் செலவில், சேமிப்புக் கிடங்குகள் மற்றும் அறுவடைக்குப் பின் தானியங்களை - பயிறு வகைகளை சரியான முறையில் உலர வைக்க உதவிடும் உலர்விப்பான்களை பல முக்கிய ஊர்களில் பரவலாக ஏற்படுத்துதல்.

5. மகளிர் நலன் கருதி, பதவியேற்ற முதல் நாளே அறிவித்த மகளிருக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணச் சேவை அறிவிப்பை மேலும் விரிவாக்கி, மாற்றுத் திறனாளிகளுக்கும், திருநங்கையர்களுக்கும் அதனை நீட்டித்து அறிவிப்பு.

மக்களின் சிந்தை குளிர்ந்த நல்லாட்சியை நாளும் தருகிறார்; இதுதான் ‘திராவிடியன் மாடல்’ - கி.வீரமணி புகழாரம்!

தி.மு.க. ஆட்சி, மக்கள் நலப் பாதுகாப்புக்கு எடுத்துக்காட்டான திராவிட முன்மாதிரி ஆட்சி!

முன்பு கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது பல நலத் திட்டங்களை அறிவித்தாரே - அதே பாணியில், தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் வகையிலும், தமிழ்நாட்டின் பண்பாடு - கல்வி அறிவு, இலக்கியச் செறிவு, வேளாண் மக்களின் துயர் துடைப்பு, இயலாதோர் அனைவருக்கும் இலவசப் பயணம் என்பனவற்றை அறிவித்து, நடைபெறும் தி.மு.க. ஆட்சி, மக்கள் நலப் பாதுகாப்புக்கு எடுத்துக்காட்டான திராவிட முன்மாதிரி (Dravidian Model) ஆட்சி என்பதற்கேற்ப முதலமைச்சர் நாளும் செயல்பட்டு - ஒரு மாதம்கூட முழுமையாக நிறைவடையாத நிலையில், மக்கள் மனதில் நிலையானதொரு இடத்தைப் பிடிப்பதில் பெருவெற்றி பெற்றுள்ளார்!

அவரை எதிரியாகக் கருதுவோரைக்கூட அவர் எதிரியாக எவரையும் கருதாத பரந்தவிரிந்த மனம் படைத்த பகுத்தறிவாளர் - திராவிடச் செம்மலாக திக்கெட்டும் பாராட்டு மழை பொழியும் நிலையில், அடக்கத்தோடு அவற்றை ஏற்று, அடுத்து என்ன? அடுத்து முடிக்கவேண்டிய பணி வரிசைகளைப்பற்றியே சிந்தித்துச் செயலாற்றி, வரலாற்றில் நாளும் புதிய பொன்னேடுகளை இணைத்து வருகிறார், மிகுந்த அடக்கத்துடன்.

மக்களின் சிந்தை குளிர்ந்த நல்லாட்சியை நாளும் தருகிறார்

கரோனா தொற்று ஒழியும் வரை அவரது முழு கவனத்தையும் அதற்கே செலவழிக்கும் நிலையில், இப்படி பல்துறை சாதனை அறிவிப்புகள் இந்த அரசால் அறிவிக்கப்பட்டு வருவதும், முதலமைச்சர் குறைதீர் திட்டங்களையும் விடாமல் நிறைவேற்றி கொடுத்த வாக்குறுதிகள் நீர்மேல் எழுத்தல்ல - பாறையில் செதுக்கப்பட்டவை என்பதுபோல செயற்படுத்தி, செந்தமிழ்நாட்டு மக்களின் சிந்தை குளிர்ந்த நல்லாட்சியை நாளும் தருகிறார்!

காரணம், இது பெரியாரைத் துணை கொண்ட, அறிஞர் அண்ணாவையும், கலைஞரையும் ஆட்சியின் எடுத்துக்காட்டுகளாக்கி வழிகாட்டுகிறார்!

வெற்று விமர்சன விரியன்களுக்கு...

இதிலும் குற்றம் காண முயலும் சிறுமதியாளர்கள் சிலர் இருக்கவே செய்கிறார்கள்.

அந்த வெற்று விமர்சன விரியன்களுக்கு இன்று ஏடுகளில் வந்துள்ள ஒரு செய்தியை அவர்களது பழுதுபட்ட பார்வைக்கு வைக்கிறோம்.

2018 இல் - 3 ஆண்டுகளுக்குமுன்பே மதுரை தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் (கிமிமிவிஷி) சிறப்பு மருத்துவமனை அறிவிப்பு.

இன்னமும் நிதி ஒதுக்கீடே தெளிவாக்கவில்லையே!

2019 இல் அடிக்கல் நாட்டு விழா - மூன்று ஆண்டுகளில் தேர்தல் நேரத்தில் பிரதமரும் மற்ற மத்திய அமைச்சர்களும் மதுரை ‘‘விஜயம்‘’ பலமுறை என்றாலும், தோப்பூர் வெட்ட வெளியாகவே இருக்கிறது. மருத்துவமனை அடிக்கல்லைத் தவிர ஒன்றுமில்லை!

ஒரு செங்கல்லைக் காட்டிப் பிரச்சாரம்

அதனால்தான் தேர்தல் நேரத்தில் சுறுசுறுப்புடன் பிரச்சாரம் செய்த தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளரும், திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியில் வரலாற்று வெற்றியைப் பெற்ற செயல்வீரருமான உதயநிதி ஸ்டாலின் ஒரு செங்கல்லைக் காட்டிப் பிரச்சாரம் செய்தார்.

அதையெல்லாம்பற்றியும், ஏழு ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியின் அவலம்பற்றியும் உலகமே பேசிடும் நிலைபற்றியும் கவலைப்படாமல், தமிழகத்தில் முதலமைச்சர் பொறுப்பேற்று ஒரு மாதம்கூட நிறைவடையாத நிலையில், வீண் விதண்டாவாதங்களில் இறங்கலாமா? இது கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கற்கோட்டையின்மீது கல்லெறிவது போன்ற வேடிக்கைச் செயல் அல்லவா!

பாராட்ட மனமில்லாதவர்கள் மவுனத்தைக் கடைப்பிடித்தால் அவர்களும்கூட உலகத்தார் கண் முன்னே அறிவாளிகளாகக் கருதப்படும் லாபம் உண்டு - அதை மறக்கவேண்டாம்!”

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories