
பா.ஜ.க ஆளும் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் பெண்கள் மீதான வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. பெண்கள் மீது நடக்கும் குற்றச்சம்பவங்களும் இம்மாநிலங்களில்தான முதலிடத்தில் இருக்கிறது என்று புள்ளி விவரங்களும் கூறுகிறது.
இந்நிலையில் பா.ஜ.க ஆளும் அரியானாவில் ஓடும் வேனில் இளம் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசிச்சென்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி அருகே பரிதாபாத்தில், கல்யாண்புரி மெட்ரோ ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு 25 வயது கொண்ட இளம் பெண் ஒருவர் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார்.
ஆனால் பேருந்து வர தாமதமானதால் , அந்த வழியாக வந்த வாடகை வேனில் லிஃப்ட் கேட்டு சென்றுள்ளார். பிறகு பெண்ணை உரிய இடத்தில் வேன் ஓட்டுநர் இறக்கி விடாமல், குருகிராம் அருகே மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு, வேன் ஓட்டுநர் மற்றும் வாகனத்தில் இருந்த இருவர் இளம் பெண்ணை அடித்து துன்புறுத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பிறகு அப்பெண்ணை சாலையில் வீசி சென்றுள்ளனர்.
இதையடுத்து, வலியுடன் அப்பெண் தனது சகோதரிக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் அவர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு, மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்கு டெல்லி கொண்டு செல்ல கூறியுள்ளனர். தற்போது அந்த பெண் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அங்கு உடலில் 12 இடங்களில் தையல் போடப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. படுகாயம் அடைந்துள்ள அவர் இன்னும் வாக்கு மூலம் அளிக்கும் நிலமைக்கு திரும்பவில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொடூர சம்பவத்தை அடுத்து வேன் ஓட்டுனர் உள்ளிட்ட இருவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






