தமிழ்நாடு

நீட் தேர்வு பாதிப்பை ஆய்வு செய்ய உயர்நிலைக்குழு... சமூகநீதியை நிலைநாட்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு பாதிப்பை ஆய்வு செய்திட ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நீட் தேர்வு பாதிப்பை ஆய்வு செய்ய உயர்நிலைக்குழு... சமூகநீதியை நிலைநாட்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு இதுவரை உருவாக்கிய பாதிப்புகள், அவற்றைச் சரிசெய்யும் வழிமுறைகள், மாற்று சேர்க்கை முறை - சட்ட வழிமுறைகளை அரசுக்குப் பரிந்துரை செய்திட ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்படுகிறது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு :-

“மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வு முறையால் நமது மாநிலத்தில் உள்ள கிராமப்புற, நகர்ப்புற ஏழை மாணவர்கள், எளிய மாணவர்கள், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தமிழ் வழியில் கல்வி பயில்வோர் போன்ற நம் சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்குக் கடந்த சில ஆண்டுகளாக மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டு வரும் நிலை உள்ளதாக கல்வியாளர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சமூக நீதிக்கு எதிரான இந்த நீட் தேர்வு முறை கைவிடப்பட வேண்டும் என்றும், தலைவர் கலைஞரின் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி 12-வது வகுப்பு இறுதித் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே மருத்துவக் கல்லூரி இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி அதற்கான பல கட்டப் போராட்டங்களைத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடத்தி வந்துள்ளது.

சமூக நீதியை நிலைநாட்டும் வரலாற்றுக் கடமை தமிழ்நாட்டிற்கு எப்போதும் உண்டு. இந்தக் கடமையைத் தொடர்ந்து நிறைவேற்றும் வகையில் நீட் தேர்வு முறையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அகற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு உறுதி பூண்டுள்ளது.

நீட் தேர்வு பாதிப்பை ஆய்வு செய்ய உயர்நிலைக்குழு... சமூகநீதியை நிலைநாட்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இந்த நீட் தேர்வு முறை அந்த சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்குக் கடந்த சில ஆண்டுகளாக பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதா என்பது குறித்தும், அவர் பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவற்றைச் சரிசெய்யும் வகையில் முறைக்கு மாற்றாக அனைவரும் பயன்பெறத் தக்க வகையிலான மாணவர் சேர்க்கை முறைகளை வகுத்து அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றியும் அவற்றுக்கான சட்ட வழிமுறைகள் பற்றியும் முழுமையாக ஆராய்ந்து அரசுக்குப் பரிந்துரை அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய உயர்நிலைக் குழு அமைக்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories