தமிழ்நாடு

தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்துக - மோடியிடம் வலியுறுத்திய மு.க.ஸ்டாலின்!

தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்கவேண்டும் என பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்துக - மோடியிடம் வலியுறுத்திய மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்கவேண்டும் என பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.

தமிழக முதலமைச்சராக நேற்றுப் பதவியேற்ற மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு, ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், “கொரோனா பரவலை தடுக்க எத்தனையோ நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டாலும், தற்போது மருத்துவ தேவைக்கான ஆக்சிஜன் தேவையில் ஏற்பட்டுள்ள கடுமையான நெருக்கடியை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

தமிழகத்தில் தற்போது தினமும் 440 டன் ஆக்சிஜன் நுகரப்படுகிறது. இன்னும் 2 வாரங்களில் அதன் அளவு மேலும் 400 டன் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதன்படி தமிழகத்தின் ஆக்சிஜன் தேவையின் அளவு 840 டன் ஆக அதிகரிக்கும்.

ஆனால் துரதிருஷ்டவசமாக, தேசிய ஆக்சிஜன் திட்டத்தில் தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் அளவு 220 டன் ஆக உள்ளது. இதுகுறித்து தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்த மேம்பாட்டுத் துறை அதிகாரிகளுடன் 1 மற்றும் 2-ந்தேதிகளில் ஆலோசனை நடத்தினோம். அதில், குறைந்தபட்சம் 476 டன் அளவு மருத்துவ ஆக்சிஜனை உடனடியாக அளிப்பதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டது.

ஆனால் இதற்கான உத்தரவு இன்னும் வழங்கப்படவில்லை. எனவே மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வினியோகம் செய்வதில் கடுமையான சிக்கல் எழுந்துள்ளது. தமிழகத்தில் ஆக்சிஜன் இருப்பு நிலை மிக மிக மோசமாக உள்ளது.

செங்கல்பட்டில் 2 நாட்களுக்கு முன்பு சமீபத்தில் துரதிருஷ்டவசமாக 13 பேர் மரணம் சம்பவித்துவிட்டது. இந்த கடினமான சூழ்நிலையில் தமிழகத்திற்கு முழு ஆதரவு அளித்து, ஆக்சிஜன் கிடைப்பதில் திருத்தப்பட்ட உத்தரவு அளிக்கப்படுவதற்கு தகுந்த நடவடிக்க எடுக்க வேண்டும்.

மேலும், 20 ஐ.எஸ்.ஓ. கிரயோஜெனிக் கண்டெய்னர்கள் மற்றும் ரெயில்கள் மூலம் தமிழகத்திற்கு ஆக்சிஜன் வரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும். தேசத்தை கொரோனா தொற்றில் இருந்து காப்பாற்றும் உங்களின் அயராத முயற்சிக்கு எனது முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் அளிப்பேன் என்று நான் உறுதி அளிக்கிறேன்.” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று பிரதமர் மோடி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தொலைபேசி வாயிலாக கொரோனா பரவல், தடுப்பு நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

அப்போது, கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக, புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பைக் கோரிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு துணை நிற்கும் என உறுதியளித்தார்.

மேலும், தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கையான ஆக்சிஜன் தொடர்பாக, மாநிலத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்தக் கோரிக்கையை உடனடியாகப் பரிசீலிப்பதாக உறுதியளித்த பிரதமர் மோடி, கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக பரிசோதனைகள் தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகளவில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

banner

Related Stories

Related Stories